கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக மதுரை மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பெயரில் புதூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீஸார் புதூர் அருகே சர்வேயர் காலனி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது KA 04 AB 5492 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கண்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அப்போது உள்ளே குழந்தைகளுக்கான அழகு சாதன பொருட்கள், கோழித் தீவனம், கால்நடைகளுக்கான மருந்து பெட்டிகள் இருந்துள்ளதும் அதன் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்கள் 94 மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்த கார் மற்றும் சரக்கு வாகனங்களின் மீது சந்தேகம் ஏற்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தபோது கன்டெய்னர் லாரியில் வரும் குட்கா பொருட்களை சில்லறை வியாபாரத்துக்காக வாங்க வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கன்டெய்னர் லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துசென்று அதிலிருந்த 1400 கிலோ கூல் லிப் மற்றும் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கூடவே சில்லறை விற்பனைக்காக வாங்க வந்த வந்தவர்களின் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவருடன் சேர்த்து 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குட்கா பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவிற்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் 1400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/wqLXRrA
0 Comments