கரூர் மாவட்டத்திற்குட்பட்ட தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழு 8 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், மேலப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகக் கறுப்புக்கொடி ஏந்தி இன்று போராட்டத்தில் குதித்தனர்.
Also Read: `20 ஓவரில் ஒரு ஓவர் தான் முடிந்துள்ளது!' - திமுக சாதனைகள் குறித்து செந்தில் பாலாஜி
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், உடனடியாகப் பணிகள் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளான குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி ஆறு மாதத்துக்குள் அமைத்து கொடுக்கப்படும் எனவும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி உடனடியாக அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள், குமரன் லே - அவுட் அதிகரிப்பு பகுதி முழுவதும் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடிகளை அகற்றினர். தொடர்ந்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுபற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பேசினோம்.
"கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்ட நிர்வாகத்திடமும், மேலப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யவில்லை. அஜீத் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல், எங்கள் பகுதியும் அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டது. கரூரின் அத்திப்பட்டி போல் எங்க ஊர் ஆனது. அதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க பகுதி மக்கள் முடிவு செய்தோம். அதனால், இன்று புறக்கணிப்பு குறித்த ஃப்ளக்ஸ் போர்டை வைத்தோம். அதோடு, எங்கள் பகுதியில் கறுப்பு கொடிகள் ஏற்றினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக, கிருஷ்ணராயபுரம் தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மேலப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் எம்.எல்.ஏ செய்துதருவதாக வாக்குறுதி கொடுத்தார். குடிநீர் குழாய் பதிக்க ஜே.சி.பி மூலம் குழி தோண்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் நாங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். சொன்னபடி, அடிப்படை பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை எனில் மறுபடியும் போராட்டத்தில் குதிப்போம்" என்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர்,
"கரூர் மாவட்ட ஊராட்சி குழு 8 - வது வார்டு கவுன்சிலர் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க கவுன்சிலர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஆனால், அவரால் ஜெயிக்க முடியவில்லை. இதனால், தற்போது மீண்டும் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில், முன்னாள் கவுன்சிலரான தானேஷ் என்கிற முத்துக்குமார் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதற்கிடையில், அந்தப் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அ.தி.மு.க வேட்பாளருக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காரணம், கடந்த பத்து வருடமாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்தும், இந்தப் பகுதிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. தானேஷ் கவுன்சிலராக ஜெயிச்சபிறகும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. தற்போது, மறுபடியும் அவரே அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். தி.மு.க மீதும், 'ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதத்தில் எங்கள் பிரச்னையை தீர்க்கவில்லையே' என்ற அதிருப்தி இருந்தது. ஆனால், தி.மு.க வேட்பாளர் கண்ணையனை ஆதரித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``தி.மு.க ஆட்சியின் 4 மாத சாதனை என்பது, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிவடைந்த மாதிரி. அதில் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
Also Read: ``இது மக்கள் ஒற்றுமைக்கான போராட்டம்!" - டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் கூடிய விவசாயிகள்
இனி, அடுத்து வரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை கவரும் வகையில் இருக்கும்"னு பேசினார். ஆனால், இந்த 8 ஊராட்சிகளிலும் அடிப்படை பிரச்னைகளே தீர்க்கப்படவில்லை. இதுதான் தி.மு.க ஆட்சி 20:20 யின் லட்சணமா? இருந்தாலும், எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி உடனே களத்துக்கு வந்து, பிரச்னையை தீர்க்க முயன்றது, மக்களின் கோபத்தை சற்று தணித்திருக்கிறது. ஆனால், இன்னொருபக்கம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மேலப்பாளையம் ஊராட்சி, வடக்குபாளையம் பகுதி மக்களைப் போல, தேர்தல் நடைபெறும் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டு ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்னை, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், வாக்கு சேகரித்து செல்லும் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களை, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வடக்குபாளையம் குமரன் நகர் பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால், அவர்களில் பலரும் தேர்தல் புறக்கணிப்பு ஆயுதத்தைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால், முக்கிய கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்" என்றார்.
from Latest News https://ift.tt/2Y4XIaJ
0 Comments