https://ift.tt/Aie7lyJ - புரட்சி, 2011 - எழுச்சி! இந்தியாவும் உலகக்கோப்பை வெற்றிகளும் - மெய்சிலிர்க்க வைக்கும் ரீவைண்ட்!

எந்தவொரு வீரரது கனவும் அவரது நாட்டிற்காக உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்பதாகவும் எந்தவொரு அணியின் கனவும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகவுமே இருக்கும்.

அவரவருக்குரிய அரிசியில் அவரவரது பெயர் இருக்கும் என்பது உண்மையோ இல்லையோ எந்தக் கோப்பையிலும் எந்த அணியினது பெயரும் எழுதப்படுவதில்லை. தொடர் முழுவதும் அணிக்குள் உள்ள ஒற்றுமை, இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திண்ணம், தவறுகளிலிருந்து பாடம் கற்கும் சாமர்த்தியம், திறன், ஆற்றல், கடின உழைப்பு என பலவற்றையும் பாரபட்சம் பார்க்காமல் கொட்டினால்தான் உலகக்கோப்பை கனவு நிஜமாகும்.

WorldCup
இதற்குமுன் இரு சந்தர்ப்பங்களில் இவையெல்லாம் பொருந்திவர இந்தியா ஒருநாள் உலககோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அந்த மேஜிக் மொமண்ட்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போமா?

1983 உலகக்கோப்பை வெற்றி:

எல்லாப் போர்க்களங்களின் முடிவும் அமைதி ஒப்பந்தங்கள் அல்ல. சில எல்லைகளையே மாற்றியமைக்கும், சிம்மாசனங்களையே கவிழ்க்கும். இந்தியாவின் முதல் உலகக்கோப்பை கபில்தேவின் கரங்களில் தவழ்ந்ததும் அத்தகைய தருணம்தான்! இந்தியக் கிரிக்கெட் வரலாறு அதன்பிறகுதான் உலகக் கிரிக்கெட்டின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கத் தொடங்கியது.

Kapil Dev

24 வயது இளைஞனின் தலைமையில் இந்தியா உலகக்கோப்பைக்குள் கால் வைத்தபோது கண்டுகொள்வாரில்லை. காரணம், முந்தைய இரு உலகக்கோப்பைகளுக்கும் சேர்த்து இந்தியா பெற்றிருந்தது ஒரேயொரு வெற்றியே. டெஸ்டில் ஓரளவு சாதித்திருந்தாலும் லிமிட்டெட் ஃபார்மேட்டில் சோபிக்கவில்லை.

அணி அத்தனை பலவீனமானதாகவும் இல்லை. கவாஸ்கர் ஒப்பற்ற ஓப்பனராக வலம் வந்தார். கபில்தேவ்வும் ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்திருந்தார். பேட்டிங்கூட பத்தாவது வீரர்வரை நீண்டது. சுழல்பந்து பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. ஆடுவது இங்கிலாந்தில் என்பதால் கவலைப்பட வேண்டியது வேகப்பந்துவீச்சைப் பற்றி மட்டுமே. இருப்பினும் வார்ம் அப் போட்டிகளில் ஒன்றில்கூட இந்தியா தேறவில்லை. ப்ரஸ் மீட்டிலிருந்து நேர்காணல்கள்வரை அத்தனை தருணங்களிலும், பேசும் ஆங்கிலத்தில் தொடங்கி ஆட்டத்திறன்வரை அனைத்து விஷயங்களிலும் கேலிக்குள்ளாக்கப்பட்டனர்.

விமர்சிக்கும் வாய்களை அடைக்கும் மிகப்பெரிய வெற்றியை டிஃபெண்டிங் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தி இந்தியா பெற்றது. கபில்தேவ் மற்றும் கவாஸ்கரின் பெயர்கள் மட்டுமே அறிந்திருந்த இந்தியர்களுக்கு யாஷ்பால், பின்னி என வேறுசில பெயர்களும் பரிட்சயமாகின. கமெண்ட்ரிகள் ரேடியோ மூலமாகக் காதில் சொன்ன விவரங்கள் காற்றிலும் உலவத்தொடங்கின. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வென்றதும் அரசியலை மட்டுமே பேசிய டீக்கடை பெஞ்சுகள் `ஸ்கோர் என்ன?' என்றும் கேட்கத்தொடங்கின.
Kapil Dev

ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான அடுத்த இருதோல்விகள் இந்தியர்களை சற்றே கிரிக்கெட்டை மறக்கவைத்தன. ஆனால் கபில்தேவ் என்னும் ஒப்பற்ற தலைவன் அப்படி மறந்து கடந்து செல்பவரல்ல. `Walk By Talk' என்பதனை பல சந்தர்ப்பங்களிலும் நிரூபித்தவர். வென்றே ஆகவேண்டிய ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 17/5 என்ற பரிதாபநிலையில் இந்தியா தத்தளித்தபோது கபிலுக்குள் இருந்த போராளி வெளிவந்தார். ஹரியானா ஹரிகேன் அன்று அளப்பதற்கரிய ஆற்றலை வெளியிடும் சூரியப்புயலாக உருவெடுத்தது. டெய்ல்-எண்டர்களை ஒருமுனையில் நிறுத்தி அத்தனை ஜிம்பாப்வே பௌலர்களுக்கும் ஆட்டங்காட்டினார்.

வீசப்பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரி லைனைக் குசலம் விசாரித்தன. 17/5-ல் இருந்த‌ அணியை மீட்டெடுத்து அவரது 175* அரையிறுதிக்குள் அனுப்பியது. கபில்தேவை தேவதூதனாக இந்தியர்கள் மனதுக்குள் புகுத்தியதும் இந்த இன்னிங்ஸ்தான்.

மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - இவற்றுள் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்பதே பலரது கணிப்பும். இந்த மூன்றையுமே இந்தியா வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் முழுபலத்தோடு இருந்த இங்கிலாந்தை வீழ்த்தியதுதான் இன்னொரு இறுதிப்போட்டிக்குச் சமமானது. இங்கிலாந்தின் பௌலர் எப்படி மேற்கிந்தியத்தீவுகளை இறுதிப்போட்டியில் சந்திக்கப்போகிறோம் என்று நேர்காணலில் பேசிக்கொண்டிருக்க, இங்கிலாந்து ரசிகர்கள் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்தனர், அந்தளவு இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் பின்னியின் பந்து ஃபௌலரின் ஸ்டம்பை உடைத்தபோதும், அசாத்தின் பந்து இண்டிகேட்டரே போடாமல் திரும்பி இயான் போத்தமின் ஸ்டம்பை நொறுக்கியபோதும் இங்கிலாந்தின் கனவும் தகர்ந்து இந்தியாவை இறுதிப்போட்டிக்குள் நுழைத்தது.

மொத்த இந்தியாவும் ரேடியோவும் காதுமாக வலம்வந்த ஃபைனல் டே. முதல்பாதி எதிர்பார்த்தபடி நகரவில்லை.

கவாஸ்கர், கபில்தேவ் தொடங்கி பலபோட்டிகளிலும் கைகொடுத்த யாஷ்பால் வரை எல்லோரும் ஏமாற்ற 183-ஐ மட்டுமே இந்தியா சேர்த்தது. ரிச்சர்ட்ஸுக்கே பத்தாதே என நினைத்து பல ரேடியோக்களும் அணைக்கப்பட்டன ஆனால் இந்திய பௌலிங் எதிர்பாராத எழுச்சியுற்றது.
Viv Richards

அவுட்ஸ்விங்கரால் செட் செய்து க்ரீனிட்ஜை இன்ஸ்விங்கரால் தூக்கிய பல்வீந்தர் சந்தின் அந்த ஒற்றைப்பந்து அணிக்குள்ளே தொலைந்த அத்தனை உத்வேகத்தையும் கொண்டுவந்து ஸ்கோர் செக் செய்ய உயிர்தரப்பட்ட ரேடியோ பெட்டிகளைத் தொடர்ந்து இயங்கவைத்தது. எந்த வேகப்பந்துவீச்சு இந்தியாவின் பலவீனமாகக் கருதப்பட்டதோ அதுவே பலமானது. பின்னியின் ஸ்விங்கர்களும் அமர்நாத்தின் துல்லியமான சீம்அப் டெலிவரிகளும் எல்லாப் பக்கமுமிருந்து போர்தொடுக்க, ரிச்சர்ட்ஸின் ஈகோவை மதன்லால் பவுன்சர்களால் தூண்டினார். அதை அவர் சிக்ஸருக்குத் தூக்க மிட்விக்கெட்டில் நின்றிருந்த கபில்தேவ் பின்னோக்கி நகர்ந்து பிடித்த அந்த ஒரு கேட்ச் கோப்பையை இந்தியா உடையதாகியது.

ஹோல்டிங்கின் விக்கெட் விழுந்த அந்த நொடி பார்த்தவர்களை வேண்டுமெனில் உறைய வைத்திருக்கலாம், ஆனால் இந்தியக் கிரிக்கெட்டை பல நூற்றாண்டுகள் முன்னோக்கி ஓடவைத்தது. ஒட்டுமொத்த தேசமும் நள்ளிரவையும் தாண்டி சுதந்திரம் பெற்ற தினத்திற்குப் பிறகு கொண்டாடித்தீர்த்த நாளது. கிரிக்கெட் ஒரு மதமாக இந்தியாவில் ஆராதிக்கப்படத் தொடங்கிய தருணமுமது. சச்சின் எனும் ஆளுமை கிரிக்கெட்டைத் தனது பாதையாக முடிவு செய்ததுகூட இந்நாளில்தான் எனப் பின்னாளில் சொன்னார்.

Kapil Dev
எப்படி நிலநடுக்கம் ஒரு புள்ளியில் தொடங்கி தனது அதிர்வுகளை எல்லாப்பக்கமும் அனுப்புமோ அப்படி கபில்தேவ் கோப்பையை முத்தமிட்ட புள்ளியில்தான் இந்தியக் கிரிக்கெட் உயிர்த்தெழுந்தது. அது ஏற்படுத்திய தாக்கமே இன்றுவரை தடையின்றி தொடர்கிறது.

2011 உலகக்கோப்பை வெற்றி:

உலகக்கோப்பை தொடரில் காலடி வைக்கையில் கபில்தேவின் அணிக்கு இல்லாத ஒரு பளுவினை தோனியின் படை தாங்கியிருந்தது‌. அது 2007 ஏற்படுத்தி வைத்திருந்த எதிர்பார்ப்பும், முந்தைய இரு உலகக்கோப்பைகள் உண்டாக்கியிருந்த வலியினை ஆற்றும் என்ற நம்பிக்கையும்தான். அதுவும் சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்னும் கூடுதல் அழுத்தம் வேறு.

படை, பலம் வாய்ந்ததுதான். 2007 வெற்றிக்குப் பிறகு வருவதை எதிர்நோக்கி தோனி பழையதைக் கழித்து புதியதைப் புகுத்தி பார்த்துப் பார்த்துக் கட்டமைத்ததுதான். கோலி, ரெய்னா, அஷ்வின் எனத் துடிப்புள்ள இளம்வீரர்கள் தோள்கொடுக்க தயாராக இருந்தார்கள்தான். எனினும் பூட்டுக்கு ஏற்ற திறவுகோல்தான் என்றாலும் எந்தத் திசையில் திருப்புவதென்பது தானே அதிமுக்கியம். தோனிக்கு தெரியாத வியூகங்களா?

க்ரூப் சுற்றில் அணி ஒவ்வொரு கட்டங்களாகக் கடந்தபோதும் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆறில் நான்கு போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முன்னேறியும் அணித்தேர்வு குறித்த கண்டனங்கள் எழுந்தன. பொதுவாக பிளேயிங் லெவனை மாற்றியே பழக்கப்படாத தோனி இந்தியாவின் பலதரப்பட்ட களங்களில் ஆடியதால் களத்திற்கு ஏற்றாற்போல் பௌலர்களை மாற்றினார். யுவராஜ் ஜாகீருக்கு இணையாக நின்று பௌலிங்கில் பலம் சேர்த்தது தோனிக்கான தேர்வுகளை அதிகரித்தது. சென்னை போன்ற ஸ்லோ விக்கெட்டுகளில் அஷ்வினின் ஆஃப் ஸ்பின்னைப் பயன்படுத்தியவர் தேவைக்கேற்ப முனாப் படேல், நெஹ்ரா, பியூஷ் சாவ்லா ஆகியோரை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினார். ஏற்கெனவே கூறியதுபோல் திசை அறிந்தவருக்கு உதயம் எது அஸ்தமனம் எது என்பது தெரிந்திருந்தது. ஆனால் அது புரியாத பக்கமிருந்துதான் எதிர்ப்புகள் கிளம்பின.

Yuvraj Singh

முதல் சுற்றுப் போட்டிகளில் அணி மீது வைக்கப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு ஃபீல்டிங் குறைபாடுகள். யுவராஜ், கோலியுடன் ரெய்னாவும் சேர்க்கப்பட ஃபீல்டிங் பரிதாபங்கள் பெருமளவு குறைத்தன. ரன்களும் தடுக்கப்பட்டன, பல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. நாக்அவுட் போட்டிகளுக்குள் இந்தியா நுழைய, 83 அணியைப் போலவே இங்கேயும் இந்தியா பலங்கொண்ட முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றோடு பலப்பரீட்சை செய்ய வேண்டியதிருந்தது.

கபிலின் அணியைப் போலவே இங்கேயும் எப்போட்டியும் One Man Show-ஆக மாறவில்லை. குழு மனப்பான்மை வெற்றிக்கான வழித்தடம் அமைக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யாரோ ஒருவரது தோளில் அணி பல்லக்குப் பயணம் போனது. சச்சின், கம்பீர், யுவராஜ், ரெய்னா என ஒருவர் வீழ்ந்தாலும் மற்றொருவர் வந்துகொண்டே இருந்தனர். இந்தியாவின் பேட்டிங் நீளம் எதிரணியின் பௌலிங்கைச் சோதித்தது‌. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சு அணிமீது வீசப்பட்ட எல்லா சந்தேகங்களையும் உடைத்தெறிந்தது.

ஒவ்வொரு கட்டமாக அணி நகர நகர ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பன்மடங்காக பல்கிப்பெருகியது. வீதிகளில் மூவண்ணக்கொடியை ஏந்தி 83-ல் கொண்டாடித் தீர்த்ததை காட்சிகளாகப் பார்த்தவர்களுக்கு அந்நொடிகளை நிஜத்தில் மீண்டும் பார்த்து விடமாட்டோமா என்ற ஏக்கம் கூடியது. பலகோடிக் கண்களும் மும்பை வான்கடேயை முற்றுகையிட்டன. சங்கக்காரா - ஜெயவர்த்தனே பார்ட்னர்ஷிப்பை உடைத்து யுவராஜ் முக்கிய திருப்புமுனையைத் தர, 275-ஐ இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

Dhoni

சேவாக், சச்சின் ஏமாற்றினாலும் தொடர்முழுவதும் நிலைப்புத்தன்மையோடு ஆடிய கம்பீர் கைவிடவில்லை. சதத்தை தவறவிட்டிருப்பினும் கோலி மற்றும் தோனியுடனான அவரது பார்ட்னர்ஷிப்கள்தான் இடக்கை - வலக்கை சாதகத்தை இந்தியாவின் பக்கம் விடியச்செய்தது. மாஸ்டர்மூவ் - இலங்கையின் ஸ்பின் அச்சுறுத்தலைச் சமாளிக்க தோனி முன்னதாகக் களமிறங்கியதுதான். பல போட்டிகளிலும் அதற்கு முன்னதாக அதனைச் செய்திருந்த தோனி அன்றும் அதைச் செய்து முடித்தார். நீர்ததும்பும் பாத்திரத்தைச் சிந்தாமல் சிதறாமல் இலக்கில் சேர்க்கும் கவனம் அவரது இன்னிங்ஸில் இருந்தது. ஸ்கேட்டிங் சக்கரத்தை கால்களில்கட்டி டிரெட்மில்லில் பயணித்த அத்தனை இந்திய மனங்களும், தோனியின் பேட்டோடு ஒத்ததிர்வு செய்து துடித்தன.

Kapil Dev - Dhoni

அந்த இறுதி சிக்ஸர் கபில்தேவின் கேட்ச் ஏற்படுத்திய அதே சிலிர்ப்பைக் கொண்டு வந்தது. கமெண்ட்ரியில் ரவி சாஸ்திரியின் வார்த்தைகள் மனோவசியம் செய்து இடம், காலம் அத்தனையையும் மறக்கச் செய்தன. சச்சின் எனும் சகாப்தத்தை மற்ற வீரர்கள் தோளில் சுமந்த நொடிகள் கண்களை பனிக்கச் செய்து மொத்த இந்தியர்களின் மனதையும் உருக்கியது. 50, 60, 20 ஓவர் போட்டிகளை வென்ற முதல் அணியாக இந்தியா வாகைசூடியது. சேனைத் தளபதியாக தோனி மீண்டுமொரு முறை தன்னை நிரூபித்தார்.

எத்தனை பைலேட்டரல் தொடர்களாலும் தரமுடியாத ஆத்ம திருப்தியை, அளவில்லாப் பெருமையை ஓர் உலகக்கோப்பை தந்துவிடும். அதில் மூழ்கித் திளைத்து தன்னை மறக்கும் ஆனந்தத்தை இந்திய ரசிகர்கள் மும்முறை அனுபவித்திருக்கிறார்கள்.

கால் சுடும் பாலைவனத்தில் 12 ஆண்டுகள் கடந்த நிலையில் பாலைவனச் சோலையாக மீண்டும் அந்த பேரானந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்திய அணி பரிசளிக்கும் என்னும் நம்பிக்கையோடே வரவிருக்கும் தொடருக்குள் நுழைவோம்.



from Latest news https://ift.tt/wdqHiXO

Post a Comment

0 Comments