கேரளத்தில் முதியோர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘2026-ம் ஆண்டின் கேரள மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் முதியோர்களைத் தவிர்க்கவோ அல்லது கைவிடவோ திட்டமிட்டு, அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லங்களிலோ அல்லது வேறு ஏதேனும் இடங்களிலோ விட்டுச் செல்வது கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதியோர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் அவர்களின் சொத்துக்களைச் சட்டவிரோதமாக அபகரித்தல் போன்ற குற்றங்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், முதியவர்கள் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு அவர்களை நிர்ப்பந்திக்கும் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கும் குடும்பத்தினரின் மோசமான நடத்தைகளும் இச்சட்டத்தின் கீழ் கொடூரக் குற்றமாகக் கருதப்படும்.
முதியோர்களுக்கு எதிரான வாய்மொழியாகப் பேசி துன்பப்படுத்துதல், கட்டாயக் கட்டுப்பாடுகள், பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, உடல்-மனம், உணர்ச்சி ரீதியான காயங்களை ஏற்படுத்துதல், கண்ணியமாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளை மறுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இச்சட்டத்தின்படி சித்திரவதை என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல், முதியவர்கள் கொடுமைக்கோ அல்லது சுரண்டலுக்கோ ஆளாகியிருப்பதை மருத்துவர்களோ அல்லது பராமரிப்பு மையங்களோ கண்டறிந்தால், அவர்கள் 48 மணி நேரத்திற்குள் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகுந்த காரணமின்றி இத்தகவலை மறைத்தால் அல்லது தெரிவிக்கத் தவறினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், முதியவர்களை ஏமாற்றும் இணையவழிக் குற்றங்களும் கடுமையான சைபர் மோசடியாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டம் வழிவகை செய்கிறது.
சட்டப்பேரவையில் இந்த மசோதா குறித்துப் பேசிய முதலமைச்சர் வி.டி. சதீசன், "கேரள சட்டப்பேரவை பெருமைப்படக்கூடிய ஒரு முன்மாதிரியான சட்டமியற்றல் இது" என்று குறிப்பிட்டார்.
இச்சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தப் பரிந்துரைகளுடன் இந்தச் சட்டம் ஒரு புதிய மைல்கல் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கே.என். பாலகோபால் தெரிவித்தார்.

முதியோர்களின் நலனுக்காகத் தனியாக 'மாநில முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு நிதி' உருவாக்கப்படும். இதில் கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் அடைக்கலம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், அல்சைமர், டிமென்ஷியா, பார்கின்சன்ஸ் உள்ளிட்ட நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கென பிரத்யேகமாக அரசு சார்பில் சிறப்புப் பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் மாநிலத்தின் அனைத்து சைபர் காவல் நிலையங்களிலும் ‘முதியோர் சைபர் பிரிவு’ கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இதுதவிர, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்குக் குறையாத ஒரு காவல் அதிகாரி முதியோர் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்.
மேலும், உரிய அரசுப் பதிவு மற்றும் உரிமம் இன்றி முதியோர் பராமரிப்பு மையங்களை நடத்தினால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
அத்துடன், முதியோர்களுடன் தங்கி அவர்களைப் பராமரிக்கும் பணியாளர்களுக்குக் காவல் துறையின் நடத்தைச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/OTzM4hg
0 Comments