https://gumlet.assettype.com/vikatan/2021-09/c0e3b685-5ae6-47b4-808b-259c656aed11/108aeebe_4f97_4cbe_91dc_dcbca4bc5fe7.jpgவீடு கேட்டு வாட்ஸ்அப்பில் மனு அனுப்பிய மாணவர்; குடும்பத்தையே நெகிழவைத்த தஞ்சை ஆட்சியர்!

தஞ்சாவூர் அருகே ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், வீடு கட்ட பட்டா, இலவச பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான உதவி கேட்டு கலெக்டரின் வாட்ஸ்அப் நம்பருக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் மீது உடனடியாகச் செயலாற்றி, அந்த மாணவரின் குடும்ப நிலையை அறிந்துகொண்ட கலெக்டர், பட்டாவும், வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையையும் எடுத்து அந்த மாணவரை நெகிழ வைத்துள்ளார்.

கலெக்டரிடம் உதவி கேட்ட சதீஸ்குமார் மற்றும் சுரேஷ்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழப்பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிகிளாஸ் (55). இவரின் மனைவி செல்வமணி (45). இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என நான்கு பிள்ளைகள். கடைசி மகனான சதீஸ்குமார், அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தங்கள் குடும்பத்துக்கு இருக்க இடமும், வீடு கட்ட உதவியும் கேட்டு தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார் சதீஸ்குமார்.

அதில், ``என் அம்மா பிறந்த ஊரான ஒக்கநாடு கீழையூரில் உறவினர் ஒருவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறோம். நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, சொந்தமாகக் குடிசை கூட இல்லை என்று சுற்றியிருப்பவர்கள் ஏளனமாகப் பேசுகின்றனர். தினம் சொல்லில் அடங்காத அவமானங்களைச் சந்திக்கிறோம். நான்கு பிள்ளைகளுடன் என் பெற்றோர் படும் துயரம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது சார். நீங்கள் எங்களுக்கு பட்டா ஏற்பாடு செய்து கொடுத்து, வீடு கட்டித்தர ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா? இதை நான் இலவசமாகக் கேட்கவில்லை. இன்று எனக்கு இது நடந்தால், நாளை நான் படித்து ஆளாகி நிச்சயம் எங்களைப் போன்ற ஒருவருக்காவது வீடு கட்டித் தருவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சதீஸ்குமார் குடும்பம்

Also Read: கைவிடாத தஞ்சை கலெக்டர், கண்ணீரைத் துடைத்த விகடன்; நெகிழும் சிறுவன்!

சதீஸ்குமார் குறிப்பிட்டிருந்த அந்தக் கடைசி வரி கலெக்டரை நெகிழ வைத்தது. உடனே போன் செய்த கலெக்டர், சதீஸ்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார். பின்னர் தாசில்தார் உள்ளிட்டவர்களை அனுப்பி அவர்களது நிலையை அறிந்து கொண்டார். தற்போது சதீஸ்குமார் குடும்பத்துக்கு பட்டா கிடைக்க உள்ளது. அடுத்து, வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. பல வருடங்களாகத் தொடர்ந்த துயரம் ஒரு நாளில் முடிவுக்கு வந்துவிட்டது என்று கலெக்டரின் செயலால் அந்த ஏழை விவசாயக் குடும்பமே நெகிழ்ந்திருக்கிறது.

இது குறித்து சதீஸ்குமாரிடம் பேசினோம். ``என் பெற்றோர் விவசாயக் கூலி வேலை செய்றாங்க. எனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். பெரிய அக்கா கவிதா பி.ஏ படிச்சுட்டு வீட்ல இருக்காங்க. அண்ணன் சுரேஷ் ஐ.டி.ஐ படிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான். குடும்ப வறுமையால சின்ன அக்கா பாசமலர் ஐந்தாம் வகுப்போட படிப்ப நிறுத்திடுச்சு. நான் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்.

கலெக்டருடன் சதீஸ்குமார்

பொட்டு இடம்கூட எங்களுக்குனு சொந்தமா இல்ல. அதனால, சொந்த வீடு கட்ட அரசு வழங்குற உதவியைப் பெறவும் வழியில்ல. சொந்த வீடு இல்லாததுனால நாங்க அனுபவிச்ச வலிகள் கொஞ்ச நஞ்சமில்ல. இதனாலேயே அக்காக்களுக்கு திருமணத்துக்காக வந்த வரன்கள் தள்ளிப்போனது. `நமக்குத்தான் இருக்க இடம்கூட இல்லையே, அப்புறம் எதுக்கு நான்கு பிள்ளைகளை பெத்துக்கிட்டீங்க?'னு அக்கா கவிதா அப்பா, அம்மாகிட்ட அடிக்கடி கேட்கும். அப்போ அவங்க ரொம்ப வேதனைப்படுவாங்க. இன்னொரு பக்கம், வரதட்சணை கொடுக்க முடியாததுனால 29 வயசாகியும் அக்காவுக்கு கல்யாணம் ஆகாம இன்னமும் வீட்டுலேயே இருக்குது. சின்ன அக்காவுக்கு பத்து நாளுக்கு முன்னாடிதான் கடன உடன வாங்கி கொஞ்சமா சீர், செனத்தி செஞ்சு கல்யாணம் செஞ்சு வச்சோம்.

அப்பா, அம்மாவுக்கு விவசாய வேலையில கிடைக்குற வருமானம் வயித்துக்கே பத்தல. `கூலிக்குப் பாடுபட்டதுல உங்கள வளர்த்து ஆளாக்கத்தான் முடிஞ்சது'னு அம்மா அடிக்கடி கண்ணீர் வடிப்பாங்க. இதெல்லாம் பார்த்து நான் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானேன். நமக்கு யார் உதவி செய்வாங்க, நம்ம நெலம எப்ப மாறும், யாருகிட்ட உதவி கேட்குறதுனு எதுவும் தெரியல.

இந்தச் சூழ்நிலையில், கலெக்டர் சார் போன் நம்பர் எனக்குக் கிடைச்சது. எங்களோட நிலையை கலெக்டர் சாரின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பினேன்.

அடுத்த நாளே எனக்கு போன் வந்தது. `நான் கலெக்டர் பேசுறேன்'னு சொன்னார். எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. அக்கறையோடு எங்க கஷ்டம் எல்லாத்தையும் கேட்டார். கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைச்சார். நானும் எங்க அண்ணனும் போனோம். நாங்க கேட்ட உதவிகளைச் செய்து தருவதா உறுதியளித்தார். இன்னைக்கு எனக்கு நடந்தா, நாளைக்கு என் போன்ற நிலையில் உள்ள ஒருவருக்காவது வீடு கட்டிக் கொடுப்பேன்னு நான் குறிப்பிட்டிருந்ததைப் பாராட்டி நம்பிக்கையூட்டினார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

Also Read: 2 பெண் குழந்தைகளுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த கலெக்டர்!

ரெண்டு இடங்களைக் காட்டி, எந்த இடம் உங்க குடும்பத்துக்குச் சரியா வரும்னு கேட்டார். எதுனாலும் சரி சார்னு சொன்னோம். அடுத்தடுத்த பணிகள் வேகமெடுத்து பட்டா கைக்கு வர இருக்கு. வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுவதா தெரிய வந்தப்போ, நாங்க அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.

அப்பா, அம்மாவுக்கு, நடக்குறதை எல்லாம் நம்பவே முடியல. இத்தனை வருஷ கஷ்டம் தீரப்போறதை நெனைச்சு கண்ணீர் விட்டாங்க. `இனி என் பிள்ளைங்க அவமானப்பட மாட்டாங்க'னு எல்லார்கிட்டயும் சொன்னாங்க. இவ்வளவு சீக்கிரம் கலெக்டர் எங்க கண்ணீரைத் துடைப்பார்னு நாங்க எதிர்பார்க்கல. இப்பதான் வாழ்க்கையில நம்பிக்கை கூடியிருக்கு'' என்று நெகிழ்ந்தபடி தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/2YcjtFS

Post a Comment

0 Comments