https://gumlet.assettype.com/vikatan/2019-05/1ff60fb8-5808-49fb-afc4-1cec7b8d512b/134358_thumb.jpgநாளை முதல் கோயில்கள்... என்ன செய்யலாம், செய்யக்கூடாது? #TempleGuidelines

நாளை முதல் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக மூடப்பட்ட ஆலயங்கள் சுமார் 5 1/2 மாத இடைவெளிக்குப்பின் திறக்கப்படுகின்றன. ஆலயங்களில் தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜைகள் நடந்துவந்தபோதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் ஆலயம் சென்று வழிபடலாம் என்று நேற்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கோயில்கள்

பொதுவாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அனைத்துமத வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்துகொள்வது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை போன்ற பொதுவான கட்டுப்பாடுகளோடு ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்துக்கும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது. அதன்படி இந்துக் கோயில்களில் பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் சில...

  • 1000 ச.அடி பரப்பளவுள்ள ஆலயங்களில் ஒரு நேரத்தில் 20 பக்தர்கள் மட்டுமே சென்று வழிபட அனுமதி.

  • பெரிய வளாகங்கள் உள்ள கோயில்கள் என்றால் தனிமனித இடைவெளியை, அதாவது ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நிர்வாகம், தரிசனத்துக்கு டோக்கன் முறை அல்லது ஆப்கள் மற்றும் இணையம் மூலம் நேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கலாம்.

  • பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியன சமர்ப்பிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

  • பூஜை மற்றும் அபிஷேகத்தின் போது பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் அங்கு அமர்ந்து தரிசனம் செய்வது கூடாது.

  • சகஜநிலை திரும்பும்வரை விழுந்து வணங்குவது மற்றும் அங்கப்பிரதட்சிணம் ஆகியவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • கோயில்களில் சிற்பங்களைத் தொட்டுவணங்குவது கூடாது.

சமூக இடைவெளி
  • சகஜநிலை திரும்பும்வரை மக்கள் கூடும் திருவிழாக்கள், ஊர்வலங்கள் ஆகியன தடை செய்யப்படுகின்றன.

  • பிரசாத விநியோகம் மற்றும் அன்னதானம் ஆகியன பக்தர்கள் வெளியே கொண்டு சென்று உண்ணும் வகையில் வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பக்தர்கள் ஆலய வளாகத்துக்குள் அமர்ந்து பிரசாதம் உண்ணக்கூடாது.

  • தீர்த்தக் குளத்தை பக்தர்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

  • ஆலய வளாகத்துக்குள் நடக்கும் திருமணங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு திருமணம் மட்டுமே நடத்தப் பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் தனித்தனியான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது. நீண்ட நாள்கள் கழித்து ஆலயம் சென்று வழிபட இருப்பதாலும் நாளை செப்டம்பர் 1-ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருப்பதாலும் பக்தர்கள் ஆலயம் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


from Latest News https://ift.tt/2EFKmZ2

Post a Comment

0 Comments