பீகார் மாநிலத்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில், பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி, சரியாக ஆட்சியமைக்கத் தேவையான 127 இடங்களுடன் ஆட்சி செய்துவருகிறது. இதில் எதிர்க்கட்சியாக இருந்த, இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 92 இடங்களுடன் சட்டமன்றத்தில் இருக்கிறது. மீதமுள்ள 24 இடங்களில் காங்கிரஸ் 19 இடங்களுடனும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களுடனும் இருந்தது.

இந்த நிலையில், ஒவைசி கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களில் 4 பேர், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு மாறியிருப்பது ஒவைசி-க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பலம் 76-லிருந்து 80-ஆக மாறியுள்ளது. மேலும் பீகாரில் நேற்றுவரை அதிக இடங்களை வென்ற கட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் 77 இடங்களுடன் இருந்த பாஜக-வை பின்னுக்குத் தள்ளி 80 இடங்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது.

ஒவைசி-யின் 4 எம்.எல்.ஏ-க்கள் தனது கட்சிக்கு மாறியதையடுத்து பேசிய மாநில எதிர்கட்சித்தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ``4 எம்.எல்.ஏ-க்களும் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்ற எங்கள் இலக்கை நோக்கிச் செயல்படுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சீமாஞ்சல் மக்களின் அன்பை நாங்கள் எப்போதும் பெற்றுள்ளோம். சீமாஞ்சலில் எங்கள் கட்சி மீண்டும் நல்ல முன்னிலையில் உள்ளது" என்று கூறினார்.
from Latest News https://ift.tt/BiFJ0WH
0 Comments