சென்னையை அடுத்த திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 26- ம் தேதி கொடுங்கையூரைச் சேர்ந்த ரக்ஷணா(21) என்பவருடன் ஜெயராமனுக்கு திருமணம் நடந்தது. கடந்த 19-ம் தேதி ஜெயராமன் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ரக்ஷணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

வேலை முடிந்து ஜெயராமனின் அம்மா வசந்தா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் வசந்தா கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரக்ஷணா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வசந்தா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ரக்ஷணாவை மீட்டு முதலுதவி செய்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து திருவேற்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ரக்ஷணாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரக்ஷணாவின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோதுதான் அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோ போலீஸாரிடம் சிக்கியது. அதில் அவர் தன்னுடைய இந்த முடிவுக்கான காரணத்தை கண்ணீர்மல்க வீடியோவாக பதிவு செய்திருந்தார். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரக்ஷணாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்துவருகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ரக்ஷணா பேசிய வீடியோவில், `` ஹாய் டாடி, நீங்கள் நினைச்சிட்டு இருக்கீங்க, திருமணத்துக்கு நான் பிடிச்சு ஒத்துகிட்டேன் என்று. அது உண்மையில்ல. அன்னைக்கு நீங்க ரொம்ப ஸ்ட்ரஸில் இருந்தீங்க. அதனால்தான் பிடிச்சுருக்குன்ணு சொன்னேன். ஆனா எனக்கு சுத்தமா பிடிக்கல. பிடிக்காத வாழ்க்கைத்தான், ஆனாலும் சந்தோஷமாக ஏத்துக்கிட்டேன். எனக்கு பிடிக்காதுனு எல்லோருக்கும் தெரியும். எனக்கு பிடிச்சது எது, பிடிக்காததது எது என்று உங்களுக்குத் தெரியும்.
இப்போ கூட உங்கள எல்லாம் பாக்கணும்ன்னு தோணுது. பாப்பாவையும் தம்பியையும் நல்லா பார்த்துக்கோங்க. தம்பிக்கு நிறைய விஷயம் பிடிக்கும். ஆனா அத உங்கிட்ட சொல்ல பயப்படுவான். தம்பி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். நான் ரொம்பவே மிஸ் பண்ணிட்டுதான் இருக்கேன். இவங்களை ஏத்துக்கவ தோண மாட்டுக்குது எனக்கு கஷடமா இருக்குது... கத்தி அழ கூட முடியல டாடி என் மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியல" என்பதோடு வீடியோ முடிவடைகிறது.
ரக்ஷணாவின் அம்மா உஷா, திருவேற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `எனது கணவர் சம்பத், டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களது மூத்த மகள் ரக்ஷணாவை, திருவேற்காட்டை சேர்ந்த ஜெயராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 10.12.2020-ல் புதுமண தம்பதிகளை திருவேற்காடு வீட்டில் விட்டுவிட்டு சென்றோம். 19.12.2020-ம் தேதி ரக்ஷணா எங்களிடம் நல்லமுறையில் பேசினார். ஆனால், அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் ரக்ஷணா இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. திருவேற்காட்டிற்கு சென்று பார்த்தபோது படுக்கையில் ரக்ஷணா இறந்தநிலையில் காணப்பட்டாள். துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறினார்கள். இறப்பு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரக்ஷணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பதிவு செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
from Latest News https://ift.tt/37DCz9G
0 Comments