https://gumlet.vikatan.com/vikatan/2023-08/2ced5e9e-b5bc-43ae-b350-5e712e664f80/Untitled_44.jpg?w=280திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் : மாவிளக்கு போட்டு வேண்டிக்கிட்டா மங்கலங்கள் அருள்வாள்!

அன்னை கருமாரி காக்கும் கடவுளாக ஊர்தோறும் இருந்து அருள்பாலித்துவருகிறாள். நோய் நொடிகளில் இருந்து ஊர்மக்களைக் காக்கும் மாரியே உரிய காலத்தில் மழையைப் பெய்ய வைத்து விவசாயம் செழிக்கவும் அருள்பவள். அப்படிப்பட்ட அம்மன் கோயில் கொண்டிருக்கும் தலங்களின் மகிமைகள் அறிந்துகொள்வதே உற்சாகமும் நம்பிக்கையையும் தரும் ஒன்று. வாருங்கள் அப்படி அன்னை ராஜராஜேஸ்வரியாக ஊர்காக்கும் காளியாக நின்று அருள்பாலிக்கும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.

திண்டுக்கல் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன், பாண்டியர்களின் வடக்கு எல்லைக் காவல் தெய்வமாக, ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் கொலுவீற்று இருந்தவள் இந்தத் தாய்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

திண்டி எனும் அசுரனை ஈசன் இங்கு வதம் செய்ததால் இந்த ஊர் ஈசன் திண்டீசன் என்றும் ஆலயம் திண்டீச்சரம் என்றானதாலும் இந்த ஊர் திண்டுக்கல் என்றானதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட திண்டுக்கல்லின் மணிமகுடமாகத் திகழ்வது பத்மகிரி மலை. அந்த மலையின் அரணாகத் திகழ்வது கோட்டை. இதில்தான் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது.

ஜமதக்னியின் தர்மபத்தினியான ரேணுகா தேவி அம்மனே ஆதியில் இங்கு குடியமர்ந்தாள் என்று தலபுராணம் கூறுகிறது. பாண்டியர்கள் காலத்தில் இவள் சீற்றம் குறைந்தது. பிறகு அருள்தரும் அன்னை ராஜராஜேஸ்வரியாக வணங்கப்பட்டாள். பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியர் காலத்தில் இங்கு வெகு அழகான ஆலயம் எழுப்பப்பட்டு விசேஷ வழிபாடுகளும் நடைபெற்றுவந்தன. பாண்டியர்கள் வீழ்ந்து, அந்நியர் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வேளையில் கோயிலும் சிதைந்துபோனது. தற்போது இருக்கும் ஆலயம் சுமார் 250 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள்.

முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 1605-ம் ஆண்டில் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. அப்போதே ஒரு சிறிய கோயில் அமைத்து அங்கு கோட்டை மாரியம்மன் வணங்கப்பட்டாளாம். ஆரம்பத்தில், மண்ணாலான ஒரு பீடம் மட்டுமே இருந்து. பிற்காலத்தில் பலிபீடமும் சிறிய விக்கிரகமும் அமைத்து வழிபடத் தொடங்கினார்களாம்.

ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் இந்தக் கோட்டை முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியப் போர்ப் படை பயிற்சிக் களமாக இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில், இங்கே பயிற்சி வகுப்புகள் நடந்துவந்தன.

தாமரைக்குன்றம், பத்மகிரி, திண்டீச்சரம், நெல்லிவனம் என்றெல்லாம் போற்றப்பட்ட திண்டுக்கல் நகரில் வீற்றிருக்கும் இந்தக் கோட்டை மாரியம்மன், கருவறையில் சுகாசன கோலத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடக்கி, அமர்ந்த கோலத்தில் கோரைப்பற்களுடன் காளியாகவும் அம்மனாகவும் போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களில் உடுக்கை, கத்தி, வேல், அரிவாள், வில், மணி, சூலாயுதம், குங்குமக் கிண்ணம் தாங்கி வீற்றிருக்கிறாள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா

பூமியில் அழுந்திக் காணப்படும் இந்த மாரியம்மனின் விக்கிரகத் திருமேனி, பூமியில் எங்குமே காண முடியாத அபூர்வக் கல்லால் ஆனது என்று அவள் பக்தர்கள் கூறுகிறார்கள். இங்கு விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முனியசாமி, நவகிரக சந்நிதிகள் என பல சந்நிதிகள் உள்ளன. எல்லா அம்மன் கோயில்களிலும் நடப்பதைப் போலவே இங்கும் முளைப்பாரி, பால் குடம் எடுத்தல், அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, மலர்ப் பந்து சாத்துதல், கண் மலர் சாத்துவது, உப்பு-மிளகு கொட்டுவது, தீச்சட்டி சுமப்பது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் ஏந்துவது, மாவிளக்கு வழிபாடு என அனைத்தும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நேர்த்திக்கடனுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். அம்மை வந்துவிட்டால் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி, தீர்த்தம் வாங்கிச் சென்று பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்தால், அம்மை விலகிடும் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.

ரேணுகா தேவி, ராஜராஜேஸ்வரி, மாரியம்மன் என காலம்தோறும் இவள் திருநாமம் மாறினாலும், இவள் கொடுத்த வாக்கு மட்டும் மாறவே மாறாது. இங்கே... ஆடி மாத ஞாயிறு விழாக்களும் மாசி மாதம் 20 நாள்கள் நடைபெறும் திருவிழாவும் விசேஷம். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாக்களின்போது மாரியம்மன் பூ அலங்கார மண்டகத்தில் பவனி வரும் திருக்காட்சி அற்புதமானது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 9, 10, 11 ஆகிய நாள்களிலும் அக்டோபர் 2, 3, 4 ஆகிய நாள்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் கதிர்கள் இந்த அம்மனின் மீது விழுந்து சூரிய வழிபாடு நடப்பதும் இங்கே அதிசயம் என்கிறார்கள்.

கோட்டை மாரியம்மனின் தெப்பத் திருவிழாவின்போது மாரியம்மன் சயன கோலத்தில் அருளுவது இங்கு மட்டும்தான் என்பதும் சிறப்பு.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

அம்மனை வழிபடும் இந்த ஆடி மாதத்தில் வாய்ப்பு இருப்பவர்கள் திண்டுக்கல் சென்று தேவி இவளை தரிசித்து வரலாம். வந்தவர்க்கு வரமும், தன்னை நினைப்பவருக்குத் துணிவும் அளிக்கும் கோட்டை மாரியம்மன் எந்நாளும் எப்போதும் காத்து நிற்கும் குலதேவி என்று இந்த ஊர் மக்கள் சிலிர்ப்பாகக் கூறுகிறார்கள்.

திருமண வரம், குழந்தைப்பேறு, செல்வவளம், தீவினைகள் நீங்க, உத்தியோகம்-பதவி பெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் விளங்க என இவளைத் தேடி வருபவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வேண்டுதல், அவை அத்தனையையும் இவள் ஆயிரம் ஆயிரம் திருக்கண்கள் கொண்டு நோக்கி நிறைவேற்றி வருகின்றாளாம்.

திண்டுக்கல் செல்பவர்கள் தவறாமல் கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்.



from Vikatan Latest news https://ift.tt/6piTeA9

Post a Comment

0 Comments