https://gumlet.assettype.com/vikatan/2021-05/4b85c71e-299d-4075-a2b4-333ec0c57759/acress.jpgமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு - புகாரளித்த நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை தெரிவித்துள்ள பாலியல் புகார், பூதாகாரமடைந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில்,`` என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் நான் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரை விசாரிக்கும்படி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

சாந்தினி

அதன்பேரில் விசாரணை நடத்திய அடையாறு அனைத்து மகளிர் போலீஸார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 417, 376, 313,323, 506(1), ஐ.டி சட்டம் 67ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மட்டுமல்லாமல் பரணி என்பவர் மீதும் நடிகை சாந்தினி குற்றம் சாட்டியிருந்தார். அதனால் பரணி மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் நடிகை சாந்தினி, பாலியல் புகாரளித்திருப்பதால் மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: `மூன்று தடவை கருக்கலைப்பு; சொல்லமுடியாத தொல்லை’ -முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்

இதுகுறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் தகவல் அறிந்தோம். அவர்கள் கூறியதாவது ,``நடிகை சாந்தினி கொடுத்த புகார், ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், பரணி ஆகியோர் மீது எப்ஃ.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிகண்டன், தனது ஆபாசப் படத்தை டெலிகிராமில் அனுப்பியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகை சாந்தினியிடம் மணிகண்டன், பரணி ஆகியோர் பேசிய ஆடியோ, மெஸேஜ்களை சைபர்க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சாந்தினி, வழக்கறிஞர் சுதன்

சைபர் க்ரைம் போலீஸார் அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும். இதற்கிடையில் நடிகை சாந்தினி, தன்னுடைய புகாரில் மூன்று தடவை கருக்கலைப்பு நடந்தததாக குறிப்பிட்டிருந்தார். அவருக்கு கருக்கலைப்பு நடந்த மருத்துவமனை, மெடிக்கல் ரிப்போர்ட்களையும் ஆய்வு செய்துவருகிறோம். நடிகை சாந்தினியை மருத்துவ பரிசோதனை செய்து அந்த அறிக்கையும் பெற நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஆதாரங்கள் கைக்கு வந்ததும் சட்டப்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பரணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அந்தக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News https://ift.tt/3yShNyX

Post a Comment

0 Comments