https://gumlet.vikatan.com/vikatan/2023-10/da2a3653-3ecf-43ff-915f-b09ab05afcf0/Untitled_design__80_.jpg?w=280மாஞ்சோலை: `ஒரு வேளை சோறு' - அத்தனை எளிதானதா? |1349/2 எனும் நான்|பகுதி 33

அடுப்பு பற்றவைக்காமல் விரும்பிய உணவினை வீட்டிற்கோ, இருக்கும் இடத்திற்கோ ஸ்விக்கி, ஈட்சுவர் போன்ற உணவு ஆர்டர் செய்யும் இணையதளங்களின் மூலமாக வரவழைத்து சுவைக்கும் காலத்தில் வாழ்கிறோம்.

அந்த வாய்ப்புகளை நுகரமுடியாத அளவிற்கு, நகரப் பகுதிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், எதார்த்தத்தில் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் எஸ்டேட் மக்கள். அடுப்பு எரிக்காமல் ஒருநாளைக்கூட கடத்தமுடியாத அங்குள்ள மக்களுக்கு, லயன் வீடுகளில் பிரதான எரிபொருள் அங்கு கிடைக்கும் சுள்ளிகளும், விறகுகளும்தான். எஸ்டேட்டில் மதியம் 12 முதல் 1 வரை உணவு இடைவேளை. தேயிலை பறிப்பவர்களைத் தவிர்த்து இதர காட்டு வேலைகளைச் செய்பவர்களுக்கு மதியம் 2 மணிக்கு வேலை விட்டுவிடும். அதில் ஒருநாள் கூலிக்குக் கூடுதலான சம்பளம் கிடைக்காது என்பதால் பலரும் மாலை 4.30 மணிவரை நீடிக்கும் தேயிலை பறிக்கும் வேலைக்கே செல்வார்கள். அப்பா உள்ளிட்ட ஆண்கள் சிலர், புல்லறுக்க, பால் கறக்க, விறகு வெட்ட செல்லவேண்டி, சீக்கிரமாய் முடிந்துவிடும் காட்டு வேலைகளைத் தேர்ந்தெடுப்பதையே பெரிதும் விரும்புவர்.

எஸ்டேட் தொழிலாளிகள்

பள்ளி விடுமுறை நாட்களில், அப்பாவுடன் மதியம் 2 மணிக்குப்பிறகு விறகு கொண்டுவர காட்டுக்குப் போவேன். அப்பா சாதாரணமாக நடந்துபோவதுபோல இருந்தாலும் கூடவே செல்லவேண்டுமென்றால் நான் ஓடியபடியே தான் செல்ல வேண்டும். விறகு பிறக்கச்சென்ற ஒரு பொழுது கூட காட்டுக்குள் விறகு தேடி அப்பா அலைந்து பார்த்ததில்லை. ஏற்கனவே பார்த்து வைத்துவிட்டு வந்த இடத்துக்குப் போனதுபோலவே தோன்றும்.. ஆனால் அவர் போயிருந்திருக்க மாட்டார். இடுப்பு உயரத்துக்கு மேலே ஏற்கனவே வெட்டப்பட்டு எச்சமாய் நின்று கொண்டிருக்கும் குத்துக்கட்டை அல்லது காய்ந்த மரம் அவர் கண்ணில் பட்டுவிடும். நின்றுகொண்டிருக்கும் மரத்தை அப்படியே கீரி அதிலிருந்து இரண்டு கட்டு விறகுகளை எடுத்துவிடுவார். விறகு சேகரிக்கச் செல்கையில், கத்தியோ, கோடாரியோ, வாளோ, அவரது கருவிகள் அனைத்தும் அப்பாவின் சொல்லை அப்படியே கேட்கும்.

தேவையான விறகைச் சேகரித்தவுடன், அதனைக் கட்டவும், சுமந்து வருகையில் அழுத்தாமல் இருக்கவேண்டி தலையில் வைக்கும் சும்மாடு தயாரிக்கவும் அந்தப்பகுதியில் இருக்கும் ஏலக்காய் செடி, கூக்கல் செடி, புல்லாங்குழல் செய்ய பயன்படும் மூங்கில் வகையான ஈற்றல், பிரம்பு என ஏதாவது ஒன்றினை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வார். யானைப்பாகனாக காட்டிலேயே பெரும் நேரத்தினைச் செலவிட்ட அனுபவத்தால், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தனக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்துகொள்வதில் நிபுணர் அப்பா. பலரும் உதவிக்கு ஆள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இவரோ பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பாறை அல்லது மரத்தின்மீது விறகுக்கட்டினை தூக்கி நிறுத்தி தனியாகவே தூக்கிவிடுவார்.

எஸ்டேட் தொழிலாளிகள்

கல்யாண / சடங்கு / விறகு வெட்டப் போகமுடியாதவர்களின் வீடுகளுக்காகவும், டீக்கடைகளுக்கும், மழைக்காலத்திற்கு முந்தைய சூழலில் சொந்த தேவைக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் என, குறைந்தது பத்து கட்டு விறகுகளையாவது உடைத்து சுமப்பார். வெளி ஆட்களுக்கு வெட்டும்போது, கடைசியாக விறகு வெட்டச்சென்ற 2000 ஆண்டு வாக்கில், அப்பாவுக்குக் கிடைத்த தொகை, ஒரு கட்டுக்கு ரூபாய்.20/-!

மழை இல்லாத நாட்களில், தேயிலைக்காட்டில் வேலை பார்க்கும் ஆண், பெண் இருபாலருக்கும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் அருகிலிருக்கும் சோலைக்குள் விறகு சேகரிக்க விரைவதென்பது வாடிக்கையான ஒன்று. விறகுக்கட்டினை வீட்டுக்குச் செல்லும் வழியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சென்று வைத்துவிட்டு ஒரு மணிக்குள் காடு திரும்புவார்கள். போதிய நேரமில்லாத பட்சத்தில், விறகுக்கட்டை அந்த காட்டிலேயே வைத்துவிடுவார்கள். சாயங்காலம் வேலைமுடிந்து வீடு செல்லும்போது எடுத்துச்செல்வர்.

எஸ்டேட்டில் விறகுக்குச் செல்வதென்பது கிராமங்களில் ஒடமரங்கள் வெட்டுவது போல் எளிதல்ல. பல அபாயங்களும் நிறைந்தது. ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் விறகு வெட்டச்சென்ற நாலுமுக்கைச் சேர்ந்த தொழிலாளி பாலன், மீண்டும் வேலை துவங்கும் ஒரு மணி ஆன பின்னரும் திரும்பவில்லை. பக்கத்தில் வேலைசெய்த தொழிலாளி சோலைக்குள் சென்று தேடியபோது, காட்டெருமை முட்டி பாலன் இறந்துகிடந்ததைக் கண்டார்.

மதிய உணவு இடைவேளையொன்றின் போது காட்டுக்குள் விறகு பிறக்கச் சென்றார் அம்மா. மரத்திலிருந்து ஒடிந்துவிழுந்து, கைக்கு எட்டா உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சுள்ளியை பாறை மீதேறி எடுக்க முயற்சித்தபோது, தடுமாறி கீழே விழப்போனவர், கையை பின்னால் கொண்டுபோய் எதையோ பிடித்து, விழாமல் தற்காத்துக் கொண்டார். மரக்கிளை போன்றல்லாமல் வழுவழுப்பாக இருப்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்தால் அம்மா பிடித்திருந்தது ஒரு யானையின் தும்பிக்கையை! மூச்சைப் பிடித்துக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் சோலைக்குள்ளிருந்து ஓடி, அவருடன் விறகுக்குச் சென்ற சக தொழிலாளிகளையும் சைகையால் எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றினார். தடகளப் போட்டி வீராங்கனையான அம்மாவின் ஓட்டவேகம் அவர் உயிர்பிழைக்க கைகொடுத்த தருணம் அது!

எஸ்டேட் தொழிலாளிகள்

எஸ்டேட்டிலிருக்கும் தேயிலைத் தொழிற்சாலையில் தேயிலை பதப்படுத்துவதற்கு விறகு அடுப்புதான் பயன்படுத்தப்படும். அதற்கான விறகுகளை கொண்டுவருவதற்கு அங்கிருக்கும் மேஸ்திரியிடமும், கங்காணிகளிடமும் எஸ்டேட் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துகொள்ளும். ஒப்பந்தம் பெற்றவர்கள் தற்காலிகத் தொழிலாளிகளை பயன்படுத்தி விறகுகளை வெட்டவைப்பார்கள். வனத்துறைக்குப் பயந்து முழு மரத்தையும் வெட்டாமல், மரத்தில் ஏறி கிளைகளை மட்டும் வெட்டி அவைகளை நான்கு அடி நீளத்திற்கு வெட்டி, சுமந்து அங்கிருக்கும் சாலையோரங்களில் கொண்டுவந்து சேர்ப்பார்கள். அவ்வப்போது அவைகளை டிராக்டர் அல்லது லாரிகள் மூலமாக எடுத்துச்செல்லும் கம்பெனி.

2005ஆம் ஆண்டு நாலுமுக்கில் 12ஆம் காட்டுக்கு மரம் வெட்டும் ஒப்பந்த வேலைக்குச் சென்றார் தொழிலாளி போஸ். ஒரு மரத்தில் ஏறி, அதன் கிளையை வெட்டிக் கொண்டிருந்தபோது, மரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். அதுபோன்ற ஒப்பந்த வேலையில் ஈடுபட்ட தொழிலாளிகளில் ஒருவர் சாக்ரடீஸ். 19.04.2015 அன்று விறகுக்காக வெட்டிய மரம் பக்கத்து மரத்தில் சாய்ந்தது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சாக்ரடீஸ் மீது அம்மாரம் விழுந்ததில் அந்த இடத்திலேயே இறந்து போனார்.

மழைக்காலத்திற்கு முன்னரே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விறகுகளை எஸ்டேட் மக்கள் சேகரித்துவிடுவார்கள். மரக்கட்டைகளை சின்னச்சின்ன ‘சிராய்’களாக வெட்டி வெயில்வரும் நேரங்களில் முற்றத்தில் காயப்போடுவோம். ஒவ்வொரு வீட்டிலும் குசினியில் அடுப்புக்கு மேலே மரக்கம்புகளைக் கொண்டு ‘அட்டளை’ கட்டி, அதில் விறகுகளை அடுக்கி வைத்திருப்போம். அட்டளையில் அடுக்கிய விறகுகள், கீழே அடுப்பிலிருந்து வரும் வெப்பம் மற்றும் புகையில் நன்கு உலர்ந்து காய்ந்துவிடும். பின்னர் தீ எரிக்க எடுத்தால் நன்றாக எரியும்.

பக்கத்து வீட்டு விஜயா அத்தை உள்ளிட்ட அங்குள்ள பெண்கள் பலரும் ஆண்களுக்கு நிகராய் கோடாலி கொண்டு விறகு உடைப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கு அடுப்பு எரிக்க விறகு மட்டுமே ஒரே வழி என்ற போதிலும், வனத்துறையின் அவ்வப்போதைய அடக்குமுறைகளின் காரணமாய், கம்பெனி தனது தொழிலாளிகளில் ஒருவரான கொச்சுபொடியன் மாமாவை பாதுகாவலராக நியமித்தது. ஒருமுறை அப்பாவுடன் விறகு வெட்டச்சென்றிருந்த போது, எங்களிடமிருந்த கத்தி, கோடாரியை அவர் கைப்பற்றிச்சென்றார். பின்னர் படாத பாடுபட்டுத்தான் அவைகளை மீட்க முடிந்தது. அதுபோன்ற நெருக்கடிகளுக்கும் பயந்தபடியேதான் காட்டுக்குள் விறகுக்குச் செல்லமுடியும்.

எஸ்டேட் தொழிலாளிகள்

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வேளையில், ஒருநாள் நண்பர்களுடன் காட்டுக்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த யானையைப் பார்த்து பயத்தில் புல்லுக்குள் கத்தியை ஒளித்து வைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டோம். மறுநாள் சென்று தேடியபோது கத்தியை வைத்த இடம் மறந்து போயிருந்தது. கத்தியுடன் போகாவிட்டால் வீட்டில் பூசை என்ற, யானையைக் கண்ட பயத்துக்கு நிகரான பீதியில் வெகுநேரம் தேடிய பின்னரே கிடைத்தது. எஸ்டேட்டில் கத்தியும், கோடாலியும் அத்தியாவசியக் கருவிகள். நினைத்த மாத்திரத்தில் ஒரு கத்தியை வாங்கிவிடும் சூழலும், பணவசதியும் இல்லாததால் கத்தியெல்லாம் விலைமதிக்கமுடியாத உபகரணங்கள் எங்களுக்கு.

கேஸ் அடுப்பு 2000த்தின் துவக்கத்திலேயே எஸ்டேட்டில் அதிகாரிகளின் வீடுகளுக்கு வந்துவிட்டாலும், 2003 வாக்கிலேயே தொழிலாளர் குடியிருப்புகளுக்கு பரவலாக வந்தடைந்தது. வழக்கம் போல கம்பெனியே கேஸ் அடுப்பையும் விநியோகம் செய்ததுடன், அதற்கான எரிபொருளையும் எஸ்டேட்டிலேயே கிடைக்கச்செய்தது. அதற்கான கட்டணத்தை சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளும். கேஸ் அடுப்பு வீட்டுக்கு வந்த பின்னரும் விறகு அடுப்பையும் தொடர்ந்து பயன்படுத்தியே வந்தோம்.

கேஸ் பயன்படுத்துவதன் மூலமாக ஏற்படும் கூடுதல் பொருளாதாரச் செலவைக் குறைப்பது பிரதான நோக்கம் என்றாலும், எஸ்டேட் பகுதியில் பெய்யும் அடை மழை, வீட்டுக்குள் சாதாரணமாக வந்து குளிர் காய்ந்துவிட்டுச் செல்லும் மஞ்சு மூட்டத்திலிருந்து, மக்களையும், வீட்டையும் வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள விறகு அடுப்பே உதவும். விறகு அடுப்பு சமையலின் பிரத்தியேக மணத்தையும், அடுப்பின் வெப்பம் தரும் வெதுவெதுப்பினையும் ஒருபோதும், கேஸ் அடுப்புகளால் தர இயலாது.

மாஞ்சோலை

குளிக்க என்றல்ல, கை, கால், முகம் கழுவ வேண்டுமென்றாலே வெந்நீர் இல்லாமல் முடியாது. வீடுகளில் சர்வ காலமும் வெந்நீர் பானையொன்று அடுப்பில் காய்ந்துகொண்டே இருக்கும். இதற்கெல்லாம் எரிவாயு அடுப்பு கட்டுப்படியாகாது என்பதால், இப்போதும் அங்கிருக்கும் தொழிலாளர்கள் காட்டுக்குள் விறகு பிறக்கச் சென்றே ஆகவேண்டும்.

மாஞ்சோலை செல்வகுமார்,

இராபர்ட் சந்திர குமார், ஜெயராணி, கார்த்திக்



from Latest news https://ift.tt/a63pmEe

Post a Comment

0 Comments