https://gumlet.vikatan.com/vikatan/2023-11/52e7528e-0928-4184-90cf-97b3de2fbc49/WhatsApp_Image_2023_11_30_at_07_42_46.jpeg?w=280ஈரோடு: தலித் இளைஞர்கள்மீது தாக்குதல்... போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சிகள் - என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பொலவக்காளிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த இளைஞர்மீதும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர்மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதிய வன்மத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலித் அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்றன. அதேபோல், `நாங்கள் வளர்த்து வரும் கோழிகளைத் திருடியதால்தான், இருவரையும் தாக்கினோம். சாதி வன்மம் இதில் இல்லை' எனக் கூறி, தங்கள்மீது வழக்கு பதிவுசெய்ததற்காக, வெங்கமேடு மக்களும் சாலைமறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன நடந்தது என்று விசாரித்தோம். இதுதொடர்பாக தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசுகையில், "கடந்த 20-ம் தேதி தலித் இளைஞர்கள் இருவர் வெங்கமேடு அருகேயுள்ள தண்ணீர் டேங்க் கீழே அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். போதை அதிகமானதால், இளைஞர்களில் ஒருவரால் வண்டியை ஓட்ட முடியவில்லை.

தாக்குதல்

அப்போது, அங்கு வந்த வெங்கடேஷ் என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர், அவர்களின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். போதை தெளிந்தவுடன் வெங்கடேஷிடம் சென்று அந்த இளைஞர்கள் தங்கள் வண்டியைக் கேட்டிருக்கின்றனர். அப்போது, அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி, `எங்க ஊருல வந்துதான் தூங்குவியா' என வெங்கடேஷ் திட்டியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தலித் இளைஞர்கள் இருவரையும், வெங்கடேஷ், கண்ணுச்சாமி, சசிகுமார் உள்ளிட்டோர் சேர்ந்து தாக்கியதுடன், அவர்களை கரும்புக் காட்டுக்குள் அழைத்துச் சென்று கம்பியால் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அதில் ஓர் இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்களை மிரட்டி, கோழி திருட வந்ததாகப் பேச வைத்து வீடியோவும் எடுத்திருக்கின்றனர்" என்றனர்.

வெங்கமேடு பகுதி மக்கள் பேசுகையில், "எங்கள் கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கோழி, ஆடு, மாடு திருட்டு நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. 20-ம் தேதி நள்ளிரவு பழனியம்மாள் என்பவரின் வீட்டில் வளர்த்து வரும் கோழிகளை அந்த இளைஞர்கள் இருவரும் சேர்ந்து திருடியிருக்கின்றனர். இதைப் பார்த்த பழனியம்மாள் அளித்த தகவலையடுத்து, கிராம மக்கள் சேர்ந்து இருவரையும் துரத்தியிருக்கின்றனர். கரும்புக் காட்டுக்குள் நுழைந்த இருவரையும் கிராம மக்கள் பிடித்து, தாக்கியிருக்கின்றனர். அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கவில்லை. சில அமைப்பினர் பண ஆதாயத்துக்காக இதை ஊதிப் பெரிதாக்குகின்றனர்" என்றனர்.

சிகிச்சை

இது குறித்து போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``தாக்குதலுக்குள்ளான இளைஞர்களில் ஒருவர்மீது கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் இருக்கின்றன. முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதால், இது குறித்து எதுவும் சொல்ல முடியாது. பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், கோழிகளைத் திருடியதாக தலித் இளைஞர்கள் இருவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தங்கள் இருவரையும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக தலித் இளைஞர்கள் அளித்த புகாரின்பேரில் கண்ணுச்சாமி, சசிகுமார் உள்ளிட்ட 20 பேர்மீது, எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/gopyDiG

Post a Comment

0 Comments