https://gumlet.vikatan.com/vikatan/2023-01/f54ebef9-3f43-4c88-8336-71988969bbe8/IMG_20230130_WA0048__01.jpgசிவகங்கை: வீட்டின் முன்பு வைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றம்... அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். வீட்டின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலையை அமைத்து இருந்தார். வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையை திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி 29-ம் தேதி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உரிய அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பெரியார் சிலை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, தேவகோட்டை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீட்டின் உரிமையாளரான இளங்கோவனிடம் கூறினர். தொடர்ந்து, `அனுமதி பெற்று தான் சிலை வைக்கவேண்டும், அனுமதி இல்லாததால், சிலையை அகற்றுகிறோம்' என்று தெரிவித்தனர்.

இளங்கோவன்

ஆனால், நிறுவிய சிலையை அகற்றுவதற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், அதிகாரிகள் பெரியாரின் மார்பளவு சிலைக்கு சேதம் ஏதும் ஏற்படாமல், காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி சரக்கு வாகனத்தில் ஏற்றி காரைக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பெரியார் சிலை அகற்றப்பட்ட நிகழ்வு காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் இளங்கோவனிடம் பேசினோம், "என் வீட்டின் முகப்பில் மதில் சுவரில் தமிழர்களை இந்த நிலைக்கு உயர்த்திய தந்தை பெரியாருக்கு நன்றி உணர்வு ஆற்றும் வகையில், மார்பளவு சிலையை வைத்தேன்.

பட்டா இடத்திற்குள் பெரியாரின் சிலை வைப்பதற்கு எவ்வித அனுமதியும் தேவை இல்லை என்பது ஏற்கெனவே சிலர் வாங்கிய பொதுவான நீதிமன்ற உத்தரவு எங்களிடம் உள்ளது. அதைப் பின்பற்றி தான் நாங்கள் சிலையை நிறுவினோம். இந்த ஆவணங்களை எல்லாரும் போலீஸாரிடமும், அதிகாரிகளிடமும் கொடுத்தோம். ஆனால், இந்த விஷயத்தில் யாரையோ திருப்திபடுத்த படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு அதிகாரிகள் வம்பாக செயல்பட்டிருக்கிறார்கள். பெரியார் சிலை வைப்பது பிரச்னை இல்லை. அது, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பண்ணைக்கு அருகே வைப்பது தான் பிரச்னை. தி.மு.க ஆட்சியில் தந்தை பெரியாருக்கு சிலை வைப்பதற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடப்பதாக தெரியவில்லை.

பா.ஜ.க ஆட்சி நடப்பது போலத் தான் தெரிகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் கொள்கைவாதிகள், இனி வரும் காலங்களில் பெரியார் சிலையை தங்களது பட்டா இடத்திற்குள் எவ்வித தடையுமின்றி வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்"என்கிறார் ஆதங்கமாக.

இதற்கிடையே தான், சிலையை அகற்றிய அரசு அதிகாரிகளான தாசில்தார் கண்ணனை சிவகங்கை வனத்திட்ட அலுவலராக மாற்றப்பட்டிருக்கிறார். டி.எஸ்.பி கணேஷ்குமார் சென்னை தலைமை அலுவலக காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.



from Latest News https://ift.tt/Z6BQe0H

Post a Comment

0 Comments