வனங்கள் நிறைந்திருந்த நீலகிரியில் தனியார் மற்றும் அரசு மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளின் காரணமாக வனங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. இதனால் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நீலகிரியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 3) மாலை இயற்கை உபாதை கழிக்கத் தனியார் தோட்ட புதர் பகுதியில் ஒதுங்கிய இளைஞர் ஒருவர் வேட்டை விலங்கால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தலை மற்றும் கழுத்து பகுதியில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேட்டை விலங்கினைக் கண்டறியக் களத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோகம் குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "ஊட்டி அருகில் உள்ள எடக்காடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 35 வயதான சதீஸ் குமார். தோட்டத் தொழிலாளராக வேலை செய்து வந்திருக்கிறார். சக நண்பர்களுடன் வேலை செய்து விட்டு மாலை வீடு திரும்புகையில் ஊர் அருகில் இருக்கும் புதர் மறைவில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றிருக்கிறார்.
நீண்ட நேரமாகத் திரும்பி வராத சதீஸ் குமாரை நண்பர்கள் தேடிச் சென்றபோது, தலை மற்றும் கழுத்து குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ஊர் மக்கள் மூலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இளைஞரைத் தாக்கியது சிறுத்தையா புலியாக அல்லது கரடியா என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கூறாய்வு முடிவில் உறுதிப்படுத்தப்படும்" என்றனர்.
Vikatan Audio Books
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/VaigainathiNaagarigam
from Vikatan Latest news https://ift.tt/qn1raY0
0 Comments