https://ift.tt/SKhRkrG நாள்கள் படித்தால் நினைத்தது நடக்கும்' வாசகியின் வாழ்வை மாற்றிய குமாரஸ்தவம் துதிப்பாடல்!

காஞ்சி குமரக்கோட்டம் கோயில்ல பெரியவர் ஒருவர் தந்த சின்ன வழிபாட்டுப் புத்தகமும் அதிலிருந்த துதிப்பாட்டும் என் வாழ்க்கையையே மாற்றின! கடந்த வருடம் என் வாழ்வில் நிகழ்ந்த அந்த அற்புதச் சம்பவத்தை வாசக நண்பர்களிடம் பகிர விரும்புகிறேன்.

சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்

ம் பிள்ளைகளோட வாழ்க்கை தானே நமக்கான பெருங்கனவு. அவங்க நல்லபடியா படிச்சு வேலைக்குப் போகணும். சீரும் சிறப்புமா கல்யாணம்னு நடந்து, அவங்க செட்டிலாயிட்டாங் கன்னா, நமக்கு வெறென்ன வேணும்.

எங்களுடையது கொஞ்சம் கஷ்டப் பட்ட குடும்பம்தான். என்ன... கடவுள் புண்ணியத்துல கடன் இல்லாம வாழ்க்கை ஓடியது. பையனை கஷ்டப்பட்டு படிக்கவெச்சோம். ஐ.டி கம்பெனில வேலை கிடைச்சது. சின்னவள் 9-வது படித்துக் கொண்டிருக்கிறாள். பையனுக்குப் பெண் பார்த்து வைத்திருந்தோம்.

இப்படியான சூழலில்தான், தனியார் நிறுவனத்தில் டிரைவராக இருந்த கணவருக்கு வேலை பறிபோனது. சொல்லிவைத்தது போல் பையன் கம்பெனியிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை. நாங்கள் நிலை குலைந்து போனோம். ஒரே நேரத்தில் குடும்ப வருமானம் அடியோடு தடைப்பட்டால் என்ன செய்வது. பெண் வீட்டிலும் பதில் சொல்லமுடியாத நிலை. தவித்துப்போனோம்.

அடுத்து என்ன என்று யோசிக்கமுடியாதபடி மன அழுத்தம் எங்களுக்கு. பையன்தான் தைரியம் சொன்னான். ``செட்டில்மெண்ட் தொகையை வைத்து இப்போதைக்கு சமாளிப்போம். இதையே யோசிச்சிக்கிட்டு இருந்தோம்னா மனசளவுல ரொம்ப துவண்டு போயிருவோம். வேற விஷயத்துல கொஞ்சம் கவனம் செலுத்துவோமே... எங்கேயாவது டூர் மாதிரி போய்ட்டு வரலாமா’’ன்னு கேட்டான்.

எங்களுக்கும் அது சரியாகவே பட்டது. பக்கத்துல காஞ்சிபுரத்துக்குப் போய்ட்டு வரலாம்னு கிளம்பினோம். `காஞ்சிபுரத்துக்கு போனாக்க... அங்கே காமாக்ஷி, ஏகாம்பரநாதர், குமரக்கோட்டம் முருகன் மூணு பேரையும் தரிசிச்சுட்டு வாங்க... அம்பாள்-சுவாமி- நடுவுல முருகன்னு மூணு கோயிலும் சோமாஸ்கந்த அமைப்புல இருக்கு. மூணு கோயிலையும் தரிசிச்சா ரொம்ப விசேஷம்’னு எங்க பெரியம்மா சொல்லி அனுப்பிச்சாங்க.

பாம்பன் ஸ்வாமிகள்!

நாங்களும் அப்படியே தரிசனம் பண்ணோம். திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை..? நான் மனசார வேண்டிக்கிட்டேன். `ஏதேனும் நல்ல வழி காட்டும்மா தாயே’ காமாக்ஷியையும், அடுத்ததா ஏகாம்பரர் கோயில்லயும் பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்.

குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்குப் போனோம். அங்கே மூலஸாதானத்துல முருகனைப் பார்த்தேனோ, இல்லையோ... மனசு உடைஞ்சு அழுதேவிட்டேன். பிரார்த்தனை எதுவும் வரலை... எதுவும் யோசிக்கத் தோணலை, கேட்கத் தோணலை... கண்ணீர் மட்டும் தாரை தாரையா வழிஞ்சது..!

நாம வாய்விட்டுக் கேட்காட்டியும் அவன் கண் கொண்டு பார்க்காம இருப்பானா நம்ம கஷ்டத்தை! சாமி தரிசனம் முடிஞ்சு பிராகாரத்துல ஒரு ஓரத்துல உட்கார்ந்தோம்.

அப்பதான் அந்தப் பெரியவர் வந்தார். நெற்றி நிறைய திருநீறு. பார்க்கவே தெய்வக்களையோட இருந்தார். என்னை கைகாட்டிக் கூப்பிட்டார். ஏதோ உதவிக்காகக் கூப்பிடுறாருபோலன்னு நானும் சென்றேன். அருகில் சென்றதும்... சட்டுன்னு தனது பையிலிருந்து ஏதோ எடுத்தார்... அதுவொரு சின்ன புத்தகம்.

அதை என்னிடம் கொடுத்தவர் ``நீங்க கோயிலுக்கு வந்ததுல இருந்து கவனிக்கிறேன். நீங்க ஏதோ பெரிய வருத்தத்துல இருக்கறாப்ல தோணுச்சு. இந்தப் புத்தகத்துல இருக்கிற பாட்டு ரொம்ப சக்தி வாய்ந்தது. பாம்பன் சுவாமிகள் எழுதியது. குமாரஸ்தவம்னு பேரு. 44 வரிகள்தான். ஒரு 48 நாள் தொடர்ந்து தினமும் இதைப் படிச்சு பூஜை பண்ணு. எல்லாம் சரியா போகும். முருகன் சந்நிதிக்கு வந்துட்டா... அப்புறம் நமக்கு கவலை ஏது... எல்லாம் அவன் பார்த்துப்பான்’’ எனச் சொல்லிவிட்டுப் புத்தகத்தையும் கொடுத்து விட்டுப் போனார்.

எனக்கு ஓரிரு நிமிடங்கள் எதுவுமே புரியவில்லை. பிறகுதான், அந்த முருகன் தான் பெரியவர் உருவத்துல வந்து கொடுத்துட்டுப் போறாருன்னு தோணுச்சு. அவர் சொன்னபடி தினமும் அந்தப் பாட்டைப் பாடிக் கும்பிடணும்னு அப்போதே முடிவெடுத்துட் டேன். மனசுக்குள்ளும் ஒரு திருப்தி-நிம்மதியா இருந்துச்சு. வீட்டுக்கு வந்த மறுநாளே பெரியவர் கொடுத்த குமாரஸ்தவம் பாடலைப் பாடி வழிபட ஆரம்பித்துவிட்டேன்.

`ஓம் ஷண்முக பதயே நம:’ என ஆரம்பித்து, முருகப்பெருமானோட மகிமைகளைச் சொல்லும் அவனுடைய திருநாமப் போற்றிகள்தான் எல்லாமும் என்று பெரியம்மா மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் புத்தகத்திலும் விவரம் இருந்தது.

தினமும் காலையில் குளித்து முடித்து, எங்கள் வீட்டிலிருந்த திருச்செந்தூர் முருகன் படத்துக்குமுன் விளக்கேற்றி வைத்து, ஆத்மார்த்தமா குமாரஸ்தவம் படித்து வழிபட்டேன்.

``ஒவ்வொரு வரியையும் பாடும்போது பூவால சாமிக்கு அர்ச்சனை பண்ணு’’ன்னு பெரியம்மா சொன்னார். நானும் அப்படியே குமாரஸ்தவம் பாடி, பூக்களால் அர்ச்சித்து பூஜை செய்தேன்.

நைவேத்தியமா முதல் நாள் சர்க்கரைப் பொங்கல் செய்துவைத்தேன். அப்புறம், அடுத்தடுத்த நாள்... பழம், கற்கண்டு என இருப்பதை நைவேத்தியம் செஞ்சு வணங்கினேன். ஒரு 12 நாள் ஆகியிருக்கும். வெளியே போன பையன் சந்தோஷமா ஓடி வந்தான். அவனுக்கு வேறொரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னான். சம்பளமும் பழைய கம்பெனியை விடவும் அதிகம். எனக்கோ, சந்தோஷம் தாங்க முடியலை. கணவர் வந்ததும் விஷயத்தைச் சொல்லணும்னு காத்திருந்தேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க... அவர் ஆட்டோவில் வந்து இறங்கினார். அதுவும் புது ஆட்டோ; அவரே ஒட்டிட்டு வந்தார். வந்ததும் வராத துமா... ``வா.. அப்படியே மயிலாப்பூர் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்... முதல் டிரிப்பு கோயிலுக்கா இருக் கட்டும்’’னார்.

எனக்கு என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியலை. திகைச்சுப்போய் நின்னேன். அவர்தான் விஷயத்தைச் சொன்னார். இவர் வேலை செஞ்ச இடத்துல ஓனருக்கு ரொம்ப விசுவாசமா இருந்தார். ஓனரோட பையன் வந்ததும் நிர்வாகச் சீர்திருத்தம்னு சொல்லி... நிறைய நடவடிக்கைகள் எடுத்தார். அந்த அடிப்படைல பழைய ஆள்களைக் கழித்ததில் இவருக்கும் வேலை போச்சு.

காலைல ஓனர் கூப்பிட்டு விட்டாராம். ரொம்ப வருஷமா இருந்தவராயிச்சே. இவரோட இன்னும் மூணு நாலு பேரு அவரப் பார்க்க வந்திருந்தாங்களாம்.

``பையன் மேல வருத்தப்படாதீங்க... தற்போதய சூழலில் அவன் அப்படிச் செய்றத தவிர வேறு வழியில்லை... ஆனா, நான் சும்மா இருக்க முடியாதே... ஏதோ என்னால முடிஞ்ச உதவி உங்களுக்காக’'ன்னு சொல்லி வந்திருந்தவர்களில் இரண்டுபேருக்கு பணம் கொடுத்து அனுப்பினாராம். ஒருத்தரை தன்னோடயே உதவிக்கு வெச்சுக்கிட்டாராம். இவருக்கு இந்த ஆட்டோவை வாங்கி கொடுத்ததாகக் கணவர் சொன்னதும் நான் தேம்பித் தேம்பி அழுதேவிட்டேன்!

தொடர்ந்து, பையனுக்கு வேலை கிடைச்ச விஷயத்தைக் கணவரிடம் நான் சொன்னதும் அவர் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எல்லாருமா மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்குப்போனோம்

அங்கே சிங்காரவேலர் சந்நிதியில் யாரோ ஒரு பக்தர் ``ஓம் ஷண்முக பதயே நமோ நம:'’ என குமாரஸ்வம் வரிகளை உரக்கப் படித்துக்கொண்டிருக்க, எனக்குள் சிலிர்ப்பு! அதேநேரம் அர்ச்சகர் தீபாராதனை காட்டினார். தீபவொளியில் சிங்கார வேலர் என்னைப் பார்த்து `யாமிருக்க பயமேன்’ எனக் கேட்டுச் சிரிப்பது போலிருந்தது!

நீங்களும் உங்கள் வீட்டில் குமார ஸ்தவம் படித்து, அந்தக் குமரனை மனதார வணங்கி வாருங்கள். கந்தன் அருளால் எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்!



from Vikatan Latest news https://ift.tt/FtzGDg0

Post a Comment

0 Comments