https://gumlet.vikatan.com/vikatan/2025-12-25/2za2px4m/1001325897.jpg?w=280விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 24.04.2013-ம் தேதி ஆறுமுகராஜா தனது தாயார் ருக்மணி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசி மற்றும் அவரின் உறவினர்களான இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து உள்ளிட்ட 7 பேர் ஆறுமுகராஜாவைத் தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

இதில், ஆறுமுகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெறக் கோரி, 5 பேர் ஆறுமுகராஜாவைத் தொடர்ந்து மிரட்டி வந்தனராம். ஆனால், ஆறுமுகராஜா வழக்கினை வாபஸ் பெற மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து மற்றும் ஒரு இளம் சிறார் ஆகியோர் ஆறுமுகராஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 02.04.2015 அன்று இரவில், ஆறுமுகராஜா, அவரது நண்பரான குருமூர்த்தி என்பவருடன் சேர்ந்து புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா பெருமாள் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இசக்கிமுத்து உள்ளிட்ட 6 பேர் ஆறுமுகராஜாவைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி வன்கொடுமைத் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம் சிறார் குறித்த வழக்கு, தனியாகப் பிரிக்கப்பட்டு இளம் சிறார் நீதிக்குழுமத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு, நடந்து வந்த போது துரைமுத்து உயிரிழந்தார். மற்றவர்கள் மீதான விசாரணை நடந்து வந்தது.

வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள்
வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள்

இந்நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் மூன்று ஆயுள் தண்டனை, தலா ரூ.13,000 அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.7,000 அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி வஷித்குமார் நேற்று (24-ம் தேதி) உத்தரவிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூரில் சுமார் 5 ஏக்கரில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலையில் ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக அவரது சகோதரர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வாழைகளை தீ வைத்து கொளுத்துவதற்காக இரண்டு தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து கொளுத்த முயன்றுள்ளனர். ஆனால், பச்சை வாழைகள் என்பதால் தீப்பிடிக்கவில்லை.

ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வாழைகளை வெட்டிச் சாய்த்துள்ளது தெரியவந்தது. கொலை சம்பவத்திற்குப் பிறகு ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வாழை விவசாயத்தைக் கவனித்து வந்துள்ளனர்.

போலீஸார் பாதுகாப்பு
போலீஸார் பாதுகாப்பு

இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தத் தீர்ப்பு வந்ததையடுத்து குற்றவாளிகளின் உறவினர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், தங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆறுமுகராஜாவின் சகோதரர் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெள்ளூர் மற்றும் நவ்வலடியூர் கிராமங்களில் பதற்றம் நிலவி வருவதால், இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கிராமங்களுக்குள் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.



from Vikatan Latest news https://ift.tt/zoAvuDa

Post a Comment

0 Comments