https://ift.tt/vROxCFJ Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம்.

பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும். இரவில் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிற நிலையில், அந்த நபருக்கு பகல் வேளையில் தூக்கம் தேவைப்படாது. இரவு நேரத் தூக்கம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும்.

பகல் நேரத்தில் தூங்க நினைப்பவர்கள் அதை 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விடக்கூடாது. பகலில் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் தூக்கம், இரவு நேர தூக்கத்தை பாதிக்கும் என்பதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன.

சிலர், வார நாள்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், வார இறுதி நாள்களை வெளியே செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றுக்காகச் செலவழிப்பார்கள். அதனால் வழக்கமான தூக்க நேரம் தள்ளிப்போகும். அது ஆரோக்கியமான விஷயமல்ல. வார நாள்களோ, விடுமுறை நாள்களோ.... எல்லா நாள்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது.

தூக்கம்

தவிர்க்க முடியாத தருணங்களில் இதை அதிகபட்சமாக ஒரு மணி நேரம் தள்ளிப்போடலாம். அதற்கு மேல் தூக்கத்தைத் தள்ளிப்போடுவது சரியானதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/JGk53q8

Post a Comment

0 Comments