ஆசிய விளையாட்டுப் போட்டியின் பத்தாவது நாள் தடகளப் போட்டிகளில் இந்தியா சிறப்பான பதக்க வேட்டையை நடத்தியுள்ளது. நீளம் தாண்டுதல், 1500 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தடை ஓட்டம், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (Steeplechase) உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் வித்யா ராம்ராஜ் முறியடித்த 42 ஆண்டுகால தேசிய சாதனை மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

வெள்ளிப் பதக்கங்களைக் குவித்த ஸ்ரீசங்கர் மற்றும் குல்வீர் சிங்
ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.07 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ஷி யுஹாவ் 8.17 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்ரீசங்கரும் உஸ்பெகிஸ்தானின் அன்வர் அன்வரோவும் 8.07 மீட்டர் என்ற ஒரே அளவைப் பதிவு செய்த நிலையில், கவுண்ட்பேக் முறை அடிப்படையில் ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றுள்ளார்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் 3:36.72 விநாடிகளில் இலக்கைக் கடந்து தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்து வெள்ளி வென்றார்.

ஜப்பானின் கசுடோ ஐசாவா 3:36.35 விநாடிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். ஏற்கனவே 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்த குல்வீர் சிங்குக்கு, நடப்பாண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இரண்டாவது பதக்கமாகும்.

ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம்
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. யாஷ்வீர் சிங் 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இலங்கையின் ரூமேஷ் தாரங்கா தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் ஒரே ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப்போட்டியில் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலம் வென்றார். அதே போட்டியில்,
பி.டி. உஷா கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதிவு செய்த 55.42 விநாடிகள் என்ற தேசிய சாதனையை வித்யா முறியடித்துள்ளார்.

நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏற்கனவே உஷாவின் சாதனையைச் சமன் செய்திருந்த வித்யா, தற்போது 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். இதே போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை அனுராகவன் 55.88 விநாடிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். மேலும், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பருல் சௌத்ரி வெண்கலம் வென்றார். இதன்மூலம் தடகளப் போட்டிகளில் மட்டும் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குராஷ் போட்டிகள்
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியின் கடைசி கட்டம் வரை பதக்கத்துக்கான கடும் போட்டியில் இருந்த ஈஷா, சூட்-ஆஃப் முறைக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையே, குராஷ் பெண்களுக்கான 78 கிலோ எடைப் பிரிவில் பிங்கி பல்ஹாரா வெண்கலம் வென்றார். இதன்மூலம் பத்தாவது நாளில் மட்டும் இந்தியா மொத்தம் 8 பதக்கங்களைச் சேர்த்துள்ளது.

பதினோறாவது நாளுக்கான தடகள எதிர்பார்ப்புகள்
பதினோறாவது நாளிலும் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்க வாய்ப்புகள் உள்ளன. ஆடவருக்கான 5000 மீட்டர் இறுதிப்போட்டியில் குல்வீர் சிங் மற்றும் அவினாஷ் சாமில் களமிறங்குகின்றனர். ஆடவருக்கான 800 மீட்டர் இறுதிப்போட்டியில் முகமது அஃப்சலும், போல் வால்ட் இறுதிப்போட்டியில் தேவ் குமார் மீனா மற்றும் குல்தீப் குமாரும் போட்டியிடுகின்றனர். மேலும், குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகளில் பர்வீன், அங்குஷ் பங்கல் மற்றும் நரேந்தர் ஆகியோர் களமிறங்குகின்றனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் மற்றும் மகளிர் டிராப் போட்டிகளிலும் இந்தியாவுக்குப் பதக்க வாய்ப்புகள் உள்ளன.
from Vikatan Latest news https://ift.tt/WZaQb25
0 Comments