https://gumlet.vikatan.com/vikatan/2026-07-14/b4v6ezoi/poonthottam.png?w=280திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்: கும்பராசிக்காரர்களுக்கு வளம் தரும் திருத்தலம்!

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சொரூபம். குருவாக அமர்ந்து மௌன உபதேசம் செய்யும் ஆலமர் செல்வனை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தியை கோஷ்டத்தில் தரிசனம் செய்ய முடியும். தட்சிணம் என்றால் தெற்கு. தென்முகம் நோக்கி அருளும் கடவுள் என்பதால் இவரை வழிபட்டுவந்தால் ஞானம் ஸித்திக்கும். அப்படிப்பட்ட தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் ராசி மண்டல தட்சிணாமூர்த்தியாக அமர்ந்திருக்கும் திருத்தலம் மிகவும் விசேஷமானது. வாருங்கள் அத்தல மகிமைகளைக் காண்போம்.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் என்கிற ஊருக்கு மிக அருகில் இருக்கிறது இந்தத் தலம். ஆதியில் இங்கே பூந்தோட்டங்கள் அமைந்திருந்தன. அருகில் இருக்கும் திருவீழிமிழிலை முதலான ஆலயங்களுக்கு இத்தலத்தில் இருந்துதான் மலர்கள் கொண்டு செல்லப்பட்டன. எனவே இந்தப் பகுதிக்கே பூந்தோட்டம் என்கிற திருநாமம் ஏற்பட்டுவிட்டது.

பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

அகத்தியர் தென்பகுதிக்கு வந்தபோது தென்னாடுதோறும் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஈசனுக்கு அகத்தீஸ்வரர் அல்லது அகஸ்தீஸ்வரர் என்கிற திருநாமம் உண்டாயிற்று. பூந்தோட்டத்தில் ஈசன் அகத்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

அகம் என்றால் உள்ளம். நம் அகத்தில் இருக்கும் குறைகளை அறிந்துபோக்கும் ஈசன் இவர் என்பதலும் இவருக்கு அகத்தீஸ்வரர் என்கிற திருநாமம் மிகவும் பொறுந்தும்.

பழைமைவாய்ந்த இந்த ஈசனின் திருமேனி முன்பு நின்றாலே நம் பாவங்கள் அனைத்தும் தீரும். அப்படிப்பட்ட நேர்மறை அதிர்வுகள் உள்ள சந்நிதி இது. ஒருமுறை வந்து வணங்கிவிட்டால் இந்த ஈசன் உங்கள் உள்ளத்தை ஆட்கொள்வதோடு மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்கிற ஆவலையும் வாய்ப்பையும் கொடுப்பார் என்கிறார்கள்.

நிறைய பேருக்கு இந்த ஈசனை வழிபட்டு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கியிருக்கின்றன. குறிப்பாக வறுமை விலக்கும் ஈசன் இவர். குறிப்பாக சொத்துத் தகராறுகள் இருந்தால் அவை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.

இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. 'அறம் வளர்த்த நாயகி' என்பது பொருள். உலக உயிர்களுக்கெல்லாம் அறம் செய்பவள் அவள்தான். அநீதிகளை வென்று நீதியை நிலைநாட்டுபவளும் அவளே. அவள் முன் அனைவரும் சமம். அவளை வேண்டிக்கொண்டால் கேட்கும் வரங்கள் கிடைக்கும்.

குறிப்பாக சுமங்கலிப்பெண்கள் இந்த அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி வலம் வந்து வேண்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருள்வாள். பூந்தோட்டத்தில் அருளும் இந்த அம்பிகைக்கு வளையல் சமர்ப்பித்து வணங்கினால் விரைவில் பிள்ளைவரம் கிடைக்கும்.

பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

இரண்டாம் குலோத்துங்கச் சோழன் திருப்பணி செய்து கொடைகள் வழங்கியதாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. இங்கே பிரகார வலம் வரும்போது சூரியன், விநாயகர், சனிபகவான், பாணலிங்கம், நாகர்கள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட ஐயப்பன், அருகிலேயே மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், துர்கை, நவகிரக சந்நிதி, பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கின்றனர.

தனிச்சந்நிதியில் இருக்கும் சனிபகவானை வழிபட்டால் சகலவிதமான சனி தோஷங்களும் தீரும் என்கிறார்கள்.

இங்கே ராசிமண்ட தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் அருள்கிறார். இங்கே சற்று வித்தியாசமாக ஒரு திருக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கும் திருக்கோலம்.

அந்தக் குன்றில் கும்பம் தவிர்த்த 11 ராசிச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கும்பராசியைக் குறிக்கும் கிரீடத்தை சுவாமி அணிந்திருக்கிறார். கும்பராசியை கிரீடமாகக் கொண்டிருப்பதால் கும்பராசிக்காரர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் வாழ்வில் மேன்மை நிச்சயம் என்கிறார்கள்.

ராசி மண்டலப்பாறை மீது நந்தி வாகனத்தில் மோனநிலையில் எழுந்தருளி உபதேசம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார். அவரின் நான்கு திருக்கரங்களில் பின்னிரு கரங்களில் சர்ப்பமும் அக்னியும் உள்ளன. தட்சிணாமூர்த்திக்கு நேர்மேலே விநாயகப்பெருமான் காட்சி கொடுப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

இந்தத் திருக்கோலம் சகல ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை அருளும் திருக்கோலம். குருவடிவாக இருப்பதால் குருபரிகாரத்தலமாகத் திகழ்கிறது. அதேவேளையில் ராசிமண்டலத்தின் மீது அமர்ந்திருப்பதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிரக தோஷம் தீரும். ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக தோஷம் இருந்தாலும் இங்குவந்து வழிபட்டுச் சென்றல் அனைத்தும் நீங்கும் என்கிறது தலவரலாறு.

பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

கோசாரத்தில் குரு சாதகமாக இல்லாதவர்கள் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. ஆண்டுதோறும் இங்கே குருப்பெயர்ச்சியை ஒட்டி விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டால் குருவின் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். இங்கு தல விருட்சம் மனோரஞ்சித மரம்.

காலந்தோறும் மனோரஞ்சிதமரம் இங்கே இருந்து வந்திருக்கிறது. தற்போது இருக்கும் மரம் சுமார் 200 ஆண்டுகள் பழைமையானது. இந்த மரத்தின் கிளைப் பகுதியைப் பிடித்துக்கொண்டு நாம் என்ன வேண்டுதல் செய்கிறோமோ அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் தலத்துக்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்து மகிழுங்கள். குருவருளால் உங்கள் குலம் விளங்கும் என்றார்கள் பக்தர்கள்.



from Vikatan Latest news https://ift.tt/Q5b1AcF

Post a Comment

0 Comments