https://gumlet.vikatan.com/vikatan/2023-05/a1e47107-bbd7-4420-9eed-9b94e044b127/IMG_20230522_WA0030.jpg``தமிழ்நாடு அரசு மதுவில் சயனைடு கலந்து கொடுக்கிறது!" - ஆவேசமான பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளில் மிக முக்கியமான ஒன்று இயற்கை வளம். நாட்டின் தென்கோடியான குமரி மாவட்டம், தமிழ்கூறும் நல்லுலகில் சொல்லப்பட்டிருக்கும் ஐவகை நிலங்களில், நான்குவகை நிலங்களை உள்ளடக்கிய மாவட்டம். மாவட்டத்தின் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவது இங்குள்ள ஒவ்வொருவரின் கடமை.

மிக அத்தியாவசியமான விஷயத்தைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் இயற்கை வளங்களை சீண்டி பார்க்கக்கூடாது. துரதிஸ்டவசமாக கன்னியாகுமரி மாவட்ட கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி பகுதியில் ஒரு மலை காணாமல் போய்விட்டது. தோட்டியோடு பகுதியில் மலைகள் உடைக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன. இன்றைக்கு நவீன முறையில் எடுக்கப்படும் கற்கள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் கடமை மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இருக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

நூற்றுக்கணக்கான லோடு கனிமவளங்கள் தினசரி கேரளாவுக்குப் போகிறது. அதைத் தடுக்க ஏன் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிடவில்லை. கேரள மாநிலத்தில் நிறைய மலைகள், ஆறுகள் உள்ளன. ஆனால், அங்கிருந்து எடுக்க விடமாட்டார்கள். கேரள அரசு மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு அமைச்சர் மனோ தங்கராஜ் ஏதோ செக்போஸ்டுக்கு போய் டிராமா போட்டதுபோல் தெரிகிறது. கனிமவள லாரியை யார் அனுமதித்தது, எஸ்.பி என்ன செய்கிறார் எனக் கேட்கிறார். எஸ்.பி, கலெக்டரை சந்திக்கும்போது எத்தனை முறை நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

அமைச்சர் சொல்லியும், அதிகாரிகள் கேட்கவில்லை என்றால் யார் குற்றம். அதிகாரிகளை நீங்கள் இடமாற்றம் செய்வது போன்று, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீங்கள் என்னநடவடிக்கை எடுத்துள்ளீர்கள். படித்தவர்கள் நிறைந்த மாவட்டத்தில் கடப்பாரையால் காதுகுத்தும் வேலை வேண்டாம். செக்போஸ்டில் அமைச்சர் எதற்காகப் போனார்.

செக்போஸ்டில் சிலர் கை நீட்டும் வேலை நடப்பதாகச் சொன்னார்கள். அவர் ஏன் எஸ்.பி-யை உடன் அழைத்துச் செல்லவில்லை. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் கனிமவளங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்.கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் பொய் பேசுவதை விட்டுவிட்டு, களப்பணியில் இறங்க வேண்டும்.

கனிமவள கடத்தலைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த அமைச்சர் இந்த மாவட்டத்துக்குத் தேவை இல்லை எனக் குமரி மாவட்ட மக்கள் போராடும் நிலை ஏற்படும். அதற்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும். காவல்துறை சரியான முறையில் செயல்படாமல் இருந்தால் மாவட்ட எஸ்.பி, கலெக்டர் விளக்கமளிக்க வேண்டும். அமைச்சர் மனோ தங்கராஜ் எதற்கெடுத்தாலும் விவாதத்துக்கு வரத் தயாரா எனக் கேட்கிறார். நாங்கள் விவாதத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறோம்.

பொன்.ராதாகிருஷ்ணன்

சுங்கான்கடைப் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, நான் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் தொடங்கி வைத்தது. அதை இன்னும் அவர்களால் முடித்து வைக்க முடியவில்லை. மார்த்தாண்டம் மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள சாலை குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் போடப்பட்டது. இப்போது அங்கு நெரிசல் அதிகமாக உள்ளது. நான்கு வழிச்சாலையைக் கொண்டுவந்ததாகக் காங்கிரஸ் எம்.பி போஸ்டர் ஒட்டியிருக்கிறார். அனைத்து மத்திய அமைச்சர்களையும் பார்த்து 3 மாதங்களில் வேலையைத் தொடங்குவதாக நான் சொன்னேன். யாரோ கொண்டுவரும் திட்டத்துக்கு இன்சியல் போடும் வேலையைச் செய்யக்கூடாது.

இதற்கு முன்பு பத்தாயிரம், ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட காலங்கள் உள்ளன. டாஸ்மாக், ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது எனக்கூறியதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. குமரி மாவட்ட மதுப் பிரியர்கள் மதுக்கடைகளுக்குப் போவதை நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு மதுவில் சயனைடு கலந்து கொடுக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு உங்களை குளோஸ் செய்ய வாய்ப்பிருக்கிறது. மனித உயிருக்கு விலை பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் தவற்றுக்கு அதிகாரிகளைப் பலிகடா ஆக்கக்கூடாது. எப்படி கள்ளச்சாராயம் உள்ளே வந்தது. இந்தச் சாவுக்கு `நான் பொறுப்பு எடுத்து, நான் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன்' என முதல்வர் கூறியிருக்க வேண்டும். முறையற்ற முறையில் முதல்வர் செயல்படக்கூடாது. வரும் 4-ம் தேதி மோடி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடக்கிறது. அதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகிறார்" என்றார்.



from Latest news https://ift.tt/JLqGtV2

Post a Comment

0 Comments