https://gumlet.vikatan.com/vikatan/2026-01-10/icf2hmjm/NVThalaiyangamdesktop.jpg?w=280யு.பி.ஐ மூலம் பி.எஃப் பணம்... இனி, ஓய்வுக்கால பாதுகாப்புக்கு ஒரே வழி இதுதான்!

`வருங்கால வைப்பு நிதி’ எனப்படும் பி.எஃப் சார்ந்த நடைமுறைகளை எளிமையாக்கி மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. பி.எஃப் பணம் எடுப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு, ஏ.டி.எம் வசதி, உயர்த்தப்பட்ட வித்ட்ராயல் தொகையைத் தொடர்ந்து இப்போது, யு.பி.ஐ மூலம் பணம் எடுக்கும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதகமும் உள்ளது, சவாலும் உள்ளது.

பணியாளர்கள் பி.எஃப் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட தொகையை, இனி யு.பி.ஐ வசதி மூலமாகவே தங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம். இது ஏப்ரல் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

பணியாளர்கள், வாழ்வின் பெரும்பகுதி கஷ்டப்பட்டு ஈட்டும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, தங்களின் ஓய்வுக்காலத்துக்கு சேமிக்க வழிவகுக்கும் பி.எஃப் கணக்கை, இ.பி.எஃப்.ஓ அமைப்பு செயல்படுத்துகிறது. சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இதற்கெனப் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகைக்கு, தற்போது ஆண்டுக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் கணிசமான தொகையுடன் ஒருவர் ஓய்வுபெறும்போது, பணத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழலாம்.

அதேநேரம், நடுத்தர வர்க்கத்தினர் பலருக்கு பிள்ளைகளின் கல்வி, திருமணம், மருத்துவ அவசரம், வீடு வாங்குவது போன்றவற்றுக்கு பி.எஃப் பணம் தவிர வேறு நிதிமூலம் இருப்பதில்லை. முன்பிருந்த கட்டுப்பாடுகளால், இதற்கெல்லாம் அனுமதிக்கப்பட்ட அளவு பி.எஃப் பணத்தை எடுப்பதே சவாலாக இருந்தது. இப்போது, எடுக்கும் நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டு, அதற்கான செயல்முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இனி, யு.பி.ஐ மூலம் பி.எஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதியால், இன்னும் அதிகமானோர் பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பார்கள். நடைமுறைகளை எளிமைப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும்கூட, பணியாளர்கள் தங்கள் ஓய்வுக்கால சேமிப்பை கரைத்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. ஏற்கெனவே இந்தியா, சேமிக்கும் நாடு என்ற இடத்திலிருந்து, அதிகமாக நுகரும் நாடாகவும், கடன் வாங்கும் நாடாகவும் மாறி வருகிறது. புதிய வருமான வரி நடைமுறையில் சேமிப்பு, முதலீடுகளுக்கான வரிச்சலுகைகள் நீக்கப்பட்டதால் மக்களிடம் அவற்றின் மீதான ஆர்வமும் குறைந்துவிட்டது. இந்நிலையில், பி.எஃப் பணமும் பெரும்பகுதி எடுக்கப்பட்டு விட்டால், ஓய்வுக் காலம் இன்னும் சவாலாகிவிடும். ஆயுள் அதிகரித்துக்கொண்டே வரும் இன்றைய சூழலில், இது பலருக்கும் நிம்மதியற்ற முதுமைக்காலத்தைப் பரிசளிக்கும்.

பி.எஃப் பணம் தொடர்பான அறிவிப்புகளையோ நடவடிக்கைகளையோ, அரசும் இ.பி.எஃப்.ஓ அமைப்பும் மாற்றிக்கொள்வது நடக்காத காரியம். எனவே, தனிநபர்கள் ஒவ்வொருவரும்தான் இதுகுறித்து சுய அக்கறை கொள்ள வேண்டும். பி.எஃப் பணத்தை எடுப்பது எளிது என்பதற்காக, அவசியமற்ற செலவுகளில் அதை தொலைத்துவிடக் கூடாது. ஓய்வுக்காலத்துக்கான அந்த நிதியை, பொறுப்புடன் நிர்வகிக்க நாமே பொறுப்பு.

நம்முடைய ஆயுட்கால சேமிப்பையும், நிம்மதியான ஓய்வுக்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வோம்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/NaMy1Sj

Post a Comment

0 Comments