Doctor Vikatan: டூத் பேஸ்ட்டில் ஜெல் வடிவ டியூப்கள் நிறைய வருகின்றன. கண்களைப் பறிக்கும் நிறத்தில் அவற்றைப் பார்த்ததுமே உபயோகிக்கத் தோன்றுகிறது. வழக்கமான வெள்ளை நிற பேஸ்ட் அல்லது கலர்கலரான ஜெல்... இரண்டில் பற்களுக்கு ஆரோக்கியமானது எது... சில டூத் பேஸ்ட், ஜெல்களில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கிறதே... நீரிழிவு உள்ளவர்களுக்கு அது ரத்தச் சர்க்கரை அளவை அதிகப்படுத்துமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
டூத் பேஸ்ட்டா, டூத் ஜெல்லா என்று கேட்டால், பேஸ்ட்தான் சிறந்தது. அதன் சுத்தப்படுத்தும் திறன் ஜெல்லைவிட சிறந்ததாக இருக்கும். பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும். பளபளப்பான கிரிஸ்டல் துகள்கள் சேர்த்தாலும், மின்ட் போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுவதாலும் டூத் ஜெல் என்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது.
ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம் மற்றும் பல் பிரச்னைகளைப் பொறுத்து அ வருக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் சரியாக இருக்கும் என்பதை பல் மருத்துவர் பரிந்துரைப்பார். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எளிதில் சொத்தைப் பல் பிரச்னை வரும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கு ஃப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பரிந்துரைப்பார். அதுவே வயதானவர்களுக்கும், நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும், பல் கூச்சம் பிரச்னை உள்ளவர்களுக்கும் பொட்டாசியம் நைட்ரேட் (Potassium nitrate) அல்லது ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு (Strontium Chloride) உள்ள டூத் பேஸ்ட்டுகளை பரிந்துரைப்பார். எனவே ஒரு டூத் பேஸ்ட் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது.
பொதுவாக டூத் பேஸ்ட்டுகளில் மற்ற சேர்க்கைகளின் வீரியத்தை மட்டுப்படுத்துமபடிதான் சார்பிட்டால் (Sorbitol) என்பதைச் சேர்ப்பார்கள். இது டூத் பேஸ்ட்டுகளில் ப்ரிசர்வேட்டிவ்வாகவும் இனிப்பூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்பட்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடாது. டூத் பேஸ்ட்டோ, மவுத் வாஷோ உபயோகித்ததும் வாய்க் கொப்பளித்துத் துப்பிவிடுவோம். எனவே. அது உடலுக்குள் போக வாய்ப்பில்லை. ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகரிக்க வாய்ப்பில்லை. எந்த பேஸ்ட் சிறந்தது என்பதைவிட முக்கியமானது நீங்கள் எப்படி உங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிக்கிறீர்கள் என்பது. தினமும் இருவேளை பல் துலக்குவதை வழக்கமாக்குவது அதில் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/T21q3k7
0 Comments