Doctor Vikatan: என் வயது 43. எனக்குக் கடந்த சில மாதங்களாக உடல் எடை மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. எடையைக் குறைப்பதற்காக நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படி திடீரென உடல் எடை குறைய என்ன காரணம்... இது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப் பட வேண்டுமா?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

எந்த முயற்சியும் செய்யாமல் திடீரென்று எடை குறைந்தால் நிச்சயமாக மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, வயதானவர்களுக்குத் திடீரென்று எடை குறைந்தால் அதன் பின்னணியில் புற்றுநோய்கூட இருக்க வாய்ப்பு உண்டு.
உணவுப்பழக்கத்தையோ உடற்பயிற்சி செய்வதையோ மாற்றாமல், உடல் எடை குறைந்து கொண்டே வந்தால் அதைத் திட்டமிடப்படாத எடை இழப்பு (unintentional weight loss) என்று மருத்துவத்தில் கூறப்படுகிறது.
6 முதல் 12 மாதங்களுக்குள் உங்கள் எடை 5 சதவிகிதத்திற்கு மேல் குறைந்தால் அது கவலைக்குரியதாகும். குறிப்பாக, 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அது கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
எந்தெந்த வயதில் என்னென்ன காரணங்களுக்காகத் திட்டமிடப்படாத எடை குறைப்பு நிகழலாம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள்: குழந்தைப் பருவத்தில் திடீரென்று எடை குறைய ஆரம்பித்தால், முதலாம் வகை சர்க்கரை நோய் (Type 1 Diabetes Mellitus) அல்லது தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் மன அழுத்தம், பதற்றம், பள்ளியில் கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது வீட்டில் பிரச்னை போன்றவை பசியைப் பாதிக்கலாம்.
குடல்புழுக்கள் மற்றும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary Complex) எனப்படும் குழந்தைகளைப் பாதிக்கும் டிபி நோய் கூட உடல் எடையைப் பாதிக்கும்.

இளம் வயதினர் (18 முதல் 35 வயது வரை): இந்த வயதினர் மத்தியில் மனநலப் பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது. நினைத்த மதிப்பெண்கள் கிடைக்காதது, வேலைவாய்ப்பின்மை, நெருங்கிய உறவினரின் மரணம், விவாகரத்து, வேலையிழப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இவர்களுக்கும் சர்க்கரை நோய், தைராய்டு நோய்கள், டிபி (காசநோய்), எய்ட்ஸ் நோய்கள் பாதிக்கலாம். சில பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தம் கலந்த பேதியை ஏற்படுத்தும் ஆட்டோ இம்யூன் (autoimmune conditions) பாதிப்புகளோ, குடல் புண்களை ஏற்படுத்தும் நோய்களோ இருக்கலாம்.
36 முதல் 60 வயதினர்: வயது அதிகமாக அதிகமாகப் புற்றுநோயைப் பற்றி நாம் அதிகமாக யோசிக்க வேண்டி இருக்கும். இந்த வயதில் மேற்கூறப்பட்ட காரணங்களைச் சேர்த்து, ஊட்டச்சத்தைக் குறைக்கக்கூடிய மதுப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் போன்றவையும் அடங்கும்.
இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரலைப் பாதிக்கும் ஆரம்ப நிலை நோய்கள் பசியையும் ஜீரண சக்தியையும் குறைத்து எடை குறையச் செய்யலாம்.
முதியவர்கள் (65 வயதிற்கு மேல்): இந்த வயதில் பத்தில் ஒரு நபர் புற்றுநோய் காரணமாக எடை இழக்கலாம். மாரடைப்பு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதயத் தசை வலுவிழந்து ரத்தத்தைப் பாய்ச்ச முடியாத நிலை (heart failure) மற்றும் அதிகமாகப் புகைபிடித்ததால் நுரையீரல் பிரச்னைகள், அதிகமாக மது குடித்து கல்லீரல் கெட்டுப்போவது, பற்கள் விழுந்துவிட்ட காரணத்தினால் நன்றாகக் கடித்துச் சாப்பிட முடியாத நிலை, மறதி நோய் (dementia) காரணமாகப் பசியின்மை, கணவனையோ அல்லது மனைவியையோ இழந்து சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் (side effects) போன்றவையும் எடை குறையக் காரணங்களாக இருக்கலாம்.
எளிதாகப் புரிந்து கொள்வதற்காக எடை இழப்பு காரணங்களை வயதிற்கேற்ப வகைப்படுத்தியிருந்தாலும், சில காரணங்கள் எல்லா வயதிலும் ஏற்படக்கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென்று வறுமை நிலைக்குப் போவதால் எல்லா வயதிலும் எடை இழப்பு ஏற்படலாம்.
வளர்ந்துவிட்ட பணக்கார நாடுகளில் காணப்படும் 'அனோரெக்ஸியா நெர்வோசா' (Anorexia nervosa) என்னும் உணவுப்பழக்க நோய் 13, 14 வயதுப் பிள்ளைகளிடம் காணப்படுகிறது.
தற்போது உலகமயமாக்கம் ஆகிவிட்ட காரணத்தினாலும் மேலை நாடுகளின் கலாசாரத் தாக்கத்தினாலும் இந்தியக் குழந்தைகளிடமும் இது ஆங்கங்கே பணக்கார வீடுகளில் காணப்படுகிறது.
திட்டமிடப்படாத உடல் எடைக்குறைவு ஏற்பட்டால் நீங்கள் ஒரு மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும். மருத்துவர் வயதிற்கேற்ப சில பரிசோதனைகளை மேற்கொள்வார். முக்கியமாக ரத்தம், மலம், சிறுநீர் மற்றும் மார்பு எக்ஸ்ரே போன்றவற்றைச் செய்வார்.
மேலும், முழு உடலுக்கான சிடி ஸ்கேன் பரிசோதனைகள் தேவையா என்பதை மருத்துவர் கணித்து அறிவுறுத்துவார். வயதானவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏதும் இருப்பதாகச் சந்தேகித்தால் ஒரு மெல்லிய குழாயில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் இரைப்பையையும் பெருங்குடலையும் சோதிக்கும் (Gastroscopy, Colonoscopy) பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.
திட்டமிடப்படாத உடல் எடைக்குறைவு என்ன செய்யும் என்பது அதன் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்திருக்கிறது. முதியவர்களிடம் புற்றுநோய் அதிகமாகக் காணப்பட்டாலும், மற்ற பெரும்பான்மையான காரணங்கள் ஆபத்தற்றவையாகவோ அல்லது சிகிச்சை அளிக்கக்கூடிய நாள்பட்ட நோய்களாகவே உள்ளன.
இங்கே கூறப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டுமே. எந்தச் சிகிச்சையையும் நீங்கள் நல்ல மருத்துவரைப் பார்த்தே செய்து கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களைப் படித்துவிட்டு மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுவதோ இல்லை நீங்களாகவே பரிசோதனைகள் செய்து கொள்வதோ கூடாது.
டாக்டர் பாஸ்கர்:
இங்கிலாந்தில் 22 வருடங்களாக குடும்பநல மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர். தமிழ்நாட்டில் MBBS, MD படித்துவிட்டு இங்கிலாந்தில் MRCGP பட்டம் முடித்திருப்பவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/EbQgMdv
0 Comments