வளர்ப்புத் தந்தையால் மிரட்டி சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டு கருவுற்ற 13 சிறுமிக்கு, ஹெச்.ஐ.வி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறுமியை வதை செய்தும், சிறுமியின் தாய்க்கும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படக் காரணமான வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றபோது, அங்கு கணவர் ஆதரவில்லாமல் 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், சில வருடங்களுக்கு முன் கல்லுப்பட்டி பகுதிக்கு வந்து வசிக்க ஆரம்பித்தனர். சமீபத்தில் அப்பெண்ணின் 13 வயது மகளுக்கு உடல் நலமில்லாமல் போயுள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி கருவுற்ற விஷயம் தெரிந்து மருத்துவர்களும் தாயும் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு நேர்ந்ததை சொல்ல பயந்த சிறுமியிடம் ஆறுதல் கூறி மெல்ல மெல்ல விசாரித்தபோதுதான், தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் வளர்ப்பு தந்தை ராமமூர்த்தி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வதை செய்தது தெரிய வந்தது.
இந்த கொடுமையை பற்றி சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியை மதுரை அரசு மருத்திவமனையில் சேர்த்தனர். தாய், வளர்ப்புத் தந்தை மற்றும் சிறுமியின் ரத்த மாதிரியை அங்கு சோதனை செய்தனர்.
அப்போது மற்றொரு பேரதிர்ச்சியாக ராமமூர்த்தி, சிறுமியின் தாய், சிறுமி ஆகியோருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
வளர்ப்புத் தந்தையின் முறை தவறிய நடத்தையாலும் வன்முறையால் ஒன்றும் அறியாத 13 வயது சிறுமி கருவுற்றும், ஹெச்.ஐ.வி பாதிப்புக்கும் ஆளாகியுள்ளார்.
தற்போது அவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவருக்கும், தாய்க்கும் மன நல ஆலோசனையும், உயர் தர மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/3t7IIUC
0 Comments