தெலங்கானாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வலியில் வந்த பெண்ணிற்கு வயிற்று வலி மருந்துகள் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அருகிலேயே சாலை ஓரத்தில் குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அச்சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிசு மரணங்களைக் குறைப்பதில் தெலங்கானா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், தற்போது நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நண்பகலில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல் மல்கஜகிரி மாவட்டத்தின் ஜவகர் நகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்ப்பமாக இருந்த அப்பெண் வயிற்று வலியின் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று இருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், வயிற்று வலிக்கான மருந்துகளை கொடுத்து அப்பெண்ணை அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே, சாலையோரத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார். ஆனால் பிறந்த சில நொடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
சாலையில் நடந்துச் சென்ற ஒருவர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் இச்சம்பவம் குறித்து கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் அவர், 'பல்வேறு அவசர சிகிச்சை பகுதிகள் இந்த மருத்துவமனையில் உள்ளன. ஆனால் ஒரு மருத்துவர், செவிலியர் கூட அங்கு இல்லை. இதனால் நான் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். ஆனால் அவர்களும் வரவே இல்லை' என்று கூறியுள்ளார்.
ஜவகர்நகர் மேயர் எம். காவியா, அந்த மருத்துவமனையை பார்வையிட்டு, 'இப்பகுதியில் உள்ள வசதிகளை மேம்படுத்துவேன், மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் அளிக்கப்படும்' என உறுதியளித்தார்.
மேட்சல் துணை மாவட்ட மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரியான மருத்துவர் என். நாராயண ராவ் தெரிவிக்கையில், 'மேட்சலை சேர்ந்த லட்சுமி என்ற பெண் சிகிச்சைக்கு வந்தபோது, அவர் பிரசவிக்க இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் அறியவில்லை. மேலும் அவர் கர்ப்பம் தரித்து எட்டு மாதம்தான் ஆகிறது என்பதால் அவர் குழந்தையை பிரசவிக்க இருப்பதாக அவர்களுக்குத் தோணவில்லை' என்றிருக்கிறார். அவருக்கு உடல்நிலை பாதிப்பால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'அந்த மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவர், அவரது குடும்பச் சூழலின் காரணமாக அன்று பணிக்கு வரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றிருக்கிறார்.
from Latest News https://ift.tt/3dlbSbE
0 Comments