https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/j99ejcns/67af838484eef.jpg?w=280ஒன் பை டூ

டி.ஜெயக்குமார்

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“பொறாமையில் பொங்கியிருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க தனது ஆட்சி அதிகாரத்தை, பண பலத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகப் படுகொலை செய்து இடைத்தேர்தலைச் சந்தித்ததால்தான் அ.தி.மு.க., இடைத்தேர்தலைப் புறக்கணித்தது. இன்றும் தமிழக மக்களோடு களத்தில் நிற்பது அ.தி.மு.க-தான். மக்கள் நம்புவதும் அ.தி.மு.க-வை மட்டும்தான். உண்மையில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி, நமது மாநிலத்தைக் கற்காலத்துக்கே கொண்டு சென்றுவிட்டது. மாநிலம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, ரௌடிகள் அராஜகம் என மோசமான நிலை நிலவுகிறது. தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்ட தி.மு.க-மீது பொதுமக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதையெல்லாம் மறைப்பதற்கும், திசைதிருப்பவும் அ.தி.மு.க குறித்து தொடர்ச்சியாகப் பேசிவருகிறார் முதல்வர் ஸ்டாலின். 2021 தேர்தலிலேயே தி.மு.க நூலிழையில்தான் வெற்றிபெற்றது என்பதை மறந்துவிட வேண்டாம். 2026 தேர்தலில், அதிக மெஜாரிட்டியுடன் நாங்கள் வெற்றிபெற்று, ‘கரைந்துகொண்டிருப்பது தி.மு.க-தான்’ என்பதை உங்களுக்குப் புரியவைப்போம்!”

பழ.செல்வகுமார்

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“உண்மையைச் சொல்லியிருக்கிறார் முதல்வர். மக்கள் பிரச்னைகளுக்கு முதல் ஆளாகக் குரல்கொடுக்கவேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. ஆனால், இந்த நான்கு வருடங்களில் அ.தி.மு.க ஒரு பிரதான எதிர்க்கட்சியாக ஒரு முறைகூட உருப்படியாகச் செயல்படவில்லை. சென்னையில், பெருமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில்கூட சென்னையிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களைப் பார்க்காமல் சேலத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். இப்போது ஒன்றிய அரசு, பட்ஜெட்டில் தமிழகத்தை முழுவதுமாகப் புறக்கணித்திருக்கிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்கக்கூட வக்கற்றவர்களாக இருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால், தோல்வி பயத்தில் அரசைக் குறை சொல்லித் தேர்தலைப் புறக்கணிப்பதில் முதல் ஆளாக இருக்கிறது அ.தி.மு.க. ஆக, தமிழகத்தில் மக்கள் மனதிலிருந்து அ.தி.மு.க கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, மிக வேகமாகவே கரைந்துகொண்டிருக்கிறது. ஒரு எதிர்க்கட்சியாக வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் இருப்பது, மக்களுக்கு அ.தி.மு.க செய்யும் துரோகம். இதே நிலைமை நீடித்தால், அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே இல்லாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை!”



from Vikatan Latest news https://ift.tt/dGoLYyq

Post a Comment

0 Comments