சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சக்திவேல் பி.டெக் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு, தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். இவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும், ஆத்தூரில் அமிர்தா சேகோ மில் ஒன்றும் இயங்கி வருகிறது. கடந்த ஐந்து வருட காலமாக ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலையை சக்திவேல் தான் கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் சக்திவேலுக்கும் தொழில் ரீதியான கடன் பிரச்னை நிலவி உள்ளது. இதனால் அதிக கடன் வெளியில் வாங்கியுள்ளார். இந்த விஷயம் அவரின் தந்தை குழந்தை வேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. அதிக கடன் காரணமாக ஆத்தூரில் உள்ள மில் தொடர்பாக குழந்தைவேலு கண்டும் காணாதவாறு இருந்து வந்துள்ளார். இதனால் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் சக்திவேல் ரைஸ் மில்லினை தன்வசம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால் அதில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித ஷேரும், குழந்தை வேலுவின் மாமனார் சுந்தரம் என்பவருடைய ஷேரும் இருந்து வந்துள்ளது. வங்கி கணக்குகள் முழுவதும் குழந்தைவேலுவின் பெயரில் இருப்பதால், சக்தவேல் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல் கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, சக்திவேல் குழந்தைவேலுவை தனது இரண்டு கைகளால் முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்துள்ளனர். ஆனால் அவர் கடைசி வரையிலும் மீண்டும் மீண்டும் வந்து குழந்தைவேலுவை கொலைவெறி நோக்கத்துடன் தாக்கியுள்ளார்.
பின்னர் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி ஒருபக்கம் விசாரணை நடத்தி வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தைவேலுவை 16.02.2024 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் எஸ்.பி சியாமளாதேவியிடம் பேசியபோது, "ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி என்பவர் சரியாக விசாரிக்காததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் இந்த வழக்கை மறு விசாரணை செய்யவும், மருத்துவ பரிசோதனையை மீண்டும் ஒருமுறை நடத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் தற்போது இந்த வீடியோ வெளிவந்தது சம்பவத்தன்று கிடைத்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கப்படும். சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த வீடியோ பரவ தொடங்கியதும் சக்திவேல் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Vikatan Latest news https://ift.tt/G7SPYeH
0 Comments