https://gumlet.vikatan.com/vikatan/2023-11/4b551517-06cb-48ed-94be-036281f2b1e3/6544a092ed9ff.JPG?w=280"இரட்டை வரி; கேரள, கர்நாடகாவின் அதிரடி அபராதம்" - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சொல்வதென்ன?

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
ஆம்னி பேருந்துகள்

இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), "பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை" எனத் தெரிவித்திருக்கிறது.

இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆம்னி பேருந்துகள்

இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிப்பது பற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், "07.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது.

இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள்.

இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 150 ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

கேரளா, கர்நாடகாவில் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
ஆம்னி பேருந்துகள்

ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையான இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு ( 90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00, AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுகுறித்து 10.11.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், (11.11.2025) உயர்திரு போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார்கள்.

மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது மற்றும் இதனால் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், இதைச்சார்ந்து 10000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

கேரளாவில் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
ஆம்னி பேருந்துகள்

அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் விரைவாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்றோம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.



from Vikatan Latest news https://ift.tt/MKYZq2r

Post a Comment

0 Comments