திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருக்கிறது. ராமராஜன் ஜவுளித் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஜூன் 25-ம் திருச்சி உறையூரில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்கச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ராமராஜன் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். அவரது மனைவி ஹேமலதா போன் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்திருக்கிறது.

பல இடங்களில் விசாரித்தும் ராமராஜனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் ஹேமலதாவுக்கு போன் செய்த ராஜேஸ் என்பவர் 'உங்க வீட்டுக்காரர் என்கிட்ட ஏழரை லட்ச ரூபாய் கடன் வாங்கிட்டு திருப்பிக் கொடுக்கலை. அதனால அவரை கடத்தி வச்சிருக்கோம். பணத்தைக் கொடுத்துட்டு அவரை கூட்டிட்டு போங்க. இல்லைன்னா அவரை கொன்னு போட்ருவோம்' என்றிருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹேமலதா, கண்ணீரோடு மணிகண்டம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
அதையடுத்து திருச்சி டி.எஸ்.பி அறிவழகன் தலைமையிலான தனிப்படை களத்தில் இறங்கி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. ராமராஜனின் செல்போன் சிக்னல், ராமராஜன் கடைசியாக பேசிய நபர்களின் கால் ஹிஸ்டரி, ஹேமலதாவுக்கு போன் செய்த ராஜேஸின் நம்பர் ஆகியவற்றை வைத்து விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி, சேலம், ஏர்காடு என பல இடங்களில் கடத்தல் கும்பல் சுற்றி அலைந்தது தெரிந்திருக்கிறது. அதையடுத்து ஏர்காட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ராமராஜனை கடத்தல் கும்பல் அடைத்து வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் ராமராஜனை உயிரோடு மீட்டனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர் முஸ்தபா, ராஜேஸ், கீர்த்தி, இருதயராஜ், மணிகண்டன், வசந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைதுசெய்து திருச்சிக்கு அழைத்துவந்து தனிப்படை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில், கூலிப்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ராமராஜனைக் கடத்தியது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். ``சென்னை ஆவடி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த கீர்த்தி என்பவரிடம், ராமராஜன் ஏழரை லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி வாங்கிய கடனை ராமராஜன் திரும்பச் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.

இதில் கோபமடைந்த கீர்த்தி, ராமராஜனிடமிருந்து எப்படியாவது பணத்தை வாங்கியாக வேண்டுமென, அவரது நண்பரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த முஸ்தபாவிடம் கூறியிருக்கிறார். அவர் தனக்குத் தெரிந்த கூலிப்படையினரை வைத்து இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேறியிருக்கிறார். கடத்தலின் போது பயன்படுத்திய துப்பாக்கியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது' என்றனர்.
from Latest news https://ift.tt/58oAuIa
0 Comments