பள்ளிக்கு டூவீலர்களில் பயணித்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகளின் பதினைந்தரை பவுன் நகையை, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் வழிப்பறி செய்துவிட்டுச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது ஏமூர் சீத்தப்பட்டி. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிமேகலை என்பவர் பணியாற்றி வருகிறார். அதோடு, இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக ராமப்பிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச புத்தகங்களை வழங்க பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையும், இடைநிலை ஆசிரியை ராமப்பிரியாவும் பள்ளிக்கு இரண்டு டூவீலர்களில் பயணித்திருக்கிறார்கள். இருவரும் ஏமூர் அருகே உள்ள சீத்தப்பட்டி மாரியம்மன் கோவிலை கடக்கும் போது, அவர்களின் பின்னே இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்மநபர்கள் வந்திருக்கின்றனர்.

ஆசிரியைகளின் வாகனங்களுக்கு முன்வு பைக்கை திடீரென குறுக்காக நிறுத்திய இருவரும், கத்தியை காட்டி மிரட்டி, ராமப்பிரியா அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டனர். மேலும், தலைமை ஆசிரியை மணிமேகலையிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் தரும்படி மிரட்டியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியை தங்க நகையை கொடுக்க மறுத்ததால், அவர் முகத்தில் கத்தியால் தாக்குதல் நடத்தி, மணிமேகலை அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் இரண்டு ஆசிரியைகளின் தங்கச்சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்துச்சென்றதை கேள்விபட்ட அந்தப் பகுதி மக்கள், ஸ்பாட்டில் குவிந்தனர். இளைஞர்கள் சிலர், ஆசிரியைகளின் தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்ற மர்மநபர்களை பிடிக்க பின்னே சென்றனர். ஆனால், அங்கிருந்த அரைகிலோமீட்டர் தூரத்திலேயே கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசியநெடுஞ்சாலை வருவதால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த சாலையில் இரண்டு மர்மநபர்களும் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து, ஆசிரியைகள் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் ஆய்வு செய்ததில், ஆசிரியைகளிடம் கைவரிசை காட்டிய இரண்டு மர்ம நபர்களும் வாகனத்தில் போகும் காட்சி பதிவாகியுள்ளதை கைப்பற்றினர். இரண்டு ஆசிரியைகளும், 'அந்த இருவரும்தான் தங்கள் நகைகளை பறித்தவர்கள்' என்று சொல்ல, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். பட்டப்பகலில், நட்டநடு சாலையில், ஆள்நடமாட்டம் இருக்கும் நேரத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை வழிமறித்து, அவர்களின் தங்கச் சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/37qSFUB
0 Comments