https://ift.tt/DRbyHJS Vikatan: நுரையீரலில் கோக்கும் சளியை உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட முடியுமா?

Doctor Vikatan: என் நணபனுக்கு 60 வயதாகிறது. அவனுக்கு எப்போதும் சளி பிரச்னை இருக்கிறது.  சளியை அகற்ற மாத்திரைகள் எடுத்தும் குணமாகவில்லை. இந்நிலையில், சளியை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை இருப்பதாகவும் அதைச் செய்துகொண்டால் நண்பனின் பிரச்னை சரியாகிவிடும் என்றும் இன்னொரு நபர் சொன்னார். அது என்ன சிகிச்சை... அது சாத்தியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

நுரையீரல் பகுதியில் சேர்ந்த சளியை எப்படியாவது உறிஞ்சி எடுத்துவிட முடியாதா என்பது நிமோனியா பாதிப்புள்ள பலரும் கேட்கும் கேள்வி. 'முடியாது' என்பதுதான் இதற்கான பதில்.

சளி என்பது சைனஸ் பகுதியிலும் இருக்கலாம்.... நுரையீரலிலும் இருக்கலாம். சைனஸில் இருக்கும் சளிப் பிரச்னைக்கு, இஎன்டி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

பிரதான சுவாசப்பதையான டிரக்கியா (trachea) என்பது இரண்டாகப் பிரியும். அதன்பிறகு அது 23 முறை பிரியும். மேல்பகுதியில் உள்ள நான்கைந்து பெரிய காற்றுப் பாதைகளில், வயதான சிலருக்கு சளி அடைத்துக்கொள்ளும். வயதானவர்கள் சாப்பிடும்போது புரையேறி, அந்தப் பகுதியில் சாப்பாட்டுத் துகள்கள் அடைத்துக்கொண்டு, அதைச் சுற்றி சளி சேர்வதையும் பரவலாகப் பார்க்கிறோம். இதை நுரையீரலுக்கான எண்டாஸ்கோப்பி பரிசோதனையான பிரான்கோஸ்கோப்பி (bronchoscopy) முறையில் உறிஞ்சி எடுத்துவிடலாம். அதாவது சளியால் அல்லது அந்நியப் பொருள் போய் அடைத்துக் கொண்டதால் ஏற்பட்ட சளி பிரச்னையை அகற்ற நவீன மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன.

வயதானவர்கள் சாப்பிடும்போது புரையேறி, அந்தப் பகுதியில் சாப்பாட்டுத் துகள்கள் அடைத்துக்கொண்டு, அதைச் சுற்றி சளி சேர்வதையும் பரவலாகப் பார்க்கிறோம்.

ஆனால், நிமோனியா என்பது நமது நுரையீரலில் உள்ள மிகச்சிறிய, காற்று நிரப்பப்பட்ட பைகளான  ஆல்வியோலியில் (Alveoli ) ஏற்படுகிற பிரச்னை.  அவை மைக்ரான் அளவிலிருக்கும் நுண்ணிய காற்றுப் பைகள். அதில் சளி சேரும்போது, அதை உறிஞ்சி எடுத்துவிடலாம், அப்படி எடுத்துவிட்டால் நிமோனியாவே சரியாகிவிடும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அது சாத்தியமில்லை. நிமோனியாவுக்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால்தான் அது சரியாகும். ஆன்டிபயாடிக் தேவைப்பட்டால் அதைக் கொடுத்துதான் குணப்படுத்த வேண்டியிருக்கும். மற்றபடி குறுக்கு வழிகளில் இதை குணப்படுத்திவிட முடியாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 



from Vikatan Latest news https://ift.tt/ZxCDwOE

Post a Comment

0 Comments