சூப், பசியைத் தூண்டக்கூடியது. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம். சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்னை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம். மற்றபடி காய்கறி, கீரை, மூலிகை சூப்களை சாப்பிடலாம். மூலப் பிரச்னை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.
பொதுவாக சூப் தயாரிக்கும் முறை:
எந்த சூப் தயாரிக்க வேண்டுமோ, அந்த காய்கறி 150 கிராம், கீரை எனில், 100 கிராம். மூலிகை எனில், 50 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து நறுக்கி, (ஒரு நபருக்கு) 250 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். மூலிகைப் பொடியாக இருக்கும்பட்சத்தில் 10 கிராம் முதல் 20 கிராம் வரை பயன்படுத்தலாம்.
இதில் சிறிது தக்காளி, வெங்காயம், பீன்ஸ், காரட், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள் எல்லாமும் 50 கிராம் வருமாறு சேர்த்து பசுமை மாறாமல் சூடுபண்ணி, மசித்து வடிகட்டி அருந்தலாம். தேவைப்பட்டால், இந்துப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப், முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு 2 பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி 1, மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால் வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாள்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பூசணிக்காய் சூப்

தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் ஒரு கப், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு, பால் ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு 2 பல், சின்ன வெங்காயம் 4, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். காய் வெந்ததும், எடுத்து அரைத்துக்கொள்ளவும். விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: சிறுநீரகப் பிரச்னைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். உடல் வறட்சி, பித்தக் காய்ச்சல், உள் காய்ச்சல், சரும நோய்கள், சிரங்கு போன்றவை குறையும். நீர்க்கடுப்பு, நரம்புத் தளர்ச்சி, மூலக்கடுப்பு, மூல நோய்கள் மறையும். சர்க்கரை நோய் மட்டுப்படும். இதில் அதிக காரத்தன்மை உள்ளதால் ரத்தம் சுத்தமடைந்து, வியர்வை நாற்றம் மறையும். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால், குணம் கிடைக்கும்.
ஆப்பிள் சூப்

தேவையானவை: ஆப்பிள் 2, எலுமிச்சை சாறு ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை, வெண்ணெய், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பால் ஒரு டம்ளர்.
செய்முறை: வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
காளான் சூப்

தேவையானவை: காளான் ஒரு பாக்கெட், பால் ஒரு டம்ளர், புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு, பிரியாணி இலை 1, மிளகுத்தூள், சீரகப்பொடி, இஞ்சி துருவல் தலா ஒரு டீஸ்பூன், பூண்டு பல் 2, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும். இஞ்சித் துருவல் நசுக்கிய பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளான், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்த காளானை அரைத்து, வேகவைத்த தண்ணீர் மற்றும் பால் சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: அசைவ உணவுக்கு இணையான சுவையும், சக்தியும் கொண்டது. உடலைப் புதுப்பிக்கக்கூடிய சூப் இது. நரம்புகளின் வலிமைக்கும், மலக்கட்டு நீங்கவும் இந்த சூப்பை அருந்தலாம். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.உடல் மெலிந்த குழந்தைகளுக்கு, இந்த சூப்பைத் தொடர்ந்து 20 நாட்கள் கொடுத்துவந்தால் உடல் உறுதிப்படும்.
கார்ன் சூப்

தேவையானவை: வேகவைத்து மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்கள் தலா கால் கப், தக்காளி 1, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பால் அரை கப், கொத்தமல்லித்தழை, புதினா சிறிதளவு.
செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த கார்ன் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்களை ஒரு டம்ளர் நீரில் கலக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பால் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். (குறிப்பு: இந்த சூப்பில், புரோகோலி துண்டுகளைச் சேர்த்து வேகவிட்டும் செய்யலாம்).
பலன்கள்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மார்பகம், தொண்டை, குடல் புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும். மேலும், சோளம் சேர்ப்பதால், செரிமானக் குறைபாடு நீங்கும். ரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சிறுநீரைப் பெருக்கும். மூல நோயாளிகள், சோளத்தை மட்டுமே பயன்படுத்தி, சூப் செய்து சாப்பிடலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news https://ift.tt/w01s5Ub
0 Comments