https://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/p3pzxyay/karapura.jpg?w=280சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!

புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது.

சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்
சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்

ராவணனின் சகோதரன் கரதூசனன், ஈச்னை நோக்கித் தவம் செய்தான். அவன் கடுமையான தவம் கண்டு பிரபஞ்சமே நடுங்கியது. ஆனாலும் ஈசனின் தரிசனம் மட்டும் கிடைக்கவில்லை.

கரதூசனன் அக்னி வளர்த்துத் தன்னையே ஆகுதியாக இறைவனுக்குத் தரத் தீர்மானித்தான். அவன் அக்னிக்குள் பாயத் தயாரான தருணம் ஈசன் அசரீரியாக நில் என்று கூறியதோடு அடுத்த கணம் அவன் முன் தோன்றிக் காட்சி அருளினார்.

ஆனந்த தரிசனம் கண்ட கரதூசனன் ஈசனுக்கு பூஜை செய்து மகிழ்ந்தான். கரதூசனன் பூஜை செய்ததால், இந்த இறைவனுக்கு 'கரபுரநாதர்' என்ற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

இங்கு சூரியன், சந்திரன், தேவர், முனிவர் ஆகியோர் நாளும் ஈசனை வணங்கி மகிழ்வர் என்று போற்றுகின்றன புராணங்கள்.

இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்குக் காரணமான திருக்கதை ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்த அர்ச்சகருக்கு ஒருநாள் அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் பூஜை செய்ய முடியாது என்ற நிலையில் தன் மகன் குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். ஈசனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், அவன் உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான்.

`இறைவா! என்னால் மாலை அணிவிக்கமுடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா?’ என மனமார கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான்.

அப்போது ஈசன் மனம் கனிந்து லேசாகத் தலையைச் சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்தக் காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது.

சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்
சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்

இந்தத் தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்; திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனாரை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள்.

சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். மேலும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும், முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் பழைமையை இங்கு உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.

ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் ஔவை பிராட்டியார் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவை பிராட்டியை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை.

தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர் களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதன் பொருட்டு, மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றுகூடிய தலம் இது எனவும் கூறப்படுகிறது.

மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்திலும், சேர மன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டிய மன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.

அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி கோயிலின் பின்புறத்தில், ஆறு சிரங்களையும் பன்னிரு கரங்களையும் கொண்டு மயில் வாகனத்தில் தேவியருடன் அருள்கிறார் முருகன்.

சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்
சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில்

மேலும், இந்தக் கோயிலில் கால பைரவர் சந்நிதி, கரடி சித்தர் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி ஆகியவையும் உள்ளன. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊருக்கு `கைகொடுக்கும் ஊர்’, `பெரியூர்’, `உத்தமசோழபுரம்’ என மூன்று திருப்பெயர்கள் உள்ளன.

திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

வாழ்வில் ஒருமுறையேனும் கரபுரநாதரை வழிபட்டு வருவோம். சிறுவனுக்காக சிரம் சாய்த்த அந்த ஈசன், நமது பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்து அருள்பாலிப்பார்!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை.



from Vikatan Latest news https://ift.tt/qp07GEJ

Post a Comment

0 Comments