https://gumlet.vikatan.com/vikatan/2024-01/e217b8c1-7603-4fef-a284-52ee2d52acf0/65af58ae8e4a3.jpg?w=280புதுச்சேரி: `அமைச்சர் நமச்சிவாயம் கட்சி மாறுவதில் ஏழாம் இடத்தில் இருக்கிறார்’ - வைத்திலிங்கம் எம்.பி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான வைத்திலிங்கம், ``எதிரணியில் இருக்கும் வேட்பாளர் நமச்சிவாயம், `ஜம்ப்’ செய்வதில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நான் ஓரமாக அமர்ந்து இருப்பேன் என்று கூறுகிறார். கடந்த 2014-ல் முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்து அனுப்பினாரே ஒரு எம்.பி. அவர் கடைசி வரிசையில், கடைசி இடத்தில் உட்கார்ந்து இருந்தார். அதிலும் அந்த இடத்தில் இருக்கும் ஒரு தூணும் அவரை மறைத்துவிடும். ஆனால் அதுகூட முதல்வருக்கு தெரியாது. பா.ஜ.க எம்.பியாக இவர் சென்றால், இவருக்கு பேசுவதற்கே வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். ஒரு மசோதா மீது 4 மணி நேரம் விவாதம் நடைபெறும். அந்த நேரத்தை கட்சி ரீதியாக பிரித்து கொடுப்பார்கள். மூன்று சுற்று வரை உறுப்பினர்கள் பேசுவார்கள். எதிர்கட்சிகளுக்கு அரை மணிநேரம் கொடுத்தனர். கட்சி எனக்கு இரண்டு நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தது, பேசினேன்.

ரங்கசாமி - நமச்சிவாயம்

ஆனால் அந்த மூன்று சுற்றுகளிலும் இவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு தர மாட்டார்கள். பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்திற்கே அவரது வெற்றியின் மீது சந்தேகம் இருக்கிறது. அதனால்தான் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. இவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றால், மாநில அமைச்சர் பதவியை விட்டுவிட வேண்டியதுதானே ? வருமோ வராதோ… கிடைக்குமோ கிடைக்காதோ… இந்த பதவி போனால் அந்த பதவி வருமா என்பதில் அவருக்கு பெரிய சந்தேகம். அதனால்தான் நான் ஓடினாலும் நாற்காலியோடுதான் ஓடுவேன் என்று ஓடிக் கொண்டிருக்கிறார் நமச்சிவாயம். அவர் பிப்டிக் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதில் என்ன சட்ட சிக்கல் என்று தெரியவில்லை. அந்த பதவியை வைத்துக் கொள்வதற்கு விலக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் பதவி விலகினார் என்று தெரியவில்லை. அடுத்து நான் வயதானவர் என்று கூறுகின்றனர்.

ஆமாம் எனக்கும், முதல்வர்  ரங்கசாமிக்கும் ஒரே வயதுதான். அவரிடம் சென்று, `மாமா உங்களுக்கு வயதாகிவிட்டது நீங்கள் விலகுங்கள்’ என்று நமச்சிவாயம் கேட்க வேண்டியதுதானே? நான் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராவேன், நிதி வாங்கி வருவேன் என்று வாதம் செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க தலைவர்  செல்வகணபதியை ராஜ்யசபா எம்.பியாக அனுப்பினார்களே.. மத்திய அரசு அவருக்கு என்ன கொடுத்தது ? அமைச்சர் பதவி கொடுத்தார்களா? அதுகூட வேண்டாம், ஒரு வாரிய தலைவர் பதவியாவது கொடுத்தார்களா ? அவரையே மதிக்காதவர்கள், இவரை எங்கு மதிக்கப் போகின்றனர் ? மெத்தப் படித்த, ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருக்கும் செல்வகணபதியே நாடாளுமன்றத்தில் பேசவில்லை. இவர் போய் என்ன பேச முடியும் ? இந்த முறை மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிதான் வரப் போகின்றது.

அப்படி இருக்கும்போது இவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் ? கிடைக்காத ஒன்றை கற்பனையாக கூறுகின்றனர். இவர் டெல்லிக்குப் போனால் டீ, காபி மட்டும்தான் சாப்பிட்டு விட்டு வரலாம். உழைப்புக்கு வயது கிடையாது. மனதுதான் வேண்டும். மனது இருந்தால் இளைமை இருக்கும். மனதில் தைரியம் இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இளம் வயதுடையவர் என்றும், நான் வயதானவன் என்றும் கூறினர். ஆனால் நடந்தது என்ன ? அவர் வெற்றி பெற்றால் அவரது கல்லூரியை மட்டும்தான் வளர்ப்பார், புதுச்சேரிக்கு ஒன்றும் செய்ய மாட்டார் என்று முடிவெடுத்த மக்கள், என்னை வெற்றி பெற வைத்தனர். நானும் புதுச்சேரி மாநிலத்தின் தேவைகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தி ஒலிக்க செய்திருக்கிறேன்” என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/OlJgqS0

Post a Comment

0 Comments