2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. அப்போது அவர் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை விமர்சித்துப் பேசியிருந்தார். இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சமூகத்தையே அவமதித்துவிட்டார். ‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ஜாமீனுக்கு ஒப்புதல் அளித்து, மேல்முறையீட்டுக்கு அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்தும் உத்தரவிடப்பட்டது.
பிறகு அவரது பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், `ராகுல் காந்தியைப் பார்த்து பா.ஜ.க பயப்படுகிறது' என காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், ``பாரத் ஜோடோ யாத்திரை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர்மீதான மக்களின் பார்வை மாறியிருக்கிறது. இதனால்தான் பா.ஜ.க அரசும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.
அதாவது பாரத் ஜோடோ யாத்திரையின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 'பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குகொள்ளும் அனைவரும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை தாங்கிக்கொள்ள முடியாமால், பா.ஜ.க கடிதம் எழுதியதைப் பார்க்க முடிந்தது. இருப்பினும் வெற்றிகரமாக யாத்திரையை ராகுல் காந்தி முடித்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பேசிய ராகுல் காந்தி, `நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’ என்று தெரிவித்தார்.
இது குறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விளக்கமளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் விளக்கமளிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் ராகுல் காந்தியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான், சூரத் நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம்காட்டி அவரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ராகுல்மீது பா.ஜ.க-வுக்கு இருக்கும் பயத்தைத்தான் காட்டுகிறது" என்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, ``கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மக்களைவையில் ராகுல் காந்தி எழுச்சிமிக்க கண்டன உரையை நிகழ்த்தினார். அதில் அவர் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இருக்கும் தொடர்ப்பு குறித்து ஆதாரங்களோடு, புகைப்படங்களோடு அம்பலப்படுத்தினார்.
2014-ம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609-வது இடத்திலிருந்த அதானி, 2022-ல் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு உயர்ந்தது எப்படி? முன்னனுபவம் இல்லாத அவருக்கு விமான நிலையம், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதற்கான அனுமதி எப்படி கொடுக்கப்பட்டது.
`உங்களுடைய ஆதரவு இல்லாமல் அதானி வளச்சியடையவில்லை' என்று ராகுல் பேசினார். இதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. மாறாக அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டார்கள். அதற்குப் பிறகு, `லண்டனில் இந்தியாவுக்கு விரோதமாக ராகுல் காந்தி உரையாற்றினார். எனவே அவர் மன்னிப்பு கேட்டால்தான் பேச அனுமதிப்போம்' என்று கூறி நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
நாம் இதுவரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ராகுல் காந்திக்கு பயந்து ஆளுங்கட்சியே முடக்கியது. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில், பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருகிறார்கள். இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கறுப்புச்சட்டை அணிந்தும், மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றக்கூடாது என்ற நோக்கத்தில், சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 24 மணி நேரத்தில் பதவி பறிப்பு நடந்திருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தின் துணையோடு முறியடிப்போம்.
மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் அரசியலை முறியடிக்கும் வகையில்தான் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்துதான் ராகுல் காந்திமீது பா.ஜ.க-வுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோல் இந்திரா காந்திக்கும் நடந்தது. அவர் அதில் எப்படி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாரோ, அதேபோல் ராகுல் காந்தியும் ஆட்சிக்கு வருவார்" என்றார்.
from Latest news https://ift.tt/fwYRHpJ
0 Comments