https://ift.tt/aHbZgOp Nambikkai Awards : `சுஜாதாபோல சயின்ஸை யூடியூபில் செய்பவர் Mr.GK' - இயக்குநர் ரவிக்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் இந்த ஆண்டுக்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று (ஏப்ரல் 26) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுது.

2024-ம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள், டாப் 10 இளைஞர்கள் விருது, நம்பிக்கை விருதுகளில் உச்சமாகக் கருதப்படும் பெருந்தமிழர் விருது ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன. விழாவின் உச்சமாக, கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் தோழர், நல்லகண்ணு அவர்களுக்கு 'பெருந்தமிழர் விருது ' வழங்கப்பட்டது.

Mr GK - மாற்றி யோசித்தவர்!

இதில் டாப் 10 இளைஞர்கள் விருதுகளில் மரபார்ந்த பழக்க வழக்கங்களுக்குப் பின்னிருக்கும் மூடநம்பிக்கைகளைக் களைந்து அறிவியலைச் சொல்லித்தரும் சீரான பேச்சுக் கலைஞன். ஆழமாக வகுப்பறைப் பாடம் நடத்தாமல் நண்பன் மாதிரி சினேகத்துடன் தனித்தன்மையுடன் பேசும் மிஸ்டர் ஜி.கே-வுக்கு 'மாற்றி யோசித்தவர்' என 2024-ம் ஆண்டின் டாப் 10 இளைஞர்கள் விருது வழங்கப்பட்டது. 'நேற்று இன்று நாளை', 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இதில் பேசிய Mr. GK, "சிறுவயதிலிருந்து நான் பார்த்து, படித்த விகடன் இதழில் என்னைப் பற்றி மூன்று பக்கங்கள் செய்தி வந்தது எனக்குப் பெருமையான தருணம். யூடியூபில் வரும் எனது வீடியோவை எடுத்துத் தந்தது எனது குடும்பம்தான். இயக்குநர் ரவிக்குமார் சார்தான் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ என சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தவர். அவர் கையால் விருது வாங்கியதில் மகிழ்ச்சி" என்றார்.

Mr. GK- வின் அம்மா, "என் பையன் சிறுவயதிலிருந்தே அறிவாகப் பேசுவான். அவன் அப்பா ஆட்டோ டிரைவர்தான். அவர் பையன் வெற்றியடைவதைப் பார்க்க அவர் இப்போது இல்லை. எங்கிருந்தாலும் எங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்." என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், ``எனக்கு மிகவும் பிடித்தமான சேனல். சயின்ஸ் ஃபிக்‌ஷன் தகவல்களை எளிமையாகச் சொல்வார். சுஜாதா சயின்ஸ் கதைகளை பள்ளியில் படிக்கும்போது நிறைய படிப்பேன். இன்று சுஜாதாபோல சயின்ஸை யூடியூபில் செய்பவர் Mr.GK. அறிவியல் வெளிச்சம் சுடர்விட்டு எரிந்தால், பிற்போக்குத்தனங்கள் எல்லாம் காணாமல்போய்விடும்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/DmAUxi0

Post a Comment

0 Comments