திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (34). இவரின் கணவர் பெயர் முனுசாமி. இந்த தம்பதிக்கு ரட்சகன் (2), காமேஷ் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி பணிக்குச் சென்று விட்ட வீடு திரும்பும் போது ஐஸ்வர்யாவின் கணவர் முனுசாமி ஆவடி ரயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன ஐஸ்வர்யா, கடந்த சில தினங்களாகவே சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். கணவர் முனுசாமி இறந்து ஒரு வாரக் காலமே ஆகும் நிலையில், ஐஸ்வர்யா ஏற்கெனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் யாரிடமும் பேசாமல் சோகமாக மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர், திடீரென தன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பச்சையம்மன் கோயில் கிணற்றுக்குச் சென்றிருக்கிறார். கிணற்றின் அருகே தங்களை அழைத்துக் கொண்டு சென்றதைக் கண்டு பயத்தில் நடுங்கிப் போன சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டிருக்கின்றனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத ஐஸ்வர்யா சிறுவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி விட்டு, தானும் குதித்திருக்கிறார்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிணற்றுப் பகுதிக்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், துரிதமாகச் செயல்பட்டு சிறுவர்கள் இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால், ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற முடியாததால் உடனடியாக ஆவடி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மூலமாக ஐஸ்வர்யாவைப் பத்திரமாக மீட்டு முதலுவதி செய்து காப்பாற்றினார்கள்.
அதையடுத்து, அங்கு விரைந்த திருமுல்லைவாயல் போலீஸார் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஐஸ்வர்யா, "என் கணவர் தான் என்னைக் குழந்தைகளுடன் கிணற்றில் குதிக்கச் சொன்னார். அவர் தான் எங்களை அழைத்துச் சென்றார்" என்று கூறினார். ஐஸ்வர்யாவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், அவருக்கு அறிவுரை கூறி விட்டு பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு அவரது உறவினர்களை வலியுறுத்தி விட்டுச் சென்றனர்.
இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: `மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை; தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதி!'
from Latest News https://ift.tt/3m8vlRf
0 Comments