https://gumlet.assettype.com/vikatan/2020-08/728f6638-b21e-450d-8afa-0e6bedcc00fc/98_h.jpgராகு - கேது பெயர்ச்சி 2020 பொதுப்பலன்கள்: பயனடையும் நட்சத்திரங்கள் இவைதான்!

கிரகப் பெயர்ச்சிகளில் முக்கியமானவை ஆண்டுகிரகங்கள் எனப்படும் குரு, ராகு - கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகளே. இவற்றில் சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறையும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடம் பெயர்வார்கள். சர்ப்ப கிரகங்களான ராகு - கேது பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் கேதுபகவான் தனுர் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்கிறார்கள். இந்தப் பெயர்ச்சிக்கான பொதுப் பலன்களை ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

ராகு - கேது பெயர்ச்சி

“ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்யும் ராகு - கேது, இந்த ஆண்டு வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1-ம் தேதியும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23-ம் தேதியும் பெயர்கிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் ரிஷப ராசியில் இடம் பெயர்ந்து அங்கே நீசமடைகிறார். நீசமடைதல் என்றால் தன் பலத்தை இழத்தல் என்று பொருள்.

பொதுவாக, உங்கள் ஜாதகத்தில் ராகு திசை நடந்தாலோ அல்லது திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரக்காரர்களாக இருந்தாலோ, கேது திசை நடந்தாலோ அல்லது அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களாக இருந்தாலோ உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை வழங்க இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்’ என்பது ஜோதிட சாஸ்திர விதி. பாவ கிரகமான ராகு நீசமடைவதால் மிகப்பெரிய ராஜ யோகம் ஏற்பட உள்ளது.

சொத்துகள் விற்கப்பட்டு அதன் மூலம் பணம் வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு. தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் பாக்கியம் ஆகியன இந்த நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு - கேது தசை நடைபெறுபவர்களுக்கும் நடைபெறும்.

ராகு பெரும் செல்வம் படைத்தவர். அதனால் இந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் விலை கடுமையாக உயரும். நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் கோயில்களிலிருந்த தடைகள் நீங்கி தை மாதம் 2021-க்குப் பிறகு கும்பாபிஷேகங்கள் நடைபெறும். ரிஷப ராசியில் ராகு இருப்பதால் ரிஷப ராசியைச் சேர்ந்த அன்பர்களுக்கு இதுவரை தடைப்பட்டிருந்த திருமண முயற்சிகளுக்கு 2021 தை மாதத்துக்கு மேல் தடைகள் விலகி திருமண வரம் கிடைக்கும். பொதுவாகவே 2021 தை மாதத்துக்குப் பிறகு பொருளாதாரத் தேக்கநிலை மாறும்.

சிவவழிபாடு, உளுந்துப் பொருள்களை தானமாகக் கொடுப்பது ஆகியன சிறந்த பரிகாரங்களாகும். ஆற்றுமண்ணை எடுத்துவந்து அதில் சிவலிங்கம் பிடித்து வில்வார்ச்சனை செய்து வழிபடுவது மிகச்சிறந்த பரிகாரமாகும். தாயின் உடல்நிலை குறித்த கவலை இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கருட வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். கருடபகவானுக்கு இனிப்பு, நெய், பொங்கல் ஆகியன நிவேதனம் செய்து வழிபடுவதன் மூலம் தாயின் ஆரோக்கியப் பிரச்னைகள் தீரும்.

சிவ வழிபாடு

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச

விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம

என்னும் ஸ்லோகத்தை சகல ராசிக்காரர்களும் தினமும் சொல்லிவர இந்த ராகு கேது மிகப்பெரிய நற்பலன்களைக் கொடுப்பதாக அமையும்” என்றார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.



from Latest News https://ift.tt/3gMTw2O

Post a Comment

0 Comments