``உங்களால் இனி ஒரு உயிர் போய்விடக்கூடாது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காது. யாரேனும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைச் செய்யச்சொல்லிக்கேட்டால், அவர்களின் முழுமையான விபரத்தை வாங்கி பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று போலீஸார் பட்டறை உரிமையாளர்களிடம் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, வேலூர் போன்ற மாநகரில் பழிக்குப்பழி படுகொலைகள் அதிகரித்துவிட்டன. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாகிவிடும்’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்.
அதன் படி காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தடதடத்தது போலீஸ் வட்டாரம். இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷ’னுக்கு அதிகாரிகள் மத்தியில் வைக்கப்பட்ட பெயர் `ஆபரேஷன் டிஸ் ஆர்ம்.’ செப் 23-ம் தேதி இரவில் தொடங்கிய இந்த ஆபரேஷனில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெளடிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள்கள் என ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ரெளடிக்களிடம் விசாரித்ததில், இரும்பு பட்டறையில் இதுபோன்ற அபாயகரமான ஆயுதங்கள் தயாரிப்பதாகத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டறை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகரத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் தயாரிப்பு பட்டறையின் உரிமையாளர்களிடம் போலீஸார் ஆலோசனை நடத்தினார்கள். திருச்சியில் 6 இடங்களில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
Also Read: `எங்க உயிருக்கு ஆபத்து!' - சொல்கிறார்கள் நிர்மலாதேவி கொலை வழக்கில் சரண்டரான 5 பேர்
அதில் பேசிய போலீஸார். ”இங்குள்ள சிலர் ரெளடிக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் ஆயுதங்கள் செய்து கொடுப்பதாகத் தகவல் வருகிறது. இனிமேல் இதுபோல் செய்யாதீர்கள். உங்களால் இனி ஒரு கொலையும் நடக்கக்கூடாது.
நீங்கள் சரியாக நடந்துகொண்டால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காது. யாரேனும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைச் செய்யச் சொல்லிக் கேட்டால் அவர்கள் முழுமையான விபரத்தை வாங்கி பதிவு செய்துகொள்ளுங்கள். அதேபோல் உங்களது பட்டறைகளில் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
மேலும் குற்றச் சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்கூட்டியே போலீஸாருக்கு தகவல் கொடுங்கள். அவர்கள் கொடுக்கு தகவல் கண்டிப்பாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். நீங்கள் கொடுக்கும் தகவல்கள் தான் எங்களுக்கு முக்கியம்” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
டி.ஜி.பி சைலேந்திர பாபு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சில உத்தரவுகளை இது தொடர்பாக பிறப்பித்திருக்கிறார். அதில், ``அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைபேசி எண், எந்த காரணத்துக்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
விவசாயம் வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் விற்பனை செய்யக்கூடாது கண்காணிப்பு கேமராக்களை பட்டறைகளில் பொருத்த வேண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் சிரமம் இருந்தால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும்” என குறப்பட்டிருக்கிறது.
from Latest News https://ift.tt/2ZJtKd7
0 Comments