https://gumlet.vikatan.com/vikatan/2024-08-29/nw69e1xe/TNIE_import_2022_6_28_original_Cyber-Attack-Express-Illustrations.jpg?w=280ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி: 72 வயது டாக்டர் 10% லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.12 கோடியை இழந்தது எப்படி?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மோசடிக்குப் பெரும்பாலும் முதியவர்களும், பெண்களும்தான் இலக்காகின்றனர்.

டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் பங்கு வர்த்தகம் இதில் அதிக பங்கு வகிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த 72 வயது டாக்டர் ஒருவர் 10 சதவீத லாபத்திற்கு ஆசைப்பட்டு வெறும் 39 நாட்களில் ரூ.12.31 கோடியை இழந்துவிட்டார்.

இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்வப்னாலி ஷிண்டே கூறுகையில், ''சம்பந்தப்பட்ட டாக்டரின் மொபைல் நம்பர் வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் சேர்க்கப்பட்டது. அந்தக் குரூப்பில் இருந்தவர்கள் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக அளவில் லாபம் கிடைப்பது குறித்து சாட்டிங் செய்தவண்ணம் இருந்தனர்.

டாக்டர் தொடர்ந்து அந்த மெசேஜ்களைப் படித்து வந்தார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. குரூப் அட்மின் கொடுக்கும் பங்கு வர்த்தகம் தொடர்பான தகவல்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக டாக்டர் நம்பத்தொடங்கினார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

இதையடுத்து குரூப் அட்மினை தொடர்புகொண்டு தானும் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார். உடனே குரூப் அட்மின் ஒரு லிங்க் அனுப்பி அதனைப் பதிவிறக்கம் செய்து அந்தச் செயலி மூலம் வர்த்தகம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதோடு ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

டாக்டரும் அதனைப் பதிவிறக்கம் செய்து பங்குகளை வாங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. குரூப் அட்மின் டாக்டரைத் தொடர்புகொண்டு அதிக மதிப்புள்ள பங்குகளை வாங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதோடு தனக்கு பணத்தை அனுப்பி வைக்கும்படியும், தான் உங்களுக்காக அதிக மதிப்புள்ள பங்குகளை வாங்குவதாக டாக்டரிடம் தெரிவித்தார்.

அதோடு குரூப் அட்மின் 8 வங்கிக் கணக்குகளை டாக்டருக்கு அனுப்பி வைத்தார். அந்த வங்கிக் கணக்கிற்கு ஜனவரி 30ம் தேதியில் இருந்து 39 நாட்களில் ரூ.12.31 கோடியை டாக்டர் அனுப்பி வைத்தார்.

ஒவ்வொரு முறையும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.3 கோடி வரை அந்த வங்கிக் கணக்கிற்கு டாக்டர் அனுப்பினார். இதையடுத்து டாக்டருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.54 கோடி லாபம் கிடைத்து இருப்பதாக வர்த்தக மொபைல் செயலி காட்டியது. உடனே அந்தப் பணத்தை எடுக்க பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் குரூப் அட்மின் பங்குகளை விற்பனை செய்ய தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். அதன் பிறகுதான் டாக்டருக்கு இதில் சந்தேகம் வந்தது. உடனே இது குறித்து தங்களிடம் புகார் செய்தார்'' என்றார்.

இதே போன்று புனேயைச் சேர்ந்த 85 வயது பெண்ணை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.97 லட்சத்தை ஆன்லைன் மோசடி கும்பல் பறித்துள்ளது. அவர்கள் அப்பெண்ணிடம் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இது போன்ற ஒரு மோசடியில் ரூ.22 கோடியை இழந்தார். தற்போது நடந்து இருப்பது இரண்டாவது பெரிய மோசடியாக பார்க்கப்படுகிறது.



from Vikatan Latest news https://ift.tt/f13LerM

Post a Comment

0 Comments