https://gumlet.vikatan.com/vikatan/2026-09-04/fjxl6m6x/PHOTO-2026-08-18-14-42-35-1.jpg?w=280காலம் கடந்தும் வாழும் ஆசியர் - மாணவர் உறவு! - நாகமலை ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு விதை மண்ணில் விழும் போது அது உடனே மரமாகி விடாது. காலம் அதை வலுப்படுத்துகின்றன. ஆனால் விதையின் உயிர் ஒரு போதும் அழிவதில்லை. அதுபோல் ஒரு ஆசிரியர் மாணவர்களின் மனதில் விதைக்கும் நல்ல எண்ண பண்புகளும், வாழ்க்கை நெறிகளும் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

ஒரு ஆசிரியரின் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம் அவரது மாணவர்களே. காலம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், உண்மையான அன்பாலும் நற்பண்புகளாலும் கட்டியெழுப்பப்பட்ட ஆசிரியர் - மாணவர் உறவு என்பது ஒரு புனிதமான பந்தம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் எனக்குக் கிட்டியது. அண்மையில் நான் எழுதி வெளியிட்ட கதை தொகுப்பு நூலை என்னிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களுக்குப் பரிசாக வழங்க எண்ணினேன். அது ஒரு சாதாரண அழைப்பல்ல. காலத்தின் இடைவெளியைக் கடந்து மீண்டும் உள்ளங்களை இணைக்கும் அன்பின் அழைப்பு.

என்னிடம் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களின் தொடர்பு எண்கள் மட்டுமே இருந்தன. கதை புத்தகத்தின் தலைப்பு ‘துருவ நட்சத்திரங்கள்’ என்பதால் The Guiding Star என்ற தலைப்பில் ஒரு குழுவை Whatsapp-ல் உருவாக்கினேன்.

புத்தகம் பரிசளிக்க விரும்புவதை கூறி உங்கள் நண்பர்கள், உங்களோடு படித்த மாணவர்களின் தொடர்பு எண்கள் பதிவிடக் கூறினேன். ஐந்தே நாட்களில் எழுபத்து மூன்று நபர்கள் குழுவில் இணைந்தனர். நாற்பது மாணவர்கள் வருகை தருவோம் என பதிவிட்டனர். ஜீன் 28ஆம் தேதி ஞாயிறு அன்று சந்திக்கலாம் என அழைப்பு விடுத்தேன். என் அழைப்பை ஏற்று முப்பது மாணவர்கள் வருகை தந்தனர்.

மூன்று வயது குழந்தைகளாக என்னிடம் வந்த அவர்கள் இன்று அவர்களின் மூன்று நான்கு வயது குழந்தைகளின் பெற்றோர்களாக கண்டபோது மனம் மகிழ்ந்தது. குழந்தைகளிடம் என் ஆசிரியர் இவர் என்று பெருமையோடு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினர். என் மாணவர்களில் சிலர் பொறியாளராக வழக்கறிஞராக, சுய தொழிலதிபர்களாக, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக, தணிக்கையாளராக இல்லத்தரசிகளாக பல்வேறு பொறுப்புக்களில் உயர்ந்திருந்தனர்.

ஆனால் என் முன் அமர்ந்திருந்த போது அவர்கள் எந்த பதவியிலும் இல்லை. என் வகுப்பறையில் நான் பேசி அளவிளாவிய மாணவர்களாகவே இருந்தனர். நான் அவர்கள் முன் அமர்ந்திருந்தேன். ஆனால் என் மனம் பழைய வகுப்பறைக்குள் சென்று விட்டது. காலை வணக்கம் சொல்லி எழுந்த மாணவர்கள், சிரிப்புகள், கேள்விகள், விவாதங்கள், கோபங்கள், சில நேரங்களில் கண்டிப்புகள், அதன் பின் ஏற்பட்ட பாசம் என எல்லாமே என் கண்முன்னே வந்து நின்றன.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒரு பெண் உரையாற்றினாள். மேடை பேச்சாளரின் உரையாக இருந்தது. சிறு வயதில் அவளை பேச்சாளராக பயிற்றுவித்தத் தருணங்களே என் கண் முன் வந்தது. உரையில் அவள் கூறிய கருத்து ஒன்றை பகிர விரும்புகிறேன். “பல்லோட்டி பள்ளி நினைவுகள் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களையும் உறங்க விடாமல் செய்கிறது போல. அதன் வெளிப்பாடே இந்த புத்தகம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்ற அவளின் வார்த்தைகள் எத்துணை உண்மையான வார்த்தைகள்.

ஆம், துருவ நட்சத்திரம் என்ற கதை புத்தகம் பல்லோட்டி பள்ளியிலே என் மாணவர்களிடம் நான் கண்ட மனித நேயப்பண்புகளை மையக்கருத்தாக கொண்டு எழுதியதே. அக்கருத்தை அவள் கூறிய போது ஆசிரியர், மாணவர்களின் உள்ளங்களை தொட்ட தருணத்தைவிட ஆசிரியரின் உள்ளத்தைத் தொட்ட மாணவியாக அவள் தெரிந்தாள்.

அந்த நிகழ்வுகள் மிக அழகான தருணம். மாணவர்கள் பகிர்ந்த நினைவுகளின் பல பகிர்வுகள் என் கண்களை கலங்க வைத்தது. குறிப்பாக நான் நடத்திய மதிப்பீட்டுக் கல்வி வகுப்புகள் குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகள்.

‘மேடம் இன்று நான் தன்னம்பிக்கை பெண்ணாக இருப்பதற்கு காரணம் நீங்கள். என் வாழ்வில் நான் சந்தித்த போராட்டங்கள் பல. அதிலிருந்து மீண்டு இன்று நான் செவிலியராக பணிபுரிகிறேன். என் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன். சோர்ந்த போதெல்லாம் நீங்கள் ஊக்குவித்த தருணங்களை நன்றியோடு நினைக்கிறேன்’ என்றாள்.

பல மாணவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

நீங்கள் வழிகாட்டிய பாதையில் நாங்கள் நல்ல மனிதர்களாக வாழ்கிறோம்.

பிறரின் உணர்வுகளை மதிக்கவும் சமூகப் பொறுப்புணர்வோடும் நடக்கக் கற்றுக் கொடுத்தீர்கள்.

தீபாவளி தருணத்தில் நீங்கள் கற்றுக்கொடுத்த எளியோரை தேடிச் சென்று அவர்களின் தேவைகளை இன்றும் பூர்த்தி செய்யும் பணி செய்கிறோம்.

ரத்த தானம் தொடர்ந்து செய்கிறோம்.

முதியோரை மதிக்கிறோம். முதியோர் இல்லங்கள் செல்கிறோம்.

நீங்கள் கற்றுக் கொடுத்த மதிப்பீடுகள் எங்கள் வாழ்வில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எங்களின் தனித் திறமைகளை நீங்கள் ஊக்குவித்ததால் எங்களின் சொந்தக்காலில் நின்று தொழில் செய்கிறோம்.

நான் என்ற அகந்தை நீக்க கற்றுக் கொடுத்தீர்கள் (10 வருடங்களுக்கு முன் நான் சொன்ன கதை கூறி இக்கருத்தை ஒரு மாணவன் கூறினான்.)

அனைத்திற்கும் மேலாக அனைத்து மாணவர்களும் “மேடம் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்ற செய்தி என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்தச் செய்தியை விட ஒரு ஆசிரியருக்கு என்ன உயரிய விருது கிடைத்துவிடும்?

ஒரு ஆசிரியரின் உண்மையான வெற்றி மாணவர்கள் உயர்ந்த பதவிகளை அடைவதில் மட்டுமல்ல. நல்ல மனிதர்களாக வாழ்வதில் தான் உள்ளது. கல்வி என்பது ஓர் புனிதப் பயணம் என்பதை மாணவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

அவர்களின் உரைகளுக்குப் பிறகு நான் மாணவர்களோடு வாழ்ந்த இனிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு மாணவரின் தனித்திறமை, அவர்கள் சந்தித்த சவால்கள், வெற்றிக்காக எடுத்த முயற்சிகள், வகுப்பறையில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள் என பல நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றன. சிரிப்பும் நெகிழ்ச்சியும், நன்றியுணர்வும் கலந்த அந்த சூழல் காலத்தை பன்னிரண்டு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றது.

நான் பள்ளியில் பணி செய்த போது இம்மாணவர்கள் குழந்தைகளாய் எனக்கு அளித்த பிறந்தநாள், ஆசிரியர் தினம், கிறிஸ்துமஸ் தின வாழ்த்து அட்டைகளை மிக பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன் அவ்வாழ்த்து அட்டைகளை மாணவர்கள் கண்டு மகிழ காட்சிப்படுத்தி வைத்திருந்தேன்.

ஆர்வமாய், மகிழ்ச்சியாய் அம்மடல்களை கண்டு மகிழ்ந்தனர். வரைந்த படங்கள் எழுத்துப் பிழைகள், சிறு பிள்ளைகளாய் எழுதிய கையெழுத்து கவிதைகள், வாழ்த்து என அவர்கள் எழுதியதை பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒருவருக்கொருவர் ரசித்துப் பார்த்து சிரித்து கேலி பண்ணி கண்டு மகிழ்ந்தனர். இத்தனை ஆண்டுகளாய் பத்திரமாய் எங்கள் அன்பின் நினைவுகளை அன்போடு பாதுகாத்து வந்ததை பெருமையோடும் நெகிழ்ச்சியோடும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

என் வாழ்க்கைப் பயணத்தில் அந்த நாள் ‘ஒரு நிகழ்வு’ மட்டுமல்ல. என் ஆசிரியர் பணிக்குக் கிடைத்த அரிய அங்கீகாரம். நான் என் புத்தகத்தை பரிசாக அளித்தேன். ஆனால் அதைவிட மிக உயர்ந்த பரிசை அவர்கள் தந்தார்கள். அம்மாணவர்கள் என் மேல் காட்டிய அன்பு மரியாதை நன்றியுணர்வு இன்றும் அவர்கள் உள்ளத்தில் வாழ்கிறேன் என்ற செய்தி, எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. நல் ஆசிரியர் விருது, பாராட்டு மேடைகள் இன்றி நான் மாணவர்களின் மனதில் நல் ஆசிரியராய் வாழ்கிறேன் என்ற பெருமிதம் எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. இந்த மாணவர்கள் சந்திப்பு என் வாழ்நாளில் என்றும் அழியாத பொன்னான நினைவாக நிலைத்து நிற்கும்.ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெறும் போது என் பணியை, கடமையை நிறைவாகச் செய்தேன் என்ற மனநிறைவே என் பணிக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

ஓய்வுபெறும் ஒவ்வொரு ஆசிரியரும் புத்தகக் கல்வியைத் தாண்டி மாணவர்களின் நல் வாழ்க்கைக்கு தான் ஒரு வழிகாட்டியாய் இருந்தோம் என்ற உணர்வை பெறவேண்டும் என்பதே இப்பகிர்வின் நோக்கம்.

ஆசிரியர் தோழமைகளுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

மி. மரிய அமலி

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்

நாகமலை, மதுரை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://ift.tt/mws3pOy

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!



from Vikatan Latest news https://ift.tt/mTxjU9p

Post a Comment

0 Comments