தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க. முத்து உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (ஜூலை 19) மறைந்தார்.
அவரின் உயிரிழப்புக்கு அரசியல் தலைவர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "முதல்வர் மற்றும் துணை முதல்வர் தம்பியைச் சந்தித்து வருத்தத்தைப் பகிர்ந்து ஆறுதல் தெரிவித்தேன்.
அரசியல் கொள்கை நிலைப்பாடுகளைத் தாண்டி உறவு என்று ஒன்று இருக்கிறது.
அழகிரியை அண்ணா என்றுதான் கூப்பிடுவேன். அவர் என்னைப் போடா வாடா என்று செல்லமாகக் கூப்பிடுவார்.
தயாளு அம்மாவை அம்மா என்றுதான் அழைக்கிறேன். பாதை வெவ்வேறாக இருந்தாலும் பாசம் ஒன்றுதானே.
ஒருமுறை வெயில்ல மயங்கி விழுந்தப்போ முதல்வர் உடனே அழைத்து, "உடம்பைக் கவனமாகப் பார்த்துகிறதில்லையா இப்படியா இருப்பது" என்று அன்பாக விசாரிச்சாரு.
அப்பா இறந்தப்போ ஆறுதலா இருந்தாரு. அதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பு.
கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் எதிரெதிராக இருந்தாலும் உம்மன் சாண்டியும் பினராயி விஜயனும் நேரில் அரசியலைத் தாண்டி மக்கள் நலனைப் பேசுகிறார்கள்.

இந்த நாகரிகம்தான் இந்த நிலத்தில் இல்லாமல் போய்விட்டது. இங்கு சாதிய தீண்டாமையை விட அரசியல் தீண்டாமை கொடுமையாக இருக்கிறது.
அது ஒழிக்கப்பட வேண்டும். தாத்தா காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்.
அமெரிக்கா செல்லும்போது நிக்சனை (அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர்) சந்திக்க பேரறிஞர் அண்ணா விரும்புகிறார்.

ஆனால் அவர் அனுமதி தரவில்லை. நிக்சன் இந்தியா வரும்போது காமராஜரைச் சந்திக்க விரும்புகிறார்.
"நம் அண்ணாதுரையைச் சந்திக்க விரும்பாதவரை நாம் ஏன் சந்திக்க வேண்டும்" என்கிறார் காமராஜர்.
ராஜாஜியும் அய்யா ஈ.வே.ரா-வும் கருத்து முரண்களில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் ராஜாஜி இறந்தபோது அதிகமாக அழுதது அய்யாதான்.
கொள்கை கோட்பாடு என்பது வேறு, மனித மாண்பு என்பது வேறு. இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான் இந்த சமூகத்தின் பிரச்னையாக இருக்கிறது." என்று கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3-ம் தேதியும், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 1975 அக்டோபர் 2-ம் தேதியும் மறைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news https://ift.tt/a9JERDW
0 Comments