பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’, சந்தை நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது, வரவேற்பைப் பெற்றுள்ளது.
பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை விதிகள், காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பங்குத் தரகர்களின் ஒழுங்குமுறை தொடர்பான செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ‘மொத்த செலவின விகிதம்’ என்பதில், பத்திர பரிவர்த்தனை வரி (STT), ஜி.எஸ்.டி, முத்திரை வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் செபிக்கான கட்டணம், எக்ஸ்சேஞ்ச் கட்டணம் போன்றவையும் சேர்ந்து, முதலீட்டாளர்களைக் கூடுதலாகவே செலவழிக்கச் செய்தன.
இந்நிலையில், மொத்த செலவின விகிதம் என்பது மாற்றப்பட்டு, அடிப்படை செலவின விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இதன்மூலம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் விலை குறைவாகக் கிடைக்கும்; மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்குவதற்கான செலவும் குறையும். இது முதலீட்டாளர்களுக்குப் பலன் தருவதோடு, மியூச்சுவல் ஃபண்டுகளில் வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வரும்’ என்கிறார்கள், பங்குச் சந்தை நிபுணர்கள்.
இந்த மாற்றங்கள், மக்களை இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், செபியிடம் சந்தையும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் அதி முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது, மோசடிகள் மீதும், மோசடிக்காரர்கள் மீதும் உடனடி மற்றும் தீவிர நடவடிக்கை எடுப்பதே.
ஸ்பெகுலேஷன், உள்வர்த்தகம், போலி நிபுணர்களின் பங்குப் பரிந்துரை, பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் என, பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் மோசடிகள் தொடர்கின்றன; லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
சமீபத்தில், ஃபின்ஃப்ளூயன்சர்களின் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டது, பேசுபொருளானது. குறிப்பாக, அவதூத் சாதே என்ற ஒரே ஒரு ஃபின்ஃப்ளூயன்சரே, ரூ.546 கோடி மோசடி செய்துள்ளார் என்றால், நாடு முழுவதும்?
இத்தனைக்கும், இவர் போன்றவர்கள் எல்லாம் இந்த டிஜிட்டல் உலகில், சோஷியல் மீடியா உள்ளிட்ட தளங்கள் மூலம் தங்கள் முகத்தைக் காட்டியபடியே தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையோரைக் கண்டுபிடிக்கவே இவ்வளவு தாமதம் என்றால், கண்காணாமல் இருந்தபடி மோசடி செய்பவர்களை எப்போது கண்டுபிடிப்பது?
சட்டங்கள், விதிமுறைகளை எளிமைப்படுத்தும் அதேநேரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் செபி நன்கு உணரவேண்டும். மோசடிக்காரர்களை முளையிலேயே கட்டுப்படுத்தி, மோசடிகளை முற்றாக ஒழிக்கத் திட்டமிட வேண்டும். அதுதான், இந்திய பங்குச் சந்தை மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பையும், நல்லதொரு எதிர்காலத்தையும் தரும்-நாட்டின் பொருளாதாரத்துக்கும் சேர்த்தே!
- ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/gk5IQuA
0 Comments