https://gumlet.vikatan.com/vikatan/2025-04-07/wdply24j/anbil-makes-poyyamozhi.jpg?w=280`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!' - சாடும் அன்பில் மகேஸ்

தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில்,

  "ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறார்கள். இருந்த பொழுதும் தமிழ்நாட்டை முதலமைச்சர் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடும், நம்பர் ஒன் முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள்.

anbil makes

மற்றவர்கள் வீட்டை எட்டிப் பார்ப்பதே ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு வேலையாக போய்விட்டது. முத்தலாக் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் எனக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையூறு செய்வது என்றால் இனிப்பு சாப்பிடுவது போல் உள்ளது. அதை எதிர்த்து ஒரு குரல் ஒலிக்கின்றது என்றால், அது தமிழ்நாடு முதலமைச்சர் குரலாக தான் இருக்கும். திராவிட மாடல் அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஆனால், பக்கத்தை வீட்டை எட்டிப் பார்த்து நாங்கள் செய்கிறோம் எனக் கூறி பா.ஜ.க முதலை கண்ணீர் வடிக்கிறது. இஸ்லாமியர்களையும், இஸ்லாமியர் அல்லாதவரையும் பிரித்து ஆளக்கூடிய சூழ்ச்சியை பா.ஜ.க-வினர் செய்து வருகிறார்கள்.

அனைவரையும் அரவணைக்க கூடிய அரசாக, அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர்கூட இல்லை. தமிழக மக்கள் அறிவில் சிறந்து வளர வேண்டும் என்பதற்காக முக்கியமான மாவட்டங்களில் நூலகங்களை முதலமைச்சர் அமைத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைத்திருப்பதற்கு முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

crowd

இப்படி, அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்ளும் பொழுது தான் எது உண்மையான முகம் எது... போலியான முகம் என்பது அவர்களுக்கு தெரிய வரும். இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆட்சி. வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற வேண்டும்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/lnfYscr

Post a Comment

0 Comments