'சென்னை வெற்றி!'
லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக சென்ற சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து தோனி போட்டியை முடித்து வைத்தார். தோனிக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிய தோனி, 'இதை ஏன் எனக்கு கொடுத்தீங்க!' என ஜாலியாகவும் கேட்டிருக்கிறார்.

'வெற்றிக்குப் பின் தோனி பேசியவை!'
தோனி பேசியதாவது, 'ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் வெற்றி ரொம்பவே முக்கியம். துரதிஷ்டவசமாக சில போட்டிகளின் ரிசல்ட் எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும் என நினைக்கிறேன். இப்போது வரைக்குமே எங்களின் பேட்டிங் யூனிட்டை பௌலிங் யூனிட்தான் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.
எங்களின் பேட்டிங் யூனிட் மேம்பட வேண்டும். சூழலினாலோ அல்லது எங்கள் அணியின் காம்பினேஷனாலோ எனத் தெரியவில்லை. நாங்கள் பவர்ப்ளேயில் போதுமான விக்கெட்டுகளை கடந்த போட்டிகளில் எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை. தவறான சமயங்களில் விக்கெட்டுகளை விட்டோம்.
அதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்களும் முக்கிய காரணம். ஏனெனில், சேப்பாக்கத்தின் பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. கடந்த 6 போட்டிகளில் 3 போட்டிகளை அங்கேதான் ஆடியிருக்கிறோம். வெளி மைதானங்களில் ஆடும்போது எங்களின் பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடுகிறார்கள்.

கொஞ்சம் சிறப்பான விக்கெட்டுகளில் ஆடும்போது எங்களுடைய பேட்டர்கள் நம்பிக்கையோடு ஆடுகிறார்கள் என நினைக்கிறேன்.
அணியில் நீங்கள் எந்த கதாபாத்திரத்தை செய்கிறீர்கள் என்பது முக்கியம். வேகமாக விக்கெட்டுகளை விடும் போது நம்முடைய கதாபாத்திரத்தைத் தாண்டி நாம் வேறு கதாபாத்திரத்தை ஏற்க வேண்டியிருக்கிறது. அது பிரச்னையாக மாறுகிறது.
அஷ்வினின் மீது நிறைய அழுத்தங்களும் சுமையும் இருந்தது. அவர் பவர்ப்ளேயில் இரண்டு ஓவர்களை கட்டாயம் வீச வேண்டியிருந்தது. இப்போதைய பௌலிங் அட்டாக் முன்பை விட கொஞ்சம் சிறப்பானது என நினைக்கிறேன். ஷேக் ரஷீத் இன்று நன்றாகவே ஆடினார். அவர் எங்கள் அணியுடன் சில ஆண்டுகளாக பயணித்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வந்தார்.

இந்த ஆண்டு வலைப்பயிற்சியில் வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என இருவரையும் நன்றாக எதிர்கொண்டார். இப்போது அவருக்கு கிடைத்திருப்பது நல்ல தொடக்கம். அவர் இன்னும் ஆதிக்கமாக ஆட வேண்டும். மற்ற ஓப்பனர்களோடு அவரை ஒப்பிட்டுக் கொள்ளாமல் அவருடைய திறனை அறிந்து ஆட வேண்டும்.' என்றார்.
கடைசியாக நீங்கள் எப்போது ஆட்டநாயகன் விருதை வென்றீர்கள் என நிகழ்வை தொகுத்து வழங்கிய முரளி கார்த்திக் கேட்க அதற்கு தோனி, 'இன்று கூட எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தார்கள் என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன். நூர் அஹமது, ஜடேஜாவெல்லாம் கூட நன்றாக பந்துவீசினார்களே!' என ஜாலியாகக் கூறினார்.
from Vikatan Latest news https://ift.tt/MAijlrW
0 Comments