அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே ஆக்கப்பட்டிருப்பது அவலம். மைக் ஒலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் இந்த ஆணாதிக்கப் பேச்சு, இன்றுவரைக்கும் ஓயவில்லை. சமீபத்தில் அந்த மோசமான வரலாற்று வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா.
சென்ற மாதம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாகப் பேசிய வார்த்தைகள், எதிர்ப்புக்குள்ளாயின. தொடர்ந்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசி கண்டனத் துக்கு உள்ளானார். தற்போது, ஆ.ராசா. அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரை விமர்சிக்கும் நோக்கில் அவர் பேசியுள்ள வார்த்தைகள் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான வெளிப்பாடு.
முன்பெல்லாம் கட்சியின் மூன்றாம் நிலை, நான்காம் நிலைப் பேச்சாளர்கள்தான் இப்படியான தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாச, அறுவெறுப்பு பேச்சுகளில் ஈடுபடுவார்கள். இப்போது தலைவர்களே அந்தளவுக்கு இறங்கிவிட்டார்கள். பெண்களுக்கு எதிராக வெளிப்படும் இதுபோன்ற ஆபாச, அவதூறு, வன்முறை பேச்சுகளுக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை.
இப்படிப் பேசுபவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுவது, அவை கடுமையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பது, பேருக்கு வழக்குப் போடுவது, மிக அரிதாக சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை அவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்குவது என... இவையெல்லாம் இங்கு மீண்டும் மீண்டும் நாம் பார்த்துவரும் வழக்கமான காட்சிகளாகிவிட்டன. ஆனாலும், இந்த அநாகரிக சீரழிவு ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது?
அந்தளவுக்கு அரசியல் கூச்சல்களில் ஆணாதிக்கம் வேரூன்றியுள்ளது. அரசியல் மேடை களில் பெண்களை இழிவாகப் பேசுவது இயல்பாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற பேச்சுகளைக் கைதட்டி ரசித்துச் சிரிக்க கீழே ஆயிரமாயிரம் ஆண்கள் நிற்கிறாா்கள். கட்சித் தலைமைகள் அதைக் கண்டிப்பதில்லை. மாறாக தங்கள் மௌனத்தின் மூலம் அதை ஊக்கப்படுத்துகின்றன.
சக அரசியல்வாதியை எதிர்க்கவோ விமர்சிக்கவோ பல காரணங்கள், வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால், அவர் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதற்குப் பின்னாலிருக்கும் உளவியல், `பெண்ணின் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கினால், சம்பந்தப்பட்ட ஆண் அவமானப்படுவான்' என்ற வக்கிர மனநிலை தான்.
கொள்கைகளும், கருத்துகளும், தர்க்கங்களும், தரவுகளும், கோட்பாடுகளும் மோதிக் கொள்ள வேண்டிய மேடையில், சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை அவர்கள் எளிதான வெற்றியாகப் பார்க்கிறார்கள். இது கேவலமான கோழைத்தனம்.
தன்னை அறிவார்ந்த ஆளுமையாக முன்வைக்கும் ஆ.ராசா போன்ற ஒருவரிடமிருந்து இப்படியான வார்தைகள் வெளிப்படுவது, இன்னும் ஆபத்தானது. தன் கட்சித் தொண்டர்களை இந்தப் பேச்சுக்குத் கைத்தட்ட வைப்பதன் மூலம் அவர் அடுத்த தலைமுறையையும் சீரழிக்கிறார்.
அரசியலில் மட்டுமல்ல, தெருச் சண்டை, வீட்டுச் சண்டைகள் வரை பெண்களை இழிவு படுத்தும் சொற்களுக்குக் கடுமையான கண்டனங்கள், எதிர்வினைகள் ஆற்றப்பட வேண்டும். அதுதான், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னெடுப்பாக இருக்கும்.
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/kApvniB
0 Comments