இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தன் பெயரை பதிவுசெய்துவிட்டு, அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காதாதலும், கன்சிஸ்டன்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததாலும் காலப்போக்கில் வெளியேறிய பிளேயர்களில் ஒருவர்தான் கருண் நாயர். 2016-ல் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயருக்கு, அடுத்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் இந்திய அணியின் கதவு மூடப்பட்டது.
தொடர்ச்சியாக 8 வருடங்களாக இந்திய அணிக்குள் நுழைய கருண் நாயர் போராடி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில்கூட, கடைசி நேரத்தில் டெல்லி அணியால் ஆரம்ப விலை ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டதால், அன்சோல்ட் ஆவதிலிருந்து தப்பித்தார்.
அதைத்தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் படுமோசமாக சொதப்பிக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கு விஜய் ஹசாரே தொடரில் 8 போட்டிகளில் 5 சதங்கள், ஒரு அரைசதம் என 779 ரன்கள் குவித்து பிசிசிஐ-யின் கதவை ஓங்கி தட்டிக் கொண்டிருந்தார் கருண் நாயர். சச்சின் டெண்டுல்கரே கருண் நாயரைப் பாராட்டினார்.
நல்ல ஃபார்மில் இருக்கும் கருண் நாயரை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல் வந்தது. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக பிசிசிஐ அவரைத் தேர்வுசெய்யவில்லை. அப்போதும் மனம் தளராத கருண் நாயர் யாரையும் குறை சொல்லாமல், "இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கு இன்னும் இருக்கிறது" என தன்னம்பிக்கையோடு பேசினார்.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து கருண் நாயர் எப்போது களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் கூடியிருந்தது. டெல்லி அணியில் முதல் 4 போட்டிகளாக கருண் நாயர் இறக்கப்படாமல் இருந்த நிலையில், மும்பைக்கெதிராக சொந்த மைதானத்தில் டெல்லி இன்று (ஏப்ரல் 13) மோதியது. ஐபிஎல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், டெல்லி மைதானத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே 200+ டார்கெட் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருக்கிறது.

ஒருமுறை மும்பை, ஒருமுறை டெல்லி. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 205 ரன்கள் குவித்தபோதே, சேஸிங் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான் என்று தோன்றியது. அதற்கேற்றாப்போலவே, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே டெல்லியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி அழுத்தம் ஏற்படுத்தினார் தீபக் சஹார். அப்போது, இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கினார் கருண் நாயர். 1077 நாள்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரீஸுக்குள் வந்த கருண் நாயர் அப்படியே அந்த அழுத்தத்தை மும்பைக்கே திருப்பிவிட்டார்.
போட்டியின் இரண்டாவது ஓவராக தனது முதல் ஓவரை வீசவந்த ட்ரென்ட் போல்ட்டை அலட்சியமாக பேக் டு பேக் க்ளீன் ஷாட் பவுண்டரி அடித்தார். அடுத்து, தனது முதல் ஓவரை வீச வந்த பும்ராவை, முதல் பந்திலேயே நகர்ந்து மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடித்து வரவேற்றார்.
Nair fire against Bumrah pic.twitter.com/3D6kjyR5lx
— Delhi Capitals (@DelhiCapitals) April 13, 2025
அதோடு, மீண்டும் பும்ரா தனது இரண்டாது ஓவரை வீச, அதிலும் முதல் பந்தை லெக் சைடில் அசால்ட்டாக சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். கருண் நாயர் ஸ்ட்ரைக் வந்தாலே பவுண்டரி, சிக்ஸ் மட்டும்தான். அபிஷேக் போரலும் மறுமுனையில் நின்றுகொண்டு சப்போர்ட் செய்ய டெல்லி அணிக்கு ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் வந்துகொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் கருண் நாயர் சதமடிக்கப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் பாத்துக்கொண்டிருந்த வேளையில்தான், 12-வது ஓவரில் சான்ட்னர் அவரை போல்டாக்கினார். 40 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்ஸ் என 89 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். சதம் மிஸ்ஸாகியிருந்தாலும், இன்றைக்கு கருண் நாயர் அடித்து ஒவ்வொரு பந்தும் நிச்சயம் பிசிசிஐ-யின் கதவை இடித்திருக்கும். கிரிக்கெட் உங்களை கைவிடாது கருண். வெல்கம் பேக் கருண் 3.0!
from Vikatan Latest news https://ift.tt/XZvCYVO
0 Comments