https://gumlet.assettype.com/vikatan/2021-08/3fb5f6e1-6d93-4b23-8edf-6e8937aed28d/_________________________10_.jpg`விவசாயிகளுக்கு நிம்மதி!' - டி.கே.எம்- 9 ரக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசு

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி.கே.எம் -9 ரக நெல்லை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல், டி.கே.எம்-9 ரக நெல்லை சாகுபடி செய்த விவசாயிகளை நிம்மதி அடைய செய்துள்ளது. சமீபகாலமாக, இந்த ரக நெல், நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால், தனியார் வியாபாரிகள் மூலமாக, கேரளாவிற்கு அனுப்பி வந்தார்கள். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பிரச்னையின் காரணமாக, இதனை கேரளா கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்தார்கள். இந்நிலையில்தான் தற்போது தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் அறிவிப்பு விவசாயிகளை ஆறுதலை அடைய வைத்துள்ளது.

நெல் கொள்முதல்

Also Read: பதுக்கி வைக்கப்பட்ட ₹2 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள்; அதிரடியாகப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் குறுவை பட்டத்தில் டி.கே.எம்-9 ரக நெல் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் இந்த நெல் ரகத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வந்தார்கள். காரணம் குறுவை பட்டத்தில் மற்ற நெல் ரகங்களை காட்டிலும் டி.கே.எம்-9 ரக நெல் அதிகளவு விளைச்சல் கொடுக்கக்கூடியது. ஏக்கருக்கு 40 மூட்டைகளுக்கு மேல் மகசூல் கொடுக்கும். மற்ற நெல் ரகங்கள் போலவே இதுவும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டது.

காலப்போக்கில் இதில் பிரச்னை ஏற்பட துவங்கியது. இந்த நெல் ரகத்தின் அரிசி, மோட்டாவாகவும் பழுப்பு நிறத்திலும் இருப்பதால், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இந்த அரிசியை வாங்க பொதுமக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி,கே.எம்-9 ரக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இதனை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதனை அறுவடை செய்து விற்க முடியாமல் தவித்தபோது, அவர்களுக்காக பசுமை விகடன் களத்தில் இறங்கியது.அப்போதைய தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பல முறை பேசி, வாதாடி, அந்த ஆண்டு, டி.கே.எம்-9 ரக நெல்லை கொள்முதல் செய்ய வைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் குறுவை பட்டம் தொடங்குவதற்கு முன்பே, டி.கே.எம்-9 ரக நெல்லை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டாம் என அரசு அறிவித்தது.

நெல் கொள்முதல்

மற்ற நெல் ரகங்களைவிட இது அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய நெல் ரகமாக இருந்தும் கூட, வேறு வழியில்லாமல் பெரும்பாலான விவசாயிகள், மிகுந்த வேதனையுடன் இதனை கைவிட்டார்கள். ஆனாலும் கூட திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மயிலாடுதுறை மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய விவசாயிகள் இதனை தொடர்ச்சியாக சாகுபடி செய்து வந்தார்கள். தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இந்த நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டது. அந்த விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நம்பியிருக்கவில்லை.

தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தார்கள். இந்த நெல் ரக அரிசியை, கேரளா மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதால், அங்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் கொரோனா பிரச்னையின் காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் டி.கே.எம்-9 ரக நெல்லை கேரளா கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை வியாபாரிகள் வாங்க மறுப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்தார்கள். வேறு வழியில்லாததால் தமிழக அரசு தங்களுக்கு கை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதனைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கண்ணீருடன் வலியுறுத்தினார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்

Also Read: நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

இந்த நெல் ரகத்தை சாகுபடி செய்து, அறுவடை செய்து வைத்துள்ள விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு, தற்காலிகல் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. தற்போது டி.கே.எம்-9 ரக நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய செய்யலாம் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ராஜாராமன் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ``இனி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி.கே.எம் - 9 ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு தனியாக கணக்கு பராமரித்து, தங்கள் மண்டலங்களிலேயே அரைவை செய்து, பொது விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளார்கள்.



from Latest News https://ift.tt/3Bui8Ij

Post a Comment

0 Comments