'கிட்டத்தட்ட எல்லா பிள்ளைங்களுக்குமே சம்மர் ஹாலிடேஸ் விட்டாச்ச்ச்...சு. சில பிள்ளைகளுக்கு ஏப்ரல்ல பத்து, பதினைஞ்சு நாள் ஸ்கூல் இருக்கும். அதுக்கப்புறம், அலாரம் அடிச்சவுடனே கிச்சனுக்குள்ள ஓட வேணாம்; யூடியூப்ல தேடித்தேடி விதவிதமா லஞ்ச் பேக் பண்ண வேணாம்; அப்பாடா... ஒரு மாசத்துக்கு நிம்மதியா இருக்கலாம்' என்று அம்மாக்கள் ஹேப்பி மோட்ல இருக்கிற நேரமிது. 'சம்மர் கேம்ப் போனதுபோக மிச்சமிருக்கிற நாள்கள்ல மாமா வீட்டுக்குப் போகலாமா; சித்தி வீட்டுக்குப் போகலாமா' என்று பொடிசுகள் யோசிக்கிற நேரமும் இதுதான். அப்படி குடும்பத்தோட சொந்தக்காரங்க வீட்டுக்கு கெஸ்ட்டா போறதுக்கு முன்னாடி, அங்க எப்படி நடந்துக்கணும்ங்கிறதுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.

நாம எப்படி சம்மர் ஹாலிடேஸ்க்கு பிளான் பண்றோமோ, அதே மாதிரி அவங்களும் வேற எங்கேயாவது போகணும்னு பிளான் பண்ணியிருக்கலாம். அதனால, 'இந்த சம்மருக்கு நாங்க உங்க வீட்டுக்கு வரோங்கிறதை சொல்றதுக்கு முன்னால, அவங்க என்ன பிளான் வெச்சிருக்காங்கங்கிறதை தெரிஞ்சுக்கிட்டு உங்க பிளானை சொல்லலாம்.
கெஸ்ட்டா ஒருத்தர் வீட்டுக்குப் போகும்போது, நிச்சயமா ஏதாவது தின்பண்டங்களோ, பொருளோ வாங்கிட்டுப் போவோம். அதெல்லாம் அவங்களுக்குப் பயன்படுறதா பார்த்து வாங்கிட்டுப் போனா கொடுக்குற உங்களுக்கும் சந்தோஷம்; வாங்கிக்கிற அவங்களுக்கும் சந்தோஷம்.
உதாரணத்துக்கு, நீங்க கெஸ்ட்டா போகுற வீட்ல வயசானவங்க இருக்கிறாங்கன்னா, அவங்க மூணு வேளைக்கும் மாத்திரைகள் போட்டு வெச்சுக்கிற மாதிரியான பாக்ஸ் வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு குற்றாலம் துண்டு வாங்கிக் கொடுக்கலாம். சென்னையில வாழ்க்கைப்பட்ட பொண்ணு, கிராமத்துல இருக்கிற அம்மா வீட்டுக்குப் போறப்போ, பிறந்த ஊர்ல கிடைக்காத ஏதாவது ஒரு பொருளை சென்னையில இருந்து வாங்கிட்டுப் போகலாம்.

சம்மர் ஹாலிடேஸுக்கு உங்க அம்மா வீட்டுக்குப் போனீங்கன்னா ரெண்டு விஷயத்தை கவனத்துல வெச்சுக்கணும். உங்க அம்மாவோ அல்லது அண்ணன் மனைவி/ தம்பி மனைவியோ 'நீயே/நீங்களே பத்து நாள் ரெஸ்ட் எடுக்கத்தான் வந்திருக்க... அமைதியா உட்காரு/உட்காருங்க'ன்னு ஆத்மார்த்தமா சொன்னா, ஒரு தலகாணி, ஓ.டி.டி-யில லேட்டஸ்ட் மூவின்னு லீவை நல்லா என்ஜாய் பண்ணுங்க. ஆனா, அவங்களே வீட்டு வேலை, ஆஃபீஸ் வேலைன்னு அல்லாடுறவங்களா இருந்தா, வீட்டு வேலைகள்ல பங்கெடுத்துக்கிறதுதான் உறவுக்கு நல்லது. அடுத்த சம்மர் ஹாலிடேஸுக்கும் நல்லது...
ஜூன் மாசத்துல பிள்ளைங்களுக்கு ஃபீஸ் கட்ட வேண்டியிருப்பதால, இந்தக் காலக்கட்டத்துல எல்லா வீடுகள்லயும் சின்னதா பணநெருக்கடி இருக்கும். அதனால, அவங்க நம்மளை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போகும்போதும், ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போகும்போதும், நீங்களும் சரிபாதி செலவழிக்கிறதுதான் சரியா இருக்கும்.

சொந்தக்காரங்க வீட்ல பத்து நாள் தங்கப் போறப்போ, எல்லாராலும் தலைக்கு பத்து செட் டிரெஸ்ஸை தூக்கிட்டுப் போக முடியாது. அதனால, துணி துவைக்க வேண்டி வரும். சொந்தக்காரங்க வீட்ல வாஷிங் மெஷின் இருந்தா, 'வாஷிங் மெஷின்ல நான் துணியைப் போடுறேன்'னு பொறுப்பை நீங்க எடுத்துக்கோங்க. கையாலதான் துவைக்கணும்னா, உங்க துணி உங்க பொறுப்பு..! அதுதான் சரி.
'என் பிள்ளைக்கு இட்லி பிடிக்காது. தோசைதான் சாப்பிடுவான்; அவனுக்கு சாம்பார் பிடிக்கவே பிடிக்காது. சட்னிதான் சாப்பிடுவான்' அப்படிங்கிறதெல்லாம் சொந்த வீட்ல ஓகே. ஆனா, விருந்தாளியா போன வீட்ல அவங்களுக்கு ரெண்டு வேலை வைக்கிறது நல்லாருக்காதில்லையா? அதனால, தோசை சுடுற வேலையையும், சட்னி அரைக்கிற வேலையையும் நீங்களே செஞ்சுக்கலாம்.

எங்க வீட்ல குழம்பு வெச்சாலும், கட்டாயம் ரசமும் வைப்போம் அப்படிங்கிறவங்க, அந்தப் பழக்கத்தை பத்து நாள் தள்ளி வைக்கலாம். இல்லைன்னா, ரசத்துக்கு பதில் தயிர் ஊத்தி சாப்பிட்டுக்கலாம். விருந்தாளியா போன வீட்டு ஆள்களுக்கு வேலையை அதிகப்படுத்தாம இருக்கிறதுதான் விருந்தாளிக்கான நாகரிகம்.
உங்க பிள்ளைங்க சேட்டையா இருந்தாலும், போற வீட்டை தலைக்குப்புற கவுத்திட்டு இருந்தா வேடிக்கை பார்த்துட்டு இருக்காதீங்க. அது நீங்க பிறந்த வீடாகவே இருந்தாலும்...

யதார்த்தமா சொன்னேன்கிற பேர்ல 'ஏன் உன் மருமக ஞாயிற்றுக்கிழமையில லேட்டா எந்திரிக்கிறா; ஏன் உன் மாமியார் நல்லாதானே இருக்காங்க; இந்த வேலையெல்லாம் செஞ்சா என்ன'ங்கிற மாதிரியான கலக வேலைகளை செஞ்சு கெஸ்ட்டா போன வீட்டோட நிம்மதியைக் கெடுத்துட்டு வரக்கூடாது. கடைசி பாயின்ட், அடுத்த வருஷம் எங்க வீட்டுக்கு நீங்க கட்டாயம் வரணும்னு அவங்களுக்கு மறக்காம அழைப்பு வெச்சிட்டு வாங்க.
ஹேப்பி ஹாலிடேஸ்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from Vikatan Latest news https://ift.tt/Y0ucGOU
0 Comments