https://gumlet.vikatan.com/vikatan/2026-03-27/97xd75ri/GettyImages-10402265381200x768.avif?w=280ஒற்றை மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு - `வனமகன்’ ஜாதவ் பயேங் கதை!

ஒவ்வொரு நாள் தொடங்கும்போது, 'நம்மால் தனியாக என்ன சாதித்துவிட முடியும்?' என்ற சோர்வு வந்தால், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே பெயர் ஜாதவ் பயேங் (Jadav Payeng).

எவ்விதப் பின்புலமும், பண பலமும், பெரிய திட்டமிடலும் இல்லாமல், தனியொரு ஆளாக ஒரு மாபெரும் காட்டையே உருவாக்கிய ஒரு சாதாரண மனிதரின் அசாதாரணமான கதை இவருடையது.

Jadav Payeng
Jadav Payeng

அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள மஜூலி தீவில், மிசிங் என்ற பழங்குடியின சமூகத்தில் அக்டோபர் 31, 1959 அன்று ஜாதவ் பயேங் பிறந்தார்.

குழந்தைப் பருவத்தில் அவரது கன்னங்கள் குளிர்கால முள்ளங்கிப் போல சிவந்து காணப்பட்டதால், அவரை அன்பாக `மொலாய்' (உள்ளூர் மொழியில் முள்ளங்கி என்று பொருள்) என்று அழைத்தனர். இயற்கையோடு இயைந்த ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

அப்போது ஜாதவ் பயேங்கிற்கு வயது 16. பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், எண்ணற்ற பாம்புகளை நதிக்கரையில் இருந்த ஒரு மணல் திட்டுக்கு அடித்துச் சென்றது. வெள்ளம் வடிந்த பின், மரங்களோ நிழலோ இல்லாத அந்தச் சுடும் மணல் மேட்டில் தகிக்கும் வெப்பம் தாளாமல் நூற்றுக்கணக்கான பாம்புகள் கருகி இறந்து கிடந்தன.

Jadav Payeng
Jadav Payeng

இந்தக் காட்சி அந்த 16 வயது சிறுவனின் மனதை ஆழமாகப் பாதித்தது. வனத்துறையினரிடம் சென்று அங்கு மரங்களை நடும்படி கெஞ்சினார். ஆனால், "அந்த மணல் திட்டில் எதுவும் வளராது, வேண்டுமானால் நீயே மூங்கில் செடிகளை நட்டுப்பார்" என்று அவர்கள் அலட்சியமாகக் கூறிவிட்டனர்.

அவர்கள் விளையாட்டாகச் சொன்ன அந்த வார்த்தைதான், உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் புரட்சிகளில் ஒன்றுக்கு வித்திட்டது. அந்த மணல் திட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார். ஆரம்பத்தில் 20 மூங்கில் கன்றுகளை நட்டார். நாளடைவில் மற்ற மரக்கன்றுகளையும் நடத் தொடங்கினார்.

கோடைக்காலத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது கடினமாக இருந்ததால், ஒவ்வொரு செடியின் மீதும் சிறு துளையிட்ட மண்பானைகளைத் தொங்கவிட்டு, சொட்டுநீர்ப் பாசனத்தை அவரே உருவாக்கினார்.

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஒரு மரக்கன்றை நடுவதையும், அதைத் தன் குழந்தை போலப் பராமரிப்பதையும் அவர் தனது வாழ்நாள் தவமாகவே மாற்றிக் கொண்டார்.

Jadav Payeng
Jadav Payeng

அவரது தொடர் உழைப்பால், வறண்ட மணல் திட்டு சுமார் 1,360 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு பிரமாண்டமான அடர்ந்த காடாக மாறியது. (இது நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க்கை விடப் பெரியது!).

2008-ல், யானைகள் கூட்டம் ஒன்று வழிமாறி இந்தக் காட்டிற்குள் வந்தபோதுதான், வனத்துறைக்கே இப்படி ஒரு மாபெரும் காடு இருப்பதே தெரிய வந்தது.

அவரது இந்தத் தன்னலமற்ற மாபெரும் சேவையைப் பாராட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) அவருக்கு `இந்தியாவின் வனமகன்’ (Forest Man of India) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

இந்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான `பத்மஸ்ரீ' விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது. அவரது நினைவாக அந்தக் காடு அதிகாரபூர்வமாக மொலாய் காடு (Molai Forest) என்று அழைக்கப்படுகிறது.

Jadav Payeng
Jadav Payeng

உலகமே கொண்டாடும் ஒரு சாதனையாளராக இருந்தும், ஜாதவ் பயேங் இன்றும் மிக மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துவருகிறார். அவருக்கு பினிதா என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

காட்டிற்குள்ளேயே ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த அவர், 2012-ல் குடும்பத்தினரின் வசதிக்காக அருகிலுள்ள கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார். இருந்தாலும், தினமும் அதிகாலையில் எழுந்து தனது காட்டிற்குச் சென்று மரங்களைப் பராமரிப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார்.

பசுக்கள் மற்றும் எருமைகளை வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து வரும் வருமானத்தில்தான் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இன்றும் வாழ்ந்துவருகிறது.

அவர் உருவாக்கிய மொலாய் காட்டில் இன்று யானைகள், வங்காளப் புலிகள், காண்டாமிருகங்கள், மான்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் பல அரிய வகை வலசைப் பறவைகள் வாழ்கின்றன.

அவர் குறித்த `Forest Man' ஆவணப்படம் உலக அளவில் பிரபலமடைந்த பிறகு, மெக்ஸிகோ போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 70 லட்சம் மரங்களை நடும் திட்டத்திற்கு ஆலோசனை வழங்க அவரை நேரில் அழைத்துள்ளன.

Jadav Payeng
Jadav Payeng

"நீங்கள் மரங்களை வெட்ட விரும்பினால், முதலில் என்னை வெட்டுங்கள். மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது" என்பதே அவரது ஆழமான நம்பிக்கையாகும்.

ஜாதவ் பயேங் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே நாளில் மாற்றிவிட நினைக்கவில்லை. தினமும் ஒரு விதை நட்டார். பொறுமையாகவும், தொடர்ச்சியாகவும் அவர் செய்த ஒரு சிறிய செயல், இன்று பூமியின் வரைபடத்திலேயே ஒரு புதிய காட்டினை உருவாக்கியுள்ளது.

இதுபோல் நம்முடைய கனவு பெரியதோ, சிறியதோ எதுவாக இருந்தாலும், அதற்கான ஒரு சிறிய அடியை இன்று எடுத்து வைக்கலாம். தொடர்ந்து முயற்சித்து; காலப்போக்கில் ஒரு மாபெரும் சாதனையை உருவாக்கலாம்!



from Vikatan Latest news https://ift.tt/WUGA3rx

Post a Comment

0 Comments